சந்திரமோகன்

தமிழகத்தில் இன்று முடிவு வெளியாகியுள்ள ப்ளஸ் டூ / +2 பரீட்சையில், நடப்பு 2016- 17 ஆண்டில் தேர்வு எழுதிய 9 இலட்சம் பேரில் 91.2 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள் மொத்தம் 1813 ஆகும். அவற்றில் 292 பள்ளிகள் அரசுப் பள்ளிகள் ஆகும். தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 97.77 % ஆகவும், மாநகராட்சி பள்ளிகளில் தேர்ச்சி 90.06 % ஆகவும், பொதுவாக அரசுப் பள்ளிகள் 86.87 % ஆகவும், பழங்குடியினர் பள்ளிகள் 86.65 % ஆகவும் இருக்கிறது.
தனியார் பள்ளிகளுக்கு எந்தவகையிலும் அரசுப் பள்ளிகள் கேவலமாகி விடவில்லை.
மாவட்ட வாரியானத் தேர்ச்சியில் விருதுநகர் மாவட்டம் 97.85 %, ராமநாதபுரம் 96.77 %, ஈரோடு 96.69 % தேர்ச்சியை காண்பித்துள்ளன.
சுமார் 25 பிரபலமான சுயநிதி- தனியார் பிராய்லர் பள்ளிகளைக் கொண்டுள்ள,
பிராய்லர் கல்விப் பண்ணைகளின் தாயகமான நாமக்கல் மாவட்டம் முதல் மூன்று வரிசையில் கூட வரவில்லை. (மிகவும் பின்தங்கிய கடலூர் கூட 84.83 % தேர்ச்சி காண்பித்துள்ளது.) நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுயநிதி தனியார் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. (2016 ல் 99.09 % ஆனால், தற்போது 2017 ல் 98.94 % தான். ) அரசு உதவி பெறும் மேனிலைப் பள்ளிகளின் தேர்ச்சி 2016 ல் 94.33% ஆக இருந்தது தற்போது 2017 ல் 95.96 % ஆக உயர்ந்துள்ளது.
ரேங்க் முறை ரத்து!
தேர்ச்சி பெற்ற மாணவர்களை 1, 2, 3 என தரம் பிரித்து ஆண்டுதோறும் அறிவித்த முறையை தமிழக அரசு இந்த ஆண்டு ரத்து செய்துவிட்டது. A,B,C,D,E என கிரேட் முறையை அறிவித்து உள்ளது.
1) A கிரேட் 1180 மார்க்குகளுக்கு கூடுதலாக பெற்றவர்கள் 1171 மாணவர்கள்
2)B கிரேட் 1151 முதல் 1180 வரை 12,283 பேர்கள்
3)C கிரேட் 1126 முதல் 1150 வரை 14,806 பேர்கள்
4)D கிரேட் 1101 முதல் 1125 வரை 17,750 பேர்கள்
5)E கிரேட் 1001 முதல் 1100 வரை 95,906 பேர்கள்
- எனப் பட்டியல் நீள்கிறது.
மாநில ரேங்க் 1,2,3 என அறிவிக்காததால், மிகவும் பாதிக்கப்படுபவர்கள், ஒரு மாணவருக்கு ஆண்டுக்கு ரூ.1 இலட்சம் முதல் ரூ.2 இலட்சம் வரை சாதாரணமாக சம்பாதித்து வந்த நாமக்கல் மாவட்டத்தில் கல்வி வியாபாரத்தை (கோழிப்பண்ணைகளை விட) இலாபகரமாக நடத்திய கொங்கு கவுண்டர்களின் தலைமையிலான சுயநிதி- கல்வி நிலையங்கள் தான்! இந்த கல்வி லாபியின் ஊத்தங்கரை முதல் ஈரோடு மாவட்டம் வரையிலும் பரவியுள்ள + 2 பள்ளிகள் மற்றும் தமிழகத்தின் பிற மாவட்டத்தில் இவர்கள் அமைத்தக் கிளைப் பள்ளிக்கூடங்கள் இனிமேல், “தாங்கள் தான் தமிழ் நாட்டின் மிகச் சிறந்த முட்டைகளைப் போட்டோம் ” எனப் பீற்றிக் கொள்ள முடியாது; விளம்பரங்கள் வெளியிட முடியாது. வேறு வழிமுறைகளை கண்டறிந்து வியாபாரம் செய்ய முயற்சிப்பார்கள்.
பெற்றோர்கள் எச்சரிக்கையாக இருக்கவும்.
நூற்றுக்கும் மேற்பட்ட இத்தகைய சுயநிதி- உண்டு உறைவிடப் பள்ளிகளில் /Residential Schools மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் ப்ளஸ் டூ படிப்பவர்கள் மட்டும் ஒரு இலட்சத்திற்கும் கூடுதலானவர்கள் ஆவர்.
“மருத்துவம் அல்லது தலை சிறந்த பொறியியல் கல்லூரிகளில் உங்களுடைய பிள்ளைகளை சேர்ப்பதற்கு 100 க்கு 100 மார்க் முக்கியமான பாடங்களில் வாங்கித் தருகிறோம் ” என்ற வாக்குறுதி இவர்கள் முதலீடு ஆகும்.
ஆனால், ஆக்கப் பூர்வமான திறமைகளை Creativity யை ஒழித்துக் கட்டி, மாணவர்களின் தன்னம்பிக்கையை சிதைத்து, மனப்பாடம் மட்டுமே செய்து மார்க் வாங்கிக் குவிக்கும் பிராய்லர் கோழிகளை உருவாக்குவதே இச் சுயநிதி தனியார் பள்ளிகளின் நோக்கம் ஆகும்.
இந்த ஆண்டில் தமிழ்நாடு முழுவதுமாக அனைத்து அரசு, தனியார் பள்ளிகளிலும் சில முக்கியமான பாடங்களில் 100/100 வாங்கியவர்கள் விபரங்கள் பின்வருமாறு தான் உள்ளது.
1) உயிரியல் – 221
2)இயற்பியல் 187
3)வேதியியல் 1123
4)கணிதம் 3656
5)கம்ப்யூட்டர் சயின்ஸ் 1660
6)வணிகவியல் 8301
இவர்களில், சுயநிதி – தனியார் பிராய்லர் பள்ளிகளில் படித்தவர்கள் சில நூறு பேர் மட்டுமே! நாளை நாளேடுகளில் வெளிவரும் இப் பள்ளிகளின் விளம்பரங்கள் ஒவ்வொரு பள்ளியிலும் எத்தனை நூறு என எண்ணிக்கையைத் தெளிவுபடுத்தும்.
10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் பெற்றோர்களுக்கு தாழ்மையான வேண்டுகோள்!
1)கைவசம் பணம் இருக்கிறது என்பதற்காகவோ, அல்லது சொத்துக்களை விற்றோ, கடன்களை வாங்கியோ இந்த சுயநிதி பிராய்லர் பள்ளிகளில் கொண்டு வந்து உங்களது பிள்ளைகளைச் சேர்க்க வேண்டாம்.
6 மாதங்கள் கழிந்தவுடன் பள்ளி நிர்வாகம் சொல்லும் :” உங்கள் பிள்ளை சரியாகப் படிக்கவில்லை ; பொதுத் தேர்வில் நல்ல மார்க் வாங்கவில்லை என்றால் நாங்கள் பொறுப்பு அல்ல! ”
பணம் இலட்சம் இலட்சமாக செலவு செய்யும் உங்களுக்கு இந்த அறிவுரைத் தேவையா ?
2)பத்தாம் வகுப்பில் SSLC யில் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற ஒரு இலட்சம் மாணவர்களை தங்கள் பள்ளிகளில் சேர்த்துக் கொண்டு, அதில் அதிக மதிப்பெண்கள் வாங்கிய சில நூறு மாணவர்கள் புகைப் படங்களை விளம்பரம் செய்து, “வெற்றி…வெற்றி..!” என வியாபாரம் செய்வது தான் இவர்கள் நோக்கம் ஆகும்.
3)இப் பள்ளிகளில் உங்கள் பிள்ளைகளைச் சேர்க்காமல் விட்டால் மன அழுத்தத்திற்கு உள்ளாகும் மாணவர்கள், தற்கொலை செய்யும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும்.
4)உங்களுக்கு அருகாமையில் உள்ள அரசுப் பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகளில் + 2 சேர்ப்பது நல்லது.
அதிலும் கூட +1 பாடங்களைச் சொல்லிக் கொடுக்கும் பள்ளிகளில் சேர்ப்பது சாலச் சிறந்தது.
சந்திரமோகன், சமூக-அரசியல் செயல்பாட்டாளர்.