முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அண்மையில் அனுசரிக்கப்பட்டது. அதையொட்டி ஈழ ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள், விமர்சகர்கள் என பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் திமுக ஆதரவாளர்களுக்கும் ஈழ ஆதரவாளர்களுக்குமிடையே கருத்து மோதலாக இது உருவெடுத்தது. குறிப்பாக திராவிடர் கழக ஆதரவாளர் பிரபாகரன் அழகர்சாமி மற்றும் எழுத்தாளர் விநாயக முருகன் எழுதிய பதிவுகள் சர்ச்சையை கிளப்பியுள்ளன.
பிரபாகரன் அழகர்சாமி தனது முகநூலில் எழுதிய பதிவு:
இன்று இராஜிவ் காந்தி தமிழக மண்ணில் படுகொலை செய்யப்பட்ட நாள்.
இராஜிவ் காந்தி கொல்லப்பட வேண்டியவர்தான். அவருக்கு வழங்கப்பட்டது மரணதண்டனை. இப்படியெல்லாம் வெட்டிவாய்சவடால் அடிக்கலாம்தான். நானே ரொம்ப காலத்துக்கு இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தவன் தான்.
இராஜிவ் படுகொலையின் பின்விளைவுகள் என்னவென்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். இன்று தோழர் ஜெயனாதன் குறிப்பிட்டிருப்பதைப் போல, தமிழகம் இன்றுவரை இராஜிவ் கொலைக்கான விலையை கொடுத்துவருகிறது.
இராஜிவ் கொலைதான், தமிழக அரசியலில் ஜெயலலிதா என்கிற நபரை அசைக்கமுடியாத சக்தியாக உருவாக்கியது. இராஜிவ் கொலைதான், வரலாற்றின் குப்பைத்தொட்டியில் வி.பி.சிங் என்கிற மாணிக்கக் கல்லை தூக்கிவீசியது. இராஜிவ் கொலை ஏற்படுத்திய வெற்றிடம்தான், இந்துத்துவ அரசியல் வளர்ச்சிகான பெரிய வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தது.
இராஜிவ் காந்திக்கு கொடுத்த மரணதண்டனை என்பது, ஈழத்தமிழர்களுக்காவது எந்த வகையிலாவது பயன்பட்டதா என்றால், அதுவும் கிடையாது! ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை, உலகத்தில் எந்தவொரு நாடும் அங்கிகரிக்காமல் அவர்கள் அனாதைகளாக தனித்து விடப்பட்டது இராஜிவ் கொலையால்தான்.
13 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்த திமுக, இந்திய அமைதிப்படை இலங்கையில் நடத்திய அட்டூழியங்களை தொடர்ந்து கண்டித்து அந்த படையை திரும்ப அழைப்பதற்கு அழுத்தம் கொடுத்துவந்தது. விடுதலைப் புலிகளை வெளிப்படையாக ஆதரித்தவராக அன்றைய முதல்வர் கலைஞர் இருந்தார். ஆனால், அந்த ஆட்சிக்கு ஆபத்துவரும் என்பது குறித்த எந்த அக்கறையும் இல்லாமல், பத்பனாபா உள்ளிட்ட 15 பேரை பட்டப்பகலில் சென்னையில் வைத்து கொலைசெய்தனர் புலிகள். அதில் இரண்டு அப்பாவி தமிழ்நாட்டுத் தமிழர்களும் செத்தனர். ( இரண்டுப் பேர் சாவதெல்லாம் பெரியவிசயமா, தனி நாடு என்கிற பெரிய லட்சியத்திற்கு முன்னால் இந்த சாவெல்லாம் சும்மா என்பதுதான் புலி வெறியர்களின் மன நிலை ) திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டது.
இந்திய அமைதிப்படையை திரும்பப் பெற்றவர் வி.பி.சிங். 1991 பொதுத்தேர்தலில். இராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டால், அந்த அனுதாப அலையில் வி.பி.சிங் காணாமல் போவார் என்பது குறித்த அக்கறை எதுவும் கொலை செய்தவர்களுக்கு இல்லை.
தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் முகவரியாக இருந்த இடம் பெரியார் திடல். ஒருமுறை பிரபாகரனுக்கு அனுப்பப்பட்ட போலிஸ் சம்மன், பெரியார் திடல் என்று முகவரியிட்டுதான் அனுப்பப்பட்டிருக்கிறது. இராஜிவ் காந்தி கொலையினால் திராவிடர் கழகத்திற்கு சிக்கல் வரும் என்கிற கவலையெல்லாம் புலிகளுக்கு இல்லை. இது உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்கிற செயல் இல்லையா?
இராஜிவ் காந்தி கொலை என்பது எந்த வகையிலும் ஈழத்தமிழர்களுக்கோ, தமிழ் நாட்டு தமிழர்களுக்கோ அல்லது எவருக்குமோ எந்த வித நன்மையையும் கொடுக்கவில்லை !!! மாறாக இன்றுவரை தமிழ் நாடு அதன் பின்விளைவுகளுக்கான விலையை கொடுத்து வருகிறது!
இராஜிவ் காந்தி பெரிய யோக்கியரோ, புனிதரோ கிடையாதுதான். ஆனால், இராஜிவ் காந்திக்கு மரணதண்டனை வழங்கிவிட்டதாக மீசையை முறுக்குகிற பெரியார் இயக்க வீரர்களிடம் ஒரு கேள்வி. சரி, இராஜபக்சேவுக்கும், கருணாவிற்கும் எப்போது மரணதண்டனை வழங்கப்போகிறார்கள்? குஜராத் படுகொலை செய்தவர்களுக்கு யார் மரணதண்டனை வழங்கப்போகிறது? பெரியார் இயக்கங்கள் அதற்கான ஆட்களை தயார் செய்துவருகிறதா? பின் எதற்கு இந்த வீண் மரணதண்டனை சவடால் எல்லாம்???
விநாயக முருகன் தனது முகநூலில் எழுதி நீக்கிவிட்ட பதிவு:
பேஸ்புக்கில் எங்கு பார்த்தாலும் பிரபாகரனை திட்டி பதிவுகள். இந்த பதிவுகளை பெரும்பாலும் திமுக நண்பர்கள்தான் எழுதுகிறார்கள். வருத்தமாக இருந்தாலும் கடந்த சில வருடங்களாக இந்த தமிழ் தேசிய ஆட்கள் தொடர்ந்து கொடுத்த தொல்லை பொறுக்க முடியாமல்தான் பொறுமை இழந்து இப்போது பிரபாகரனை திட்டி தீர்க்கிறார்கள். இதைத்தான் அவர்களும் எதிர்பார்த்தார்கள். இப்படி சண்டை மூட்டிவிடுவதில் அவர்கள் வெற்றியும் பெற்றுள்ளார்கள். சென்னை மெரீனா கடற்கரையில் நினைவேந்தலுக்கு கூடிய இருபது பேர் (ஜல்லிக்கட்டுக்கு கூடிய கூட்டம் இல்லையென்றாலும் இந்த வருடம் கூட்டம் கம்மிதான் இல்லையா தோழர்?)களை காவல்துறை கைது செய்துள்ளது. இப்போது கூட எடப்பாடியை அல்லது மோடியை எதிர்த்து குரல் கொடுக்காமல் வேனில் ஏறும்போது கூட கருணாநிதி ஒழிக என்று குரல் கொடுக்கிறார்கள் பாருங்க.அந்த நேர்மைதான் அவர்களிடம் பிடித்துள்ளது.
திமுகவின் ஆட்சியில் கும்பகோணம், மயிலாடுதுறை, வேதாரண்யம் முழுக்க விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அதிகம் இருந்தார்கள். வீட்டுக்கு ஒருவர் பிரபாகரன் படத்தை வைத்திருப்பார். எங்கள் ஊர்களிலிருந்து டீசல் முதல் சர்க்கரை வரை விசைப்படகுகளுக்கு செல்லும். பதிலுக்கு அவர்கள் தரும் கள்ளத்துப்பாக்கிகளை பரிசாக வாங்கி வருவார்கள். அதை வைத்து வேட்டைக்கு செல்வது அன்றைய இளைஞர்களிடம் ஒரு சாகசம். போரில் ஈடுபடவில்லை என்றாலும் போராளிகளுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் ஒருவித சாகச மனநிலையிலேயே அவர்கள் செய்துக்கொண்டிருந்தார்கள். இவ்வளவு ஏன் ராஜீவ்காந்தி கொலையை கூட ஒருசிலர் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்ததுபோல பேசியது எல்லாம் ஆச்சர்யமாகவும், திகைப்பாகவும் இருந்தது. அந்தளவு விடுதலைப்புலிகள் சுதந்திரமாக இங்கு செயல்பட்டார்கள். நினைத்த நேரத்தில் தமிழகத்துக்கு வந்துபோய்க் கொண்டிருந்தார்கள்.
ராஜீவ்காந்தி இறந்தபோது எங்கள் ஊருக்கு சனியன் பிடித்ததுபோல மத்திய ரிசர்வ் படை வந்து இறங்கியது. சாலைகளில் சென்றுக்கொண்டிருந்தவர்கள், தேநீர்கடைகளில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தவர்களுக்கு எல்லாம் அடி உதை. எங்கள் தெருவில் ஒரு ஜோசியரின் வீடு இருந்தது. ஒருத்தர் சாலையோரமாக இருந்த சிமெண்ட் குப்பைத்தொட்டியை இழுத்துவந்து அவர் வீட்டு முன்பு போட்டு சென்றுவிட்டார். சாலையில் வரும் போலீஸ் வாகனத்தை மறிக்க அந்த ஏற்பாடு. யார் தொட்டியை இழுத்து போட்டது என்று தெரியாததால் அந்த ஜோசியரை அடித்து காவல்நிலையத்துக்கு இழுத்துச்சென்றார்கள். அவரின் மனைவி போலீஸ் ஜீப் பின்னால் அழுதுக்கொண்டு ஓடியது நினைவுக்கு வருகிறது.
அதைத்தொடர்ந்து அதிமுகவினர் செய்த அரசியலில் எல்லாம் தலைகீழாக மாறியது. திமுக ஆட்சி கலைக்கப்பட்டதும் விடுதலைப்புலிகளின் பிரச்சினையினால்தான். ஒருபக்கம் துரோகிகள் என்று வெளிமாநில மக்களிடம் திட்டு. மறுப்பக்கம் அதிமுகவினரே இவர்கள்தான் ராஜீவை கொலைசெய்தார்கள் என்று போஸ்டர் அடித்து ஊர் ஊராக ஒட்டினார்கள். திமுக கரை வேட்டியுடன் சாலையில் செல்ல பயந்து ஆண்கள் எல்லாரும் அச்சத்துடன் உறைந்துப்போய் வீடுகளில் முடங்கிகிடந்த நாட்கள் அவை. சந்தேகப்பட்டவர்களை எல்லாம் கைது செய்தார்கள். வேதாரண்யம் பக்கத்து ஊர்ல இருந்து வர்றேன் என்று சொல்ல கூட அஞ்சினார்கள். ராஜீவ்காந்தி உடல்சிதறி ஆடை விலகி கிடந்த புகைப்படத்தை மக்களிடம் காட்டி அனுதாப அலையில் ஜெயித்தார்கள். ஜெயித்த பிறகு சட்டசபையில் யார் ராஜீவ்காந்தி என்று கேட்டார்கள். எம்ஜியாருக்கு பிறகு அந்தக்கட்சியில் யாரும் ஈழ ஆதரவுக்கு குரல் கொடுக்கவில்லை என்பதுதான் நிதர்சனம்.
அதெல்லாம் ஒருகாலம். காலம் எப்போதும் முன்னோக்கி ஓடும். இன்று தமிழ்தேசிய ஆட்களில் பலருக்கு இருபது முப்பது வயது. இந்த சம்பவம் நடக்கும்போது அவர்கள் பால்குடித்துக் கொண்டிருந்திருப்பார்கள். அப்போது பால்குடித்தவர்கள் எல்லாம் இப்போது ஈழத்தை பற்றி பேசுவது சிரிப்பாக இருக்கிறது. ஆனால் இதெல்லாம் உசுப்பிவிடப்பட்ட கூட்டம்தான்.
இப்போது தமிழகத்தின் பிரச்சினை ஈழம் இல்லை. ஈழப் பிரச்சினை சொல்லி ஓட்டுக்கேட்டால் ஓட்டு விழும் என்பதெல்லாம் எப்போதோ முடிந்துப்போன கதை. எண்பதுகளில் ஈழத்தமிழர்கள் மீது தமிழக மக்களுக்கு இருந்த நேசம் இப்போது இல்லை என்று உறுதியாக சொல்லமுடியும். இங்கேயே ஆயிரம் பிரச்சினைகள். ஏடிஎம் மூடி கிடக்கின்றன. ஆற்றில் தண்ணி இல்லை. வேலைவாய்ப்புகள் அருகிவிட்டன. அவனவன் பிரச்சினைகளை கவனிக்கவே நேரமில்லாமல் ஓடுகிறார்கள். ஈழத் தமிழர்களையாவது ஏதாவது உலக நாடுகள் வரவேற்று விசா தருகிறார்கள். இங்கேயே இருப்பவர்களின் நிலைமை அதைவிட மோசமாக இருக்கிறது.
ஈழத்தமிழர்களும் எங்கள் பிரச்சினையில் தலையிடுங்க என்று யாரையும் கேட்பதில்லை. இடையில் சிலர்தான் வெளிநாட்டில் வாழும் புலம்பெயர்ந்த தமிழர்களை ஏமாற்றி அவர்களிடம் காசு வாங்கிக்கொண்டு இங்குள்ள சொற்ப இளைஞர்களை உசுப்பி விட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களும் நல்ல வேலை கிடைத்தால், ஏதாவது திரைப்பட இயக்குநர் வாய்ப்பு வந்தால் இவர்களை விட்டு விலகிச்சென்றுவிடுவார்கள்.
இவர்களுக்கு ஈழ ஆதரவாளர் திரு.யோ எழுதியுள்ள விமர்சனம்:
விநாயக முருகன், பிரபாகரன் அழகர்சாமி போன்ற பேர்வழிகளின் பலமே மு.கருணாநிதிக்கும், மு.க.ஸ்டாலினுக்கும் ஆதரவளிப்பது போல காட்டிக்கொண்டு சில தகவல்களை மட்டும் பொறுக்கியெடுத்து அவற்றோடு பலவிதமான கற்பிதங்களையும், வதந்திகளையும் இணைத்து உலவவிடுவது. திமுக அதரவு, பெரியார் வழியென பாவனை காட்டியவாறு திமுகவிற்கு எதிரிகளை உருவாக்குகிற இந்த பேர்வழிகள் உருவாவது அமீத்ஷா சென்னைத் திட்டத்தின் பாகங்கள் தான். இவர்களுக்கும் அர்ஜூன் சம்பத்களுக்கும் பெரிய வேறுபாடெல்லாமில்லை. அவர்கள் உள்ளிருந்து பெரியாரைக் கொலைசெய்கிற வேலையைச் செய்கிறார்கள்.
இந்தியப் பிரதமருக்கு மரணதண்டனை வழங்கபட்ட நேரத்தில் இருந்த அனைத்துலக சூளலில் இத்தண்டனை சரியானதுதானா என்ற கோணத்தில் இருந்துதான் இப்பிரச்சனை அணுகப்படவேண்டும். இந் நிகழ்வு தமிழகத்தில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை வைத்துக்கொண்டல்ல. அனைத்துலக சூளலில் இத்தண்டனை சரியானால், அது தமிழீழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல உதவியிருக்குமானால், இவ்வித தண்டனை வழங்கியமையில் எந்தக் குற்றமும் இருப்பதாகத் தெரியவில்லை. அதேவேளை தமிழீழப் போராட்டத்தை நிபந்தனைகளோ, விமர்சனங்களோ எதுவும் இன்றி ஆதரித்த தமிழக அரசியலணியினர் இதற்கான விளைவை ஏற்றுக்கொண்டுதான ஆகவேண்டும். தமக்கு எதுவித தீங்கும் விளைவிக்காத முறையில் தமிழீழப்போராட்டம் அமைய வேண்டுமென தமிழகம் விரும்புவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. டெல்லியை மிரட்ட தமிழீழம் என்ன உங்களின் எடுப்பார் கைப்பிள்ளையா? உப்புத்திண்டவன் தண்ணிகுடிக்கத்தானே வேண்டும். டெல்லியுடன் தன்மானத்துடனான உறவை உருவாக்கிக் கொள்ள திரணியற்ற தமிழக, தமிழீள ஆதரவாளர்கள் டெல்லியுடன் கொஞ்சி விளையாட தயாராகும்போது, தமிழீழம் பற்றிய தமது நிலைப்பாடை ஒருவிதமானதாகவும், டெல்லி தம்மைஅடிக்க தனது முஸ்டியைத் தூக்கும்போது, அல்லது தூக்குமோ என்று அஞ்சும்போது, தமிழீழம் பற்றிய இவர்களின் நிலைப்பாடுவேறொன்றாகவும் உள்ளதென்பதை தமிழ் இனமானம் உள்ள அனைவரும் அறிவர். இன்று தி.மு.க வும் அதன் வோட்டுப்பொறுக்கிப் பரிவாரங்களும் காங்கிரஸின் ஊடாக டெல்லியுடன் கொஞ்சி விளையாட மலர்படுக்கை விரிக்க ஆரம்பித்துள்ளார்கள்; அ.தி.மு.க வோ பி.ஜே.பி யுடன் மலர்படுக்கை விரிக்க ஆறம்பித்துள்ளது. இதனால், தமிழீழ்ப் போராட்டட்டமும் டெல்லியுடன் படுக்க வரவில்லையேவென இரு அணியினரும் விடும் ஏக்கப்பெருமூச்சுகள் விடுகிறார்கள். அவ்வித பெருமூச்சுகள்தான் இவ்விதப் பதிவுகள். அனால், தமிழீழத்தின் அயல் உறவுக்கொள்கைக்கான இராஜதந்திரப்பார்வையில் இருந்து நோக்கும் போது இம் மரணதண்டனை தவறு என்பதே எனது கருத்தாகும். அது பற்றி எனது வலைப்பதிவில் தனியான கட்டுரை ஒன்றை இன்னும் சில நாட்களில் பதிவேற்றுகிறேன்.
LikeLike