இக்பால் அகமது
வெறும் மாட்டுக்கறி விசயமாக மட்டுமே குறுக்கிப்பார்ப்பது சரியா? நாடாளுமன்றத்தேர்தலை நோக்கி திட்டமிட்டு செல்கின்றது ஆர் எஸ் எஸ்:
1) பாதுகாப்புத்துறையில் பெரும் கார்ப்பொரேட்டுக்களை அனுமதிப்பதற்கான வேலைகள் முடிந்துவிட்டன, அதாவது ஆயுத தளவாடங்களை அரசு விஞ்ஞானிகள் டிசைன் செய்து அவற்றை பெரும் கார்பொரேட் நிறுவனங்களிடம் காண்ட்ராக்ட் கொடுத்து செய்து வாங்குவது என்ற நிலையில் இருந்து முற்றிலும் மாறி, அதாவது அப்பொறுப்பைக் கைகழுவி, இனிமேல் டாடா, ரிலையன்ஸ் அம்பானி, எல் அண்ட் டி, மஹிந்திரா போன்ற பெருமுதலாளிகளிடமே ஆயுத தளவாடங்களை டிசைன் செய்தும் உற்பத்தி செய்தும் வாங்குவது என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்துவிட்டது.
இதன் பொருளைப் புரிந்து கொள்வது அவசியம்: உலகின் மிகப்பெரும் கார்பொரேட் வணிகமாக இருப்பது ஆயுத உற்பத்தி-விற்பனையும் அலோபதி மருந்துகள் உற்பத்தி-விற்பனையும்தான். மருந்துகள் தொடர்ந்து விற்பனை ஆக வேண்டுமெனில் நோய்ப்பரவல் நிரந்தரமாக இருப்பது எப்படியோ அவ்வாறே ஆயுதவிற்பனை தொடர்ந்து நடக்கவேண்டும் எனில் மூன்றாம் உலக நாடுகளுக்கு இடையில் போர்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்க வேண்டும். முதலாம் உலகப்போருக்குப் பின்பும் இரண்டாம் உலகப்போருக்குப் பின்பும் உலக அரசியல் நமக்குச் சொல்வது இதுதான்.
அதாவது டாடா, ரிலையன்ஸ் அம்பானி, எல் அண்ட் டி, மஹிந்திரா போன்ற பெருமுதலாளிகளின் ஆயுத தளவாட விற்பனை அமோகமாக நடக்கவேண்டும் எனில் இந்தியா எந்த நாட்டுடன் ஒரு போரை நடத்திக்கொண்டே இருக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்வது மூளையைக் கசக்கும் பெரும்புதிரல்ல – அதாவது ஒரு கெடுபிடிப்போரை நடத்திக்கொண்டே தேசப்பாதுகாப்பு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தில் இந்திய அரசு தொடர்ந்து இந்த முதலாளிகளிடம் இருந்து ஆயுதங்களை வாங்கிக் குவித்துக்கொண்டே இருக்கும்.
இதனை நியாயப்படுத்தும் பொருட்டு உள்நாட்டில் இஸ்லாமிய மக்களை தேசவிரோதிகளாக சித்தரிக்கின்ற, வலதுசாரி இந்துத்துவா தேசியவாதத்தின் பெயரால் மதக்கலவரங்களை இன்னும் அதிக அளவில் தூண்டிவிட்டு மோதல்களை உருவாக்குகின்ற திட்டமிட்ட வேலைகளை வலதுசாரி இந்துத்துவா சக்திகள் தொடர்ந்து தீவிரப்படுத்தும். (இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட ஆட்கொல்லிரசாயன மருந்துகள் 1945இல் போர் முடியும்போது பல லட்சம் டன்கள் மிச்சமாகிவிட, பெருமுதலாளிகள் அவற்றை அழிப்பதற்குப் பதிலாக அவற்றின் வீரியத்தைக் குறைத்துப் பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற பெயரில் மூன்றாம் உலகநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொள்ளையடித்தார்கள், மூன்றாம் உலகநாடுகளின் மண்வளம் பாழானதில் இம்மருந்துகள் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன).
2) தேர்தல் நெருங்கும் நேரத்தில் மேற்கில் ஒரு போர், அதாவது இரண்டாவது கார்கிலாக இருக்கலாம். தேவைப்பட்டால் புத்தர் மூன்றாம் முறையாக சிரிப்பார், பொக்ரான்-3 நடத்தப்படலாம். இவற்றின் பொருட்டு ஏற்கனவே மேலே சொன்னபடி போலி தேசியவாதப் பெருங்கூச்சல் வெறியுடன் கிளப்பிவிடப்படும்.
3) தேர்தலுக்கு ஒரு சில மாதங்கள் உள்ள நிலையில் உ.பி.யில் ராமர் கோவில் பிரச்னை கிளப்பிவிடப்படும்; அதற்கு வசதியாக அங்கே ஏற்கனவே பிஜேபி அதிகாரத்தில் உள்ளது, எனவே ஜனநாயக சக்திகளும் இடதுசாரிகளும் சிறுபான்மை சமூகமும் கொடுந்தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும். உச்சநீதிமன்றம் இந்த நாட்டின் சட்டதிட்டங்களுக்கு ஒப்ப இவ்வழக்கை விசாரித்து தீர்ப்புச்சொல்வதை விடுத்து சம்பந்தப்பட்ட பார்ட்டிகள் கட்டப்பஞ்சாயத்து செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்துவதை தற்செயலான ஒன்று என்று தள்ளிவிட முடியாது.
4) இந்துமத மக்களின் வாக்கை ஒட்டுமொத்தமாக அள்ளும் தந்திரமாக போலிதேசியவாத போலிதேசபக்தி அடையாள அரசியலின் ஒரு பகுதியாக பசுமாட்டை முன்னிறுத்துகின்ற ஆர் எஸ் எஸ் அஜெண்டா குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேஷ், உத்திர்பிரதேஷ், அரியானா மாநிலங்களில் பெருமளவுக்கு வெற்றிபெற்றுவிட்டதை ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த அஜெண்டாவின் வெற்றியானது வெறும் ‘பசு நமது தெய்வம்’ என்ற வெற்றுப் பிரச்சாரத்தை இந்துமத மக்கள் மத்தியில் செய்வதன் மூலம் மட்டுமே கிட்டிவிடாது; ‘நமது தெய்வமான பசுவை ஏற்கனவே தேசவிரோதிகளாக இருக்கின்ற இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கின்றார்கள்’ என்ற அப்பட்டமான மதவெறிப் பிரச்சாரத்தின் மூலம் மட்டுமே இந்த வெற்றியை ஆர். எஸ். எஸ்.+பிஜேபி அடைந்துள்ளது. நாடாளுமன்றத்தேர்தல் நெருங்க நெருங்க இந்த வெறிப் பிரச்சாரம் இன்னும் தீவிரப்படுத்தப்படும்.