கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயம் தேடித்தரும் முகமையாக மோடி அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“நாடுமுழுவதும் பசு, மாடு, காளை, எருது, கன்றுகள் ஆகியவற்றை இறைச்சிக்காக விற்பனை செய்ய தடைவிதித்தும், விவசாயப் பணிகளுக்கும், வளர்ப்புக்கும் கால்நடைகளை விற்பனை செய்ய கடுமையான நிபந்தனை விதித்தும் மோடியின் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மக்கள் விரோத, ஜனநாயக விரோத உத்தரவை உடனடியாக திரும்பப் பெறுமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. 31 சதவீத வாக்காளர்களின் ஆதரவைப் பெற்ற மோடியின் மத்திய அரசு எதிர்தரப்பே இல்லை என்ற தன்னகங்காரத்தோடு ஜனநாயக நெறிமுறைகளை நிராகரித்தும், அமைப்புகளை சீர்குலைத்தும் சர்வாதிகார முறையில் செயல்பட்டுவருகிறது. விவசாயத்தையும், விவசாயிகளையும் வஞ்சித்து வரும் மோடி அரசு – டிஜிட்டல் இந்தியா| என்பதன் பெயரால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் ஆதாயம் தேடித்தரும் முகமையாக செயல்படுகிறது.
மனித உரிமைகளுக்கு உத்தரவாதம் அளித்துள்ள அரசியல் அமைப்பு சட்ட பாதுகாப்பு வளையம் உடைத்து நொறுக்கப்படுகிறது. என்ன சாப்பிட வேண்டும்? என்ன பேச வேண்டும்? என்ன எழுத வேண்டும்? எப்படி சிந்திக்க வேண்டும் என எல்லாவற்றையும் ஷஇந்துத்துவா| சக்திகளே தீர்மானிக்கும் ஏதேச்சதிகார உச்சத்திற்கு மோடி அரசு சென்றிருக்கிறது. நாட்டின் மக்கள் தொகையை சரிபாதிக்கும் அதிகமானோர் மாட்டின் இறைச்சியை சாப்பிடும் பழக்கம் உடையவர்கள். இவர்கள் சமுகத்தின் அடித்தட்டு மக்களாக ஒடுக்கப்பட்டும் மதச்சிறுபான்மையினராக ஒதுக்கப்பட்டும் வருவது நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் உருவான மதசார்பின்மை கொள்கைக்கும் வேற்றுமையில் ஒற்றுமைக்காணும் பண்புக்கும் எதிரான சகிப்புத்தன்மையற்ற குரூர நடவடிக்கையாகும். கால்நடைகளை சந்தையில் விற்கவும், வாங்கவும் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கால்நடைபற்றி விபரக்குறிப்பு, கால்நடைதுறையின் அனுமதி என விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு விடப்பட்டுள்ள சவாலாகும். மோடி அரசின் மக்கள் விரோதச் செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், மாவட்ட, வட்ட, ஒன்றிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுமாறு கட்சி அமைப்புகளையும், ஜனநாயக சக்திகளையும் கேட்டுக் கொள்கிறது என அழைப்பு விடுத்துள்ளார்.