த. கலையரசன்
சீமான் போன்றோர் பேசுவது தேசியவாதம் அல்ல. அது வெறும் இனவாதம்.
தேசியவாதத்திற்கும் இனவாதத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது.
தேசியவாதம் ஜனநாயகத் தன்மை கொண்டது. அது எல்லோரையும் அரவணைத்து செல்லும். பிற இன மக்களின் தேசியங்களுக்கு மரியாதை கொடுக்கும். லிபரலிசம் முதல் மார்க்சியம் வரை எல்லா வகையான கொள்கைகளையும் உள்வாங்கிக் கொள்ளும்.
ஒரு தனிநபர் தனது தேசிய அடையாளத்தை மாற்றிக் கொள்ள தேசியவாதம் அனுமதிக்கும். ஆனால், இனவாதம் அதை எதிர்க்கும். உதாரணத்திற்கு, “தெலுங்கு” கருணாநிதியும், “கன்னட” ஜெயலலிதாவும் தமிழராக அடையாளப் படுத்திக் கொள்வதற்கு தமிழ்த் தேசியம் வழி அமைத்துக் கொடுக்கிறது.
தமிழ் நாட்டில் ஏற்கனவே தமிழ்த் தேசியம் நடைமுறையில் உள்ளது. அதாவது சட்டசபையில் தமிழில் தான் விவாதங்கள் நடக்கின்றன. முதலமைச்சரும் சரளமாக தமிழ் பேசுகிறவர் தான்.
ஆனால், முதலமைச்சர் பிறப்பால் தமிழராக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இனவாதம். அது தேசியவாதம் ஆகாது. தமிழ்நாடு தனியாக பிரிய வேண்டும் என்று சொல்லத் தைரியம் அற்றவர்கள் தான் முதலமைச்சர் தமிழராக இருக்க வேண்டும் என்று மக்களை ஏமாற்றுகிறார்கள்.
உலக வரலாற்றில் முதன்முதலாக பிரான்ஸில் தான் தேசியவாதம் அரசமைத்தது. அந்த நாட்டில் ஜனாதிபதியாக இருந்த சார்கோஸி பிறப்பால் ஹங்கேரியர். அவர் பிரான்ஸில் பிறக்கவுமில்லை. சிறு வயதில் பெற்றோருடன் அகதியாக புலம்பெயர்ந்தவர். இருந்தாலும் பிரெஞ்சு மக்கள் அவரை ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டார்கள்.
பிரான்ஸில் யாரும் சார்கோஸியை “ஹங்கேரிய வந்தேறி” என்று ஒதுக்கவில்லை. அது தான் தேசியவாதம். தூய்மையான பிரெஞ்சுக் காரன் மட்டுமே ஜனாதிபதியாகலாம் என்ற சட்டம் இருந்திருந்தால், சார்கோஸி பிரெஞ்சு ஜனாதிபதியாக வந்திருக்க முடியுமா?
ஆகையினால், தமிழ்ச் சூழலில் இனவாதத்தை கவனமாக தவிர்க்க வேண்டிய கடமை தமக்கு இருப்பதை உண்மையான தமிழ்த் தேசியவாதிகள் உணர்வதாக தெரியவில்லை.
தம் மத்தியில் உள்ள இனவாதிகளை இனம் கண்டு ஒதுக்க வேண்டியது அவர்களது கடமை. இல்லாவிட்டால், இந்த மெத்தனப் போக்கு இறுதியில் அவர்களுக்கே குழிபறிக்கும். இதை உணராமல் இருக்கின்றனர்.
தேசியவாதம் என்பதும் 19ம் நூற்றாண்டில் எழுந்த புதிய அரசியல் கோட்பாடு தான். தேசியவாதிகள் முதலில் ஒரு தேசியத்தை கட்டமைக்கின்றனர். தமக்கென மொழி, பிரதேசம், வரலாறு போன்றவற்றை வரையறுக்கின்றனர்.
தேசியவாதம் கூறும் வரலாற்றுக் கதைகள் முழுக்க முழுக்க சரியானதாக இருக்காது. கற்பனையும் கலந்திருக்கும். அதாவது, விஞ்ஞானபூர்வமானது அல்ல. ஆனால், அதைப் பற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை.
பொதுவாக தேசியவாதிகள் முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்கு காரணம் உண்டு. அப்போது தான் தேசிய முதலாளிகளின் ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அது தேசியவாத அரசியல் நடத்துவோரின் நிதித் தேவையை பூர்த்தி செய்யலாம். ஆனால், சமூகத்தில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது.
அதற்காக, தேசியவாதம் எப்போதும் முதலாளித்துவத்திற்கு ஆதரவானது, அல்லது வலதுசாரித் தனமானது என்று அர்த்தம் அல்ல. இடதுசாரி தேசியவாதமும் உலகில் இருக்கிறது.
உதாரணத்திற்கு, அல்ஜீரிய விடுதலைப் போராட்டம் இடதுசாரி- தேசியவாதிகளால் வழிநடாத்தப் பட்டது. ஐரிஷ், பாஸ்க், குர்திய தேசியவாதிகளும் இடதுசாரிகளாக இருந்தனர். அதே போல, வட கொரியாவும் இடதுசாரி தன்மை கொண்ட தீவிர தேசியவாத நாடு தான்.
த. கலையரசன்,சமூக அரசியல் விமர்சகர்; எழுத்தாளர். இவருடைய வலைப்பூ கலையகம்.