வேண்டாம் மரபணு மாற்றப்பட்டக் கடுகு!

கடுகு-தமிழர் உணவில் நீக்கமற நிறைந்திருக்குமொரு உணவுப் பொருள். வட மற்றும் கிழக்கு இந்தியாவிலும், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும், இன்றும் சமையலுக்குப் பயன்படுவதோடு, கலாச்சார ரீதியாகவும் முக்கியத்துவம் கொண்டது கடுகு. தேனீக்கள் வளர்ப்பிலும், பாரம்பர்ய மருத்துவத்திலும், கடுகுச் செடிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இப்படிப்பட்ட கடுகு, பகாசுர பன்னாட்டுக் கம்பெனிகளின் கைகளில் மாட்டிக் கொண்டு, மரபணு மாற்றப்பட்டு படாதபாடு படுகிறது. மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு தற்போது மத்திய அரசு விரைந்து அனுமதியளிக்க முயற்சிக்கிறது. இதனால் இதை எதிர்த்து அகில இந்திய அளவில் ‘பொறிந்து’ கொண்டிருக்கிறது, ‘கடுகு அரசியல்’.

தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் மரபணு மாற்றப்பட்ட கடுகை 2002 ஆம் ஆண்டே புழக்கத்தில் விட, பன்னாட்டு பகாசுர கம்பெனியான பேயர் நிறுவனத்தின் துணை நிறுவனமான ப்ரோஅக்ரோ மூலம் விண்ணப்பிக்கபட்டது. ஆனால் அப்போது அது நிராகரிக்கப்பட்டது. தற்போது இதனை, 100 கோடிக்கு மேல் மக்கள் பணத்தைச் செலவழித்து, பொதுத் துறை நிறுவனமான தில்லி பல்கலைகழத்தின் மூலமாக டி.எம்.எச் 11 (DMH 11- தாரா மஸ்டர்ட் ஹைப்ரிட்) என்ற பெயரில் மறைமுகமாக இந்தியாவுக்குள் திணிக்க முயல்கிறார்கள். மரபீனி தொழில்நுட்பத்தை (மரபணுமாற்றப்பட்ட, GM பயிர்) நெறிப்படுத்தும் இந்திய அரசின் உச்ச அமைப்பான ‘மரபணு பொறியியல் ஒப்புறுதிக்குழு’ (GEAC), மரபணு மாற்றப்பட்ட கடுகை (DMH 11 மற்றும் அதன் பெற்றோர்-ஆக மொத்தம் 3 வகை), வணிக ரீதியாக உற்பத்தி (பொது சாகுபடிக்கு) செய்யக்கோரும் விண்ணப்பத்தின் மீதான முடிவை அதிவிரைவில் எடுக்கும் அவசரத்தில் இருக்கிறது.

உலக வர்த்தக நிறுவனத்தின் (WTO), வணிகம் தொடர்பான அறிவுசார் சொத்துரிமை ஒப்பந்தம் (TRIPS) மூலம், ஏற்கனவே உள்ள ஒரு உயிரியின் மரபணுக்களை மாற்றி, புதிய பண்புகளை பெற்ற உயிரியாகக் காப்புரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வரலாம். கொழுத்த லாபமும் சம்பாதிக்கலாம். எனவேதான், விதை நிறுவனங்கள் வரிந்து கட்டிகொண்டு மரபணு மாற்று வேளைகளில் ஈடுபடுகின்றன. இதன் விளைவு, அமெரிக்காவில் பருத்தி, மக்காசோளம் போன்ற பல பயிர்கள் மரபணு மாற்றப்பட்டதாகிவிட்டது. இதனால் விவசாயிகள் அவற்றை மட்டுமே பயிரிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். நாட்டு ரகங்ளைப் பயிரிட்டாலும் அயல் மகரந்தச்சேர்க்கை மூலமாக, மரபணு மாற்றப்பட்ட பயிரின் மரபணு, நாட்டு ரகங்களுக்குள் ஊடுருவி விடுகிறது. இதனால் அவர்கள் சட்டப்படி மரபணு மாற்றப்பட்ட விதைகளை விலை கொடுத்து வாங்காமல், திருட்டுத் தனமாக பயிரிடுகின்றனர் என்று குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் தள்ளப்பட்டுள்ளனர். மரபணு மாற்றப்பட்டத் தாவரங்கள் பயிரிட்டால், களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் பயன்பாடும் அதிகரிக்கும். இதனால்தான் பன்னாட்டு விதை மற்றும் ரசாயன கம்பெனிகள், மரபணு மாற்றப்பட்ட விதை வியாபாரத்தில் அதிக அக்கறை செலுத்துகின்றன.

மரபணு மாற்றப்பட்ட பருத்தி, மான்சாண்டோ நிறுவனத்தால் இந்தியாவில் நுழைக்கப்பட்ட 15 ஆண்டுகளில் திரட்டப்பட்ட அதிகாரப்பூர்வமான தகவலின் அடிப்படையில், மரபணு பருத்தியை பாதிக்கும் முக்கியமான bollworm எனப்படும் காய்ப்புழு, பூச்சிக்கொல்லிகளை எதிர்த்து உயிர் வாழும் ஆற்றல் பெற்றதோடு மட்டுமல்லாமல், பருத்தியை பாதிக்கும் இதரபூச்சிகளின் தாக்கமும் மேன்மேலும் அதிகரித்து வருவதையும், இதனால் பருத்தி விவசாயிகள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் அளவு அதிகமாகிக் கொண்டே போவதையும், அது மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அறிமுகப்படுத்தும் பொழுது வரையறுக்கப்பட்ட (பூச்சிகொல்லிகளின்) அளவை தாண்டி விட்டதையும் நாம் அனுபவப் பூர்வமாக அறிவோம். இதனால், லாபமடைந்தது பன்னாட்டுக் கம்பெனிகள்தான்! விதர்பாவில் பிடி பருத்தி விவசாயிகள் ஏராளமானோர் தற்கொலை செய்துகொண்ட அவலத்தை நாடே அறியும்.

இதே கதி, கடுகு விவசாயிகளுக்கும், தேனீ விவசாயிகளுக்கும் நேரலாம். பருத்தியாவது உணவுப்பொருள் அல்ல! மரபணு மாற்ற கடுகை அனுமதித்தால், விவசாயிகள் பாதிக்கப்படுவதுடன், நம் உணவும் நஞ்சாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

மரபணு மாற்றப்பட்ட கடுகிற்கு மத்திய அரசு அனுமதியளிப்பதை எதிர்ப்போம்!

பன்னாட்டு கம்பெனிகளின் பணப்பசிக்கு, நாம் பலியாடுகளல்ல என்பதை பறைசாற்றுவோம்!

தமிழ்க்காடு-இயற்கை வேளாண்மை இயக்கம் & பாமரர் ஆட்சியியல் கூடம், பெரம்பலூர் மாவட்டம்.

தொடர்புக்கு: 944421-9993, 90477-75429, 97512-37734

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.