”ஷோபா சக்தியை கண்டால் முகத்தை திருப்பிக் கொள்வேன்”: சாரு நிவேதிதா

எழுத்தாளர் ஷோபா சக்தி தனது முகநூலில் எழுத்தாளர் சாரு நிவேதிதா குறித்து பதிவொன்றை எழுதியிருந்தார். “.இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ’ அதுபோலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்துகொள்ளுங்கள்” என எழுதியிருந்த ஷோபா சக்தியின் பதிவுக்கு சாரு நிவேதிதா தனது வலை தளத்தில் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார்.

முதலில் ஷோபா சக்தியின் பதிவை முழுமையாக படிக்கவும்:

நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது எனக்கு 30 வயது. சாரு நிவேதிதாவுக்கு 44 வயது. கண்ட நாள் முதல் நெருக்கமாகிவிட்டோம். அப்போதெல்லாம் சாரு எனக்கு நீளமாகக் கடிதங்கள் எழுதுவார். என் மகனைப் போல நீயிருக்கிறாய், என்னை இருபது வருடத்திற்கு முன்பு பார்த்ததுபோலவே இருக்கிறாய் என்று கடிதத்திலும் ‘சிறுகதையில் ஷோபாவை அடித்துக்கொள்ள ஆளில்லை’ என்று பத்திரிகைகளிலும் எழுதுவார். “கொரில்லா“ இனவாத நாவல், தகவல் தொகுப்பு எனச் சாடினாலும் மற்றப்படிக்கு பல்வாறு என் கதைகளை புகழ்ந்திருக்கிறார்.. எனது கடைசிக் கதை ‘காயா’வைக் கூட ‘அற்புதமான கதை’ எனச் சொல்லி தனது தளத்தில் தொடுப்புக் கொடுத்திருந்தார்.

சாருவின் எழுத்து நடை, எனக்கான நடையை நான் கண்டறிய உந்துதல் தந்தவற்றிலொன்று. எனக்கு சாருவோடு எப்போதும் நட்பிருக்கும். அ. மார்க்ஸ் ‘என்னயிருந்தாலும் சாரு  நம்ம ஆளு’ என்பார். சாரு மென்று முழுங்கி மோடி, சோ, இப்போது ரஜினிகாந்த் பற்றி உளறுவதையிட்டெல்லாம் நாம் பெரிதாகக் கவலைப்படத் தேவையில்லை. கண்டிப்பாக அவரே அவற்றை சில நாட்களில் கடுமையாக மறுத்துவிடுவார். ஒரு படத்தில் ” கட்சி மாறுவதால் என்னை கோழையென்று நினைத்துவிடாதீர்கள், இருக்கின்ற கட்சியிலேயே இருக்கின்ற மேடையிலேயே இன்னொரு கட்சிக்குத் தாவுகிற தைரியம் இந்தியாவிலேயே எனக்கொருவனுக்குத்தான் உண்டு’ என்பாரே வடிவேலு, அதுபோல அண்மையில் ஒரு தொலைக்காட்சி விவாதத்தில் ‘ரஜினி அரசியலுக்கு வர வேண்டும்’ என ஆரம்பித்த சாரு அய்ந்தாவது நிமிடமே ‘கூலா’க தன்னை மறுத்துப் பேச ஆரம்பித்துவிட்டார்.

சரி..நான் பொது நன்மை கருதி சொல்ல வந்த விசயத்துக்கு வருகிறேன். சாரு என்னை எப்படியெல்லாமோ விதந்தும் புகழ்ந்தும் பேசிவந்தபோதெல்லாம் ‘அதெல்லாம் சும்மா அடிச்சுவிடுகிறார்..இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்ற புரிதலோடு எப்படி நான் இருந்தேனோ’ அதுபோலவே இப்போது சாருவால் பாராட்டப்படும் இளைஞர்களும் இருந்துகொள்ளுங்கள். அதுவே இலக்கிய ஈடேற்ற வழி.

எழுத்தாளர் ஷோபா சக்தி மற்றும் எழுத்தாளர் சாரு நிவேதிதா

மேற்கண்ட பதிவுக்கு சாருவின் பதில்:

ஷோபா சக்தி என்னை ஃப்ரான்ஸுக்கு வரவழைத்தவர்.  அதற்காக செலவு செய்தவர்.  நான் ஃப்ரான்ஸிலிருந்து திரும்பி வந்ததும் கொரில்லா நாவல் வெளி வந்தது.  அதன் வெளியீட்டு விழாவில் என்னைப் பேச அழைத்தார் ஷோபா சக்தி.  அதாவது, என்னை பாரிஸ் வரவழைத்த ஷோபா சக்தி.  என் ஃப்ரான்ஸ் பயணத்துக்காக செலவு செய்த ஷோபா சக்தி.  நான் அந்த மேடையில் “இது நாவலே அல்ல; ஒரு வன்முறைப் போராட்டத்தை அதன் வரலாற்றுத்தன்மையைப் புரிந்து கொள்ளாமல் வெறும் ஊழல் என்று கொச்சைப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது; இது நாவலே அல்ல; வெறும் ஒரு டயரி” என்று பேசினேன்.  அதில் வரும் நாயகன் விடுதலைப் புலி அமைப்பிலிருந்து விலகுவதன் காரணம், அந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஆற்று மணலைத் திருடி விற்கிறார் என்பதுதான். இதுதான் அ. மார்க்ஸுக்கும் எனக்கும் நடந்த மிக மோசமான சண்டைகளுக்கும் காரணம்.  நான் அ.மா. கட்சியில் கட்சி விசுவாசத்தோடு இருந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தார்கள் அ.மா.வும் ஷோபாவும்.  அதை நான் செய்யவில்லை.  அதிலிருந்துதான் நான் அவர்களுக்கு விரோதமாகப் போனேன்.

கொரில்லாவுக்குப் பிறகு வந்த ”ம்” நாவலும் பிறகு வந்த பல கதைகளும் வெறும் இனவாதத்தைப் பேசியதால் அவரோடு நான் முற்றாக என் நட்பைத் துண்டித்து விட்டேன்.  மேலும், அவர் சிங்கள அரசின் ஏஜெண்ட் என்றும் குற்றச்சாட்டு இருந்தது, இருந்து கொண்டிருக்கிறது.  அகதி என்ற போர்வையில் உலகம் சுற்றும் வாலிபனாக வாழும் அவர் ஒரு ஹலோ சொல்வதற்குக் கூட லாயக்கில்லாதவர் என்பதை உணர்ந்ததால்தான் கடந்த பதினைந்து ஆண்டுகளாக அவரோடு நான் நட்பு பாராட்டுவதில்லை.  அவர் சென்னை வரும் போது என்னை எங்காவது புத்தக விழாக்களில் பார்த்து சாப்பிட அழைத்தால் கூட மறுத்து விடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.  அப்படிப்பட்ட என்னோடு அவர் நட்பு பாராட்டுவதாகக் கூறியிருக்கிறார்.  இதுவரை பெருந்தன்மையைக் கடைப்பிடித்து வந்தேன்.  அதனால்தான் அவர் ஹலோ சொல்லும் போது அன்புடன் தழுவிக் கொண்டேன்.  ஆனால் என் பெருந்தன்மையை என் பலகீனமாகப் புரிந்து கொள்கிறார் அவர்.  அதனால் இனிமேல் அவரைக் கண்டால் முகத்தைத் திருப்பிக் கொள்வதைத் தவிர வேறு எனக்கு வழியில்லை.

மேலும் மோடி ஆதரவு பற்றி.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை எதிர்த்து அவர் ஒருவர்தான் இருந்தார்.  காங்கிரஸ் இந்த நாட்டைக் குட்டிச்சுவராக்கி இருந்தது.  சோனியா வந்தால் இந்த நாடே இத்தாலிக்கு அடகு வைக்கப்பட்டிருக்கும்.  சோனியாவின் குடும்ப உறுப்பினர்கள் மகாராஜாக்களைப் போல் உலா வந்தார்கள்.  அவர்களுக்கு விமான நிலையத்தில் கூட பாதுகாப்புச் சோதனைகள் கிடையாது.  இப்படிப்பட்ட கேவலமான நிலையில் மோடியை ஆதரிப்பதைத் தவிர ஒரு சராசரி இந்தியனுக்கு வேறு வழியே இல்லை.  எனக்கும் அப்படித்தான் இருந்தது.  ஆனால் இப்போதைய மோடியின் ஃபாஸிஸப் போக்கைப் பார்க்கும் போது இத்தாலிய மாஃபியா கும்பலே தேவலாம் போல் இருக்கிறது.  ஏனென்றால், அவர்கள் கொள்ளை அடித்தாலும் ஃபாஸிஸம் இல்லாமல் இருந்ததே?

ரஜினி அரசியலுக்கு வருவதை ஆதரிப்பதில் என்ன தவறு இருக்கிறது?  டிடிவி தினகரன், சசிகலா போன்ற கிரிமினல்கள் ஆளும் போது ரஜினியும் அவர் ரசிகர்களும் ஆண்டால் என்ன தவறு?  நான் ஒரு புத்திஜீவியாக நல்லக்கண்ணுவைத்தான் ஆதரிப்பேன்.  ஆனால் நல்லக்கண்ணுவை யாருக்குத் தெரியும்?  அப்படியே ஏதோ ஒரு அரசியல் விபத்து நடந்து நல்லக்கண்ணு தமிழக முதல்வராக ஆனாலும் அவர் சார்ந்திருக்கும் கட்சியினர் எப்படி இருப்பார்கள்?  அதிகாரிகள் எப்படி இருப்பார்கள்?  மத்தியில் இத்தாலிய மாஃபியா அல்லது மோடி ஃபாசிசம்.  தமிழகத்தில் மன்னார்குடி மாஃபியா அல்லது ஊழல் திமுக.  இதுதான் தமிழனின் தலைவிதி.  அதனால்தான் ரஜினி வர வேண்டும் என்றேன்.  ஆஹா பெரிய புரட்சி வந்து விடும் என்று அல்ல.  ஒரு விரக்தி நிலை.  எல்லா கட்சியிலும் உள்ள தொண்டன் தான் ரஜினி ரசிகனும்.  ரஜினி ரசிகனுக்கும் திமுக அதிமுக தொண்டனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.  கேரளாவைப் போன்ற அரசியல் அறிவு ஒரு சராசரி மனிதனுக்கு வாசிப்பின் மூலமே ஏற்படும். அது ஏற்படுவதற்கான சாத்தியம் தமிழ்நாட்டில் இல்லை.  அதுவரை ரஜினியை ஆதரிக்கத்தான் வேண்டும்.  ரஜினி வந்தால் பெரிய பெரிய கோமாளித்தனமெல்லாம் நடக்கும்.  அதையும் விமர்சிப்பேன். ஷோபாவைப் போல் இருட்டில் ராஜபக்‌ஷே ஆதரவும் வெளிச்சத்தில் முற்போக்கு முகமூடியும் அணிந்து திரிய மாட்டேன் நான்.

’இலக்கிய விமர்சனத்திலோ இலக்கிய மதிப்பீட்டிலோ சாருவுக்கு எந்த இடமும் கிடையாது’ என்று அருளியிருக்கிறார் ஷோபா.  இலக்கியத்திலேயே சாருவுக்கு எந்த இடமும் கிடையாது என்று அவர் எழுதியிருக்க வேண்டும்.  அதுதான் அவருக்கு அழகு சேர்க்கும்.  எனக்கு இடம் கிடையாது என்றால் ஏன் என் கருத்துக்கு இத்தனை மதிப்பு கொடுக்கிறீர்கள்? ஷோபாவின் பிரச்சினை என்னவென்றால், என்னை அவர் தனிமைப்படுத்த விரும்பினார்.  ஆனால் நானோ நாற்பது ஆண்டுக் காலமாக ஒரு cult figure-ஆக இருந்து கொண்டே இருக்கிறேன்.  அதுதான் அவரது நிம்மதி இல்லாமல் ஆக்குகிறது.

ஏன் நான் ஒரு cult figure ஆக இருக்கிறேன் என்றால், நான் எழுத்தாளன் மட்டும் அல்ல.  நான் கருத்துக்களை உருவாக்குகிறேன்.  அபிப்பிராயங்களைச் சொல்கிறேன்.  அவை கவனிக்கப்படுகின்றன.  அலைகளை எழுப்புகின்றன.  உதாரணமாக, நாஞ்சில் நாடன் அருமையான எழுத்தாளர்.  ஆனால் அவர் அபிப்பிராயங்களை, கருத்துக்களை உருவாக்குபவர் அல்ல.  ஆனால் ஜெயமோகனும், நானும், மனுஷ்ய புத்திரனும் அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கிறோம்.  அதனால்தான் தொடர்ந்து தாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.  சுந்தர ராமசாமியும், அசோகமித்திரனையும் எடுத்துக் கொள்வோம்.  சு.ரா.வை விட அசோகமித்திரன் பல மடங்கு நல்ல எழுத்தாளர்.  அதனால்தான் நாம் அனைவரும் அவரைக் கொஞ்சிக் கொண்டே இருந்தோம்.  ஆனால் சு.ரா. தன் ஆயுள் பூராவும் விமர்சிக்கப்பட்டார்.  அவர் வாங்காத திட்டு இல்லை.  ஏனென்றால், அவர் அபிப்பிராயங்களையும் கருத்துக்களையும் உருவாக்கிக் கொண்டே இருந்தார்.  அகிலனுக்கு ஞானபீடம் கிடைத்த போது அகிலனை மலக்கிடங்கு என்று எழுதிய ஒரே கை சு.ரா.வினுடையதுதான்.  அசோகமித்திரன் ஒருபோதும் அப்படி எழுத மாட்டார்.  எழுத்து என்றால் அகிலன் மாதிரியும்தான் எழுதுவா, அதையெல்லாம் இப்படித் திட்டப்படாது என்பார்.

மேலும், நாற்பது ஆண்டுக் காலமாக இலக்கிய விமர்சனத்தில் தொடர்ந்து நான் அலைகளை எழுப்பிக் கொண்டே இருக்கிறேன்.  தஞ்சை ப்ரகாஷ், அதற்கும் முன்னால் ப. சிங்காரம், இப்போது சார்வாகன், சி.சு. செல்லப்பா, அரு. ராமனாதன், க.நா.சு. போன்ற பல படைப்பாளிகளை நான் தான் மறு உருவாக்கம் செய்தேன்.  காணமால் போயிருந்த அந்த இலக்கியவாதிகளை அகழ்வாராய்ச்சி செய்து மீண்டும் ஸ்தாபித்தேன்.  இதை இலக்கியத்தின் மூலம் தரகு வேலை செய்து உலக நாடுகளைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் மைனர்களால் புரிந்து கொள்ள முடியாது. காயாவை அற்புதமான கதை என்று சொன்ன மறுநிமிடமே அதை ரத்து செய்து விட்டு அதை மீண்டும் படித்து கடுமையாக விமர்சித்தேன்.  அதுதான் ஷோபா சக்திக்கு வலிக்கிறது.  முன்னால் ஏன் அற்புதம் என்றேன்.  சிவாஜியின் வசந்த மாளிகை பார்த்துக் கண்ணீர் வரும்.  பிறகுதானே அடடா என்ன இது போலித்தனம் என்று புரியும்.  அது போல காயா என்ற சிவாஜி கதையைப் படித்து முதலில் கண்ணீர் வந்து விட்டது.  அப்புறம்தான் போலித்தனம் புரிந்தது.  இதுதான் காயா பற்றிய என் விமர்சனம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.