அருண் நெடுஞ்செழியன்

காலனியாதிக்க காலம் தொட்டு பாஜக வடிவில் இந்துத்துவ சக்திகள் அரசியல் அதிகாரத்தில் செல்வாக்கு செலுத்துகிற கடந்த கால் நூற்றாண்டு காலம் வரையிலும் இவ்வணியினர் ஏகாதிபத்திய நலனுக்கு அடிபொடிகளாகவும் இந்திய முதலாளிவர்க்கத்தின் சேவகர்களாகவும் குட்டி முதலாளி வர்கத்தின் பிரதிநிதியாகவும் இருந்துகொண்டு உழைக்கும் விவசாய, தொழிலாளி வர்க்கத்தின் அணிசேர்க்கைக்கும் ஒற்றுமைக்கும் தடை சக்திகளாக இருந்துவருகின்றனர்.
இந்துத்துவ பாசிசத்தின் இயக்கப் போக்கை நெருங்கி ச்சென்று பார்த்தோமானால் ஒரு உண்மை புலப்படும். அதாவது வெளித்தோற்றத்தில் சட்டபூர்வ வடிவில், அரசியல் சாசன சட்ட வரம்பிற்கு உட்பட்ட வகையில் தனது அரசியல் முன்னணி படையான பாஜக கட்சியின் மூலமாக தேர்தலில் பங்கேற்று வெற்றி பெற்று நிழல் அரசாக ஆர் .எஸ். எஸ். ஆட்சி செலுத்துகிறது.
பாஜகவின் அரசியல் சக்திகள் ஆர். எஸ். எஸ். அமைப்பின் கருக் குழுவிலிருந்து உற்பத்தி செய்து அனுப்பபடுகின்றனர். இஸ்லாம் எதிர்ப்பு, இந்து ராஷ்ட்ரம், நால் வர்ண கோட்பாடு என மானுட குரோத மூட நாசாகர கருத்தியல்கள் அனைத்தும் மண்டையில் ஏற்றப்பட்டு முழு நேர ஊழியராக, பிரச்சாரகராக பிராய்லர் கோழி போல தயாரித்து சமூகத்திற்கு அனுப்பப்படுகின்றனர்.
குஜராத்தின் முதல்வராக பொறுப்பிற்கு வருவதற்கு முன்பாக மோடி என்ற மனிதரின் ஆயுளில் அரை பங்கு வாழ்க்கையும் சிந்தனையும் ஆர். எஸ். எஸ். அமைப்பால் உருவாக்கம் செய்யப்பட்டதே!
இவ்வாறு அரை ரகசிய அமைப்பான ஆர். எஸ் .எஸ். பிற்போக்கு முகாமில் இருந்து வெளிப்படையான வெகுஜன அரசியலில் பங்கேற்று அரசியல் அதிகாரத்திற்கு வருகிற இந்த சக்திகள், சட்டப்பூர்வ வடிவில் தனது மத பிற்போக்குவாத இலக்குகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுகிறது. எருது, காளைகள், ஒட்டகங்கள், பசுக்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதை தடுக்கிற சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது அதன் ஒரு பகுதி. அதன் இலக்கோ சமூகத்தை கலாச்சார ரீதியிலும் சிந்தனை ரீதியிலும் இந்துத்துப்படுத்துவதே! அவ்வாறு செய்வதில் அது வெற்றி பெற்றால், அடுத்த அரை நூற்றாண்டு காலத்திற்கு அரசியல் தலைமையில் மிக எளிதாக அமர முடியும்.
அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.