மத்திய சுற்றுச்சூழல் துறை கால்நடை விற்பனைக்குப் பல கெடுபிடிகளை விதித்துப் பிறப்பித்துள்ள அறிவிக்கை தொடர்பாக தமுஎகச மாநிலத் தலைவர் ச. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர் சு. வெங்கடேசன் சனிக்கிழமையன்று (மே 27) வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
இந்தித் திணிப்பு உள்ளிட்ட மத்திய அரசின் பண்பாட்டுச் சர்வாதிகார நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாகவும், ஏற்கெனவே பாஜக ஆளும் சில மாநிலங்களில் உள்ள இறைச்சி உணவுப் பழக்கத்திற்கு எதிரான விதிகளின் விரிவாக்கமாகவும் நாடு முழுவதற்குமான அறிவிக்கை மூலம் கால்நடை விற்பனைக்கான கெடுபிடிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. நேரடியாக இது பசுக்கள், காளைகள், கிடாரிகள், கன்றுகள், எருமைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை சந்தைகளில் இறைச்சி நோக்கத்திற்காக விற்கவோ வாங்கவோ கூடாது என்று தடை விதிக்கிறது.
விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளைக் கட்டுப்படுத்துகிற நடவடிக்கையாக மத்திய ஆட்சியாளர்கள் கூறிக்கொண்டாலும் இது குறிப்பாக சிறுபான்மை மதத்தினர், பெரும்பான்மை மதத்திற்கு உள்ளேயே மாட்டிறைச்சி உண்போர் ஆகியோரின் உணவுப் பழக்கத்திற்கு எதிரான தாக்குதலேயாகும். பொதுவிவாதங்களில், மாட்டிறைச்சியை அல்ல, பசுக்கறியை மட்டுமே எதிர்ப்பதாகக் கூறி வந்த மத்திய ஆளுங்கட்சியினர் இப்போது அனைத்துவகை மாடுகளையும் இறைச்சிக்காக விற்கக்கூடாது என்ற கட்டளைக்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்கள்? இதில் ஒட்டக விற்பனையும் சேர்க்கப்பட்டிருப்பது, சிறுபான்மை மதத்தினரில் ஒட்டக இறைச்சி உண்ணும் ஒரு பிரிவினரைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதலே என்பதை விளக்க வேண்டியதில்லை.
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டல்படி இந்த அறிவிக்கை என்று கூறிக்கொள்கிறார்கள். உச்சநீதிமன்றம் கால்நடைகள் சட்டத்திற்குப் புறம்பாகக் கடத்தப்படுவதைத் தடுக்கத்தான் நடவடிக்கை எடுக்கக் கூறியது. பாஜக அரசோ அதைச் சாக்கிட்டு தனது பண்பாட்டு வன்முறை அரசியலுக்கு சாதகமாக்கிக்கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றமே கூட, வழிபாடு சார்ந்த நிகழ்ச்சிகளில் கால்நடைகளைப் பலியிடுவதற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. ஆனால், மோடி அரசின் அறிவிக்கையிலோ, வழிபாட்டுப் பலிக்காகவும் இந்த விலங்குகளை விற்கவோ வாங்கவோ கூடாது என்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் முன்பு கோவில்களில் ஆடுகோழி விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டதும், அதே போன்ற சட்டம் நாடு முழுவதும் வர வேண்டும் என்று அப்போது சங் பரிவாரத்தினர் சொல்லிவந்ததும் நினைவுகூரத்தக்கது. அந்த நடவடிக்கைக்காகவே அப்போதைய அஇஅதிமுக அரசு அடுத்த சட்டமன்றத்தேர்தலில் மக்களின் தண்டனையைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த மோசமான தடையின் இன்னொரு வடிவம்தான் இப்போது மத்திய அரசின் அறிவிக்கை.
இது ஒரு புறம் கால்நடை விற்பனையைச் சார்ந்தும் அமைந்துள்ள விவசாயிகளின் வாழ்வதாரத்தைச் சீர்குலைக்கிறது. இறைச்சித் தொழிலோடு தொடர்புள்ள லட்சக்கணக்கானோரின் பிழைப்பிலும் மண்ணள்ளிப் போடுகிறது. இந்தத் தடை உண்மையில் விலங்குகள் மீதான பரிவிலிருந்து வந்ததல்ல, ஆர்எஸ்எஸ்-பாஜக கும்பலின் ஒற்றைக் கலாச்சார ஆக்கிரமிப்புக் கொள்கையிலிருந்து வந்ததே. இது பெரும்பான்மை மதத்தின் கலாச்சாரத்தை சிறுபான்மை மதத்தினர் மீது திணிப்பது மட்டுமல்ல, பெரும்பான்மை மதத்திலும் குறிப்பிட்ட சில சமூகங்களின் நம்பிக்கைகளை எல்லோர் மீதும் ஏற்றுகிற அத்துமீறலுமாகும்.
தனது மூன்றாண்டு ஆட்சியில் மக்களுக்குப் பயனளிக்கும் சாதனை என்று எதையும் விளம்பரப்படுத்த முடியாத பாஜக அரசு, மக்களின் கோபத்தைத் திசை திருப்பும் இழிவான செய்கையாகவே, நாடு தழுவிய சர்ச்சைக்குள் இழுத்துவிடுகிற இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. வெளி மாநிலங்களுக்கும் வெளி நாடுகளுக்கும் கடத்தப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கை கூறுகிறது. இது, கலாச்சார அடியாட்கள் எளிய விவசாயிகள், விற்பனையாளர்கள், இறைச்சிக் கடை நடத்துவோர், இறைச்சி உண்போர் ஆகியோர் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடவே இட்டுச் செல்லும். இப்படிப்பட்ட கலவரங்களைக் கிளறிவிட்டு, தனது அரசியல் நோக்கங்களுக்குத் தோதாக மாற்றி அதிகார அறுவடையைத் தொடர்வதற்கே ஆர்எஸ்எஸ் இலக்குப்படி பாஜக அரசு இதைக் கொண்டுவந்துள்ளது.
கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு உள்பட நாடு தழுவிய எதிர்ப்புக் குரல் எழுந்துள்ள நிலையில், தமிழக அரசும் ஆளுங்கட்சியும் இதில் மவுனம் காப்பது சரியல்ல. வைதீக மரபு ஆதிக்கங்களுக்கு எதிராகப் போராடி வந்திருக்கிற நெடிய மரபின் வழியில் நின்று தமிழக அரசும் இந்தத் தாக்குதலை உறுதியாக எதிர்க்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் மக்கள் மீது வலிந்து திணிக்கப்படும் இந்தப் பண்பாட்டு ஒடுக்குமுறையை தமுஎகச வன்மையாகக் கண்டிக்கிறது. ஒருமைப்பாட்டின் அடிப்படையாகிய பன்முகப் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்க அனைத்து மக்கள் இயக்கங்களும் பண்பாட்டு அமைப்புகளும் வலுவான போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.
அரசாங்கத்தின் இந் நடவடிக்கையை ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பு என்று வறயறுப்பதன் மூலம், இவ் அடக்குமுறையை நீத்துப்போகச் செய்கிறோம். மாறாக இது ஒரு பொருளாதார அடக்குமுறையாக இனங்காண்பதே பொருத்தமானது. இந்தியாவெங்கணும் உள்ள அனைத்து விவசாய்களும் பாதிக்கப்படப்போகிறார்கள். கோடிக்கணக்கான நடுத்தர வறிய விவசாயிகளும், இவ் இறைச்சியை பதப்படுத்தும், சந்தைப்படுத்தும் சிறு உற்பத்தியாளர்களும் வர்த்தகர்களும் பாதிக்கப்படவுள்ளார்கள். பல் இலட்சக்கணக்கான தோல் பொருள் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படவுள்ளார்கள். இவ் அடக்குமுறையை பண்பாடென்னும் சிமிழுக்குள் அடக்குவது இதன் கொடுரத்தை நீத்துப்போகச் செய்வதாகவே அமையும்.
அடுத்ததாக தமிழ் பண்பாடு தனிநபர் உணவுசுதந்திரத்தை ஏற்றுக்கொண்டதா என்ன? உயர் சைவ உணவகம் எனும் பதம் எந்தப்பண்பாட்டிற்குரியது? புலாலை மறுத்தானை எல்லாஉயிரும் கைகூப்பித் தொழும் என்பது தமிழன் பண்பாடில்லையா? போதும்.
பண்டி இறைச்சியை ஹராம்(தீட்டு) எனக் கூறியது ஆரியப்பண்பாடா? பன்றி இறைச்சி தின்னும் உரிமையை மறுப்பது தனிநபரின் உணவுரிமையை மறுப்பதாகாதா? அனைத்துத் தொன்மைப்பண்பாட்டிலும் தீயமசமும் உள்ளன நல்லம்சமும் உள்ளன.
ஒரு தேசிய இனம் நடத்தும் அரசியல் போராட்டமென்பது அரசியல் எதிரிகளுக்கு எதிரானது. பண்பாட்டுப் புரட்சியென்பது தனது தொன்மைப்பண்பாட்டிற்கும் எதிரானது, ஆக்கிரமிப்புப் பண்பாடுகளுக்கும் எதிரானது. எமது தவறான பண்பாட்டுக் கூறூகளுக்கு எதிராகவும் நாம் போராடவேண்டும்.
LikeLike