சென்னை மெட்ரோ சுரங்க ரயில் பாதையை திறந்து வைத்து பேசிய மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, மெட்ரோ ரயில் ஜெயலலிதாவின் கனவு என்று பேசினார். மெட்ரோ ரயில் திட்டம் திமுக தொடங்கியது என்பதும் ஜெயலலிதா அதை எதிர்த்தார் என்பதும் நிதர்சனமாக இருக்கும் நிலையில் மத்திய அமைச்சரின் கருத்து இது கடும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து திமுக செயல் தலைவர் மு. க. ஸ்டாலின் தனது கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
“எத்தனை முறை விளக்கம் கொடுத்தாலும் நாங்கள் மக்கள் மன்றத்தில் திரும்பத் திரும்ப பொய் சொல்வோம்” என்று மாண்புமிகு முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி “திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையிலான மெட்ரோ ரயில்” திட்டத் துவக்க விழாவில் பேசியிருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தலைவர் கலைஞர் அவர்களின் கனவு திட்டமான மெட்ரோ ரயில் திட்டத்தை மறைக்க, “அம்மையார் ஜெயலலிதாதான் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர்” என்று வடிகட்டிய பொய்யை மத்திய அமைச்சரையும் வைத்துக் கொண்டு பேசியிருக்கும் முதலமைச்சர் அரசு விழாவில் அரசியல் நாகரிகத்தை பலி கொடுத்திருக்கிறார் என்பது வேதனையளிக்கிறது.
2006 முதல் 2011 வரை திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது 7.11.2007 அன்று நடைபெற்ற 23 வது அமைச்சரவைக் கூட்டத்தில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு கொள்கை அளவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் வடிவமைக்கப்பட்ட இத்திட்டப் பணிகளை கழக அரசுதான் தீவிரமாக மேற்கொண்டது. நானே பலமுறை அப்பணிகளை பார்வையிட்டு விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறேன். அந்தவகையில் சென்னை மாநகரின் போக்குவரத்து நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் கழக அரசின் முதற்கட்ட வெற்றிதான் சென்னை ஆலந்தூர் முதல் கோயம்பேடு வரை ஓடிக் கொண்டிருக்கும் சென்னை மெட்ரோ ரயிலும், இப்போது திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரை சுரங்கப்பாதையில் செல்லும் மெட்ரோ ரயிலும் என்பதை முதலமைச்சருக்கு மீண்டுமொருமுறை நினைவுபடுத்த விரும்புகிறேன்.
அது மட்டுமல்ல, மெட்ரோ ரயில் திட்ட நிதிக்காக தலைவர் கலைஞர் அவர்களின் ஆணைப்படி ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோ நகரத்திற்குச் சென்றேன். அங்குள்ள ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமையுடன் 59 சதவீத நிதியளிக்கும் கடன் ஒப்பந்தத்தில் மத்திய அரசு, ஜப்பான் கையெழுத்திட்ட பிறகு திரும்பி வந்தேன். இதுபோன்ற மெட்ரோ ரயில் திட்டத்திற்கு நிதி ஆதாரத்தைப் பெறுவதற்கு மற்ற மாநிலங்கள் இரண்டரை வருடத்திற்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில், சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஜப்பான் நாட்டு நிதி 12 மாதத்தில் பெறப்பட்டது திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனை.
அதன்பிறகு, மத்திய அரசின் “பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு” 28.1.2009 அன்று தமிழக அரசு அளித்த சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதியளித்தது. இத்திட்டத்திற்கு “ஜெனரல் கன்சல்டன்ட்” கழக ஆட்சியில் 24.2.2009 அன்றுதான் நியமிக்கப்பட்டது. கோயம்பேடு முதல் அசோக்நகர் வரை சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான மேல்மட்ட ரயில் பாலம் (VIADUCT) அமைக்க 13.2.2009 அன்று முதல் டெண்டர் கொடுக்கப்பட்டது. அதிலிருந்து மெட்ரோ ரயில் திட்டத்திற்கான பல்வேறு பணிகள் முதல் மின்மயமாக்கல் பணிகள் வரை (Electrification works) 9 டெண்டர்கள் கழக ஆட்சியில்தான் வழங்கப்பட்டன.
நிலைமை இவ்வாறிருக்க, மெட்ரோ ரயில் திட்டத்தை நாங்கள்தான் கொண்டு வந்தோம் என்று “இலைச்சோற்றில் முழு பூசணிக்காயை மறைப்பது போல்” கோயபல்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்கு முதலமைச்சருக்கு கூச்சமாக இல்லையா என்று கேள்வி எழுப்ப விரும்புகிறேன். முதலமைச்சராவது புதிதாக பொறுப்பேற்றவர். அ.தி.மு.க.விற்குள் நடைபெற்ற “அணி போட்டியில்” தற்காலிகமாக அந்த பதவிக்கு வந்திருப்பவர். ஆனால் அந்தத் துவக்க விழாவில் கலந்து கொண்ட மாண்புமிகு மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு அவர்களும் “மெட்ரோ ரயில் சேவையை தொடங்க வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கனவு தற்போது நனவாகியுள்ளது” என்று கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
அனுபவமிக்க மத்திய அமைச்சர் ஒருவர் அரசு விழாவில் பங்கேற்று தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபடுவது உள்ளபடியே வேதனையளிப்பதாக இருக்கிறது. “மெட்ரோ ரயில் வேண்டாம். நாங்கள் மோனோ ரயில் விடப்போகிறோம்” என்று கூறி, இரு வருடங்கள் மெட்ரோ ரயில் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா முடக்கி வைத்ததை மத்திய அமைச்சர் முழுமையாக மறைத்து, அதிமுக வாக்காளர்களை தங்கள் கட்சிக்கு இழுக்க நினைக்கலாம். ஆனால் உண்மைக்குப் புறம்பான தகவலை ஒரு அரசு விழாவில் வெளியிடுவது மிகத் தவறானது என்பதை மத்திய அமைச்சர் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
“89 கோடி ரூபாய் வாக்காளர்களுக்கு கொடுத்தார்கள்” என்று வருமான வரித்துறை அளித்த பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் முதலமைச்சருடன் விழா மேடையில் பங்கேற்றதுடன், ஊழல் வழக்கில் குற்றவாளி என்று உச்சநீதிமன்றத்தாலேயே உறுதி செய்யப்பட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவை “நான் மதிக்கும் ஆற்றல் மிக்க தலைவர்” என்று மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு புகழாரம் சூட்டியிருப்பது “ஊழல் விஷயத்தில்” பா.ஜ.க.வின் உண்மை முகத்தை காட்டுகிறது. “ஊழல் ஒழிப்பு எங்கள் உயிர் மூச்சு” என்று பட்டிமன்றமே நடத்திக் கொண்டிருக்கும் பா.ஜ.க. மாநிலத்திற்கு மாநிலம் ஊழலில் சிக்கியவர்கள் பற்றி வித்தியாசமான நிலைப்பாட்டை எடுப்பது விந்தையாகவும், வேடிக்கையாகவும் இருக்கிறது.
சுயநல அரசியலுக்காக அதிமுக விஷயத்தில் ஊழல் ஒழிப்பு முழக்கத்தையே அடகு வைத்துவிட்டு, இப்படி ஊழல் அமைச்சர்களுடன் மேடையேறும் நிலைக்கு வந்தது ஏன் என்பதை தமிழக மக்களுக்கு பா.ஜ.க. விளக்க முன் வர வேண்டும். “டெல்லி” “உத்தரபிரதேசம்” “மேற்குவங்கம்” “பீஹார்” “ஹரியானா” போன்ற மாநிலங்களில் “ஊழல் எதிர்ப்பு”, “தமிழகத்தில் அதிமுக ஊழலுக்கு அரவணைப்பு” என்ற பா.ஜ.க.வின் இரட்டை வேடம் மெட்ரோ ரயில் துவக்க விழாவில் ஊருக்கே அம்பலமாகி விட்டது.
ஆனால் மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக செய்யப்பட்ட பணிகள், சென்னை மாநகரின் போக்குவரத்து வசதிகளை பெருக்குவதற்காக கட்டப்பட்ட மேம்பாலங்கள், தமிழக உட்கட்டமைப்புத் திட்டங்களுக்காக திராவிட முன்னேற்றக் கழகம் எடுத்த நடவடிக்கைகள் எல்லாம் இன்றைக்கு மலை போன்ற சாட்சியங்களாக மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. ஆகவே அதிமுக முதலமைச்சரும், பா.ஜ.க. மத்திய அமைச்சரும் “கூட்டணி” அமைத்துக் கொண்டு, இப்படி தி.மு.க.விற்கு எதிராக செய்துள்ள ஆரோக்கியமற்ற விமர்சனத்தால் மக்கள் மத்தியில் தலைவர் கலைஞர் அவர்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் உள்ள செல்வாக்கை இம்மியளவு கூட குறைக்க முடியாது. ஆனாலும் நாட்டு மக்களுக்கு “மெட்ரோ ரயில் திட்டம்” குறித்த உண்மைத் தகவல்களை தெரிவிக்க வேண்டியது எங்கள் கடமை என்ற அடிப்படையில் இந்த விளக்கத்தை தெரிவித்துள்ளேன்.
ஆகவே, இனியாவது அதிமுக “பெற்று எடுக்காத பிள்ளைக்கு” பெயர் வைக்கும் முயற்சியில் ஈடுபடாமல், மெட்ரோ ரயில் திட்டம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிள்ளை என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும், மத்திய அமைச்சர் திரு வெங்கய்யா நாயுடு அவர்களும் உணர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அது மட்டுமின்றி எஞ்சியிருக்கின்ற மெட்ரோ ரயில் விரிவாக்கப் பணிகளை உடனடியாக மேற்கொண்டு சென்னை மாநகரத்தின் போக்குவரத்து உட்கட்டமைப்பை வலுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சரும், அதற்கான நிதியை ஒதுக்க மத்திய அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.