குழந்தைகளின் வதை முகாம்களாக மாறிய டிவி சேனல்கள்!

கே. ஏ. பத்மஜா

கே. ஏ. பத்மஜா

குட்டிப் பிள்ளைகள் டாம் அண்ட் ஜெர்ரி, டோரா, சோட்டா பீம் என 24 மணி நேரமும் கார்ட்டூன் சேனல்கள் முன்பு தவம் இருக்கும் கொடுமை ஒருபுறம் இருக்க, சமீபத்தில் தமிழ் காமெடி சேனல், காமெடி நிகழ்ச்சிகள், குழந்தைகள் நிகழ்ச்சி என மறுபுறம் புகழ் போதையில் பெற்றோரே வலுக்கட்டாயமாக பிள்ளைகளை பாடுபடுத்துகின்றனர்.

காமெடி சேனல் என்பது இன்று பல குடும்பங்களில் சர்வ சாதாரணமாய் பார்க்கப்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக, குழந்தைகள் இந்த காமெடி சேனலை பார்ப்பதை எந்த விதத்திலும் உறுத்தாதவாறு அலட்சியம் நிறைந்தவர்களாய் பெற்றோர் மாறி வருகிறோம்.

தமிழ் சினிமாவில் மலிந்து போன காமெடி காட்சிகள் எல்லாம் முழுநேர நிகழ்ச்சியாக காமெடி சேனல்களில் வருகின்றன. அதில் வரும் டயலாக், குழந்தைகளுக்கு அத்துப்பிடி. ஒரு விஷயத்தை திரும்பப் திரும்ப பார்க்கும்போது அது நம் மனதில் வெகு இயல்பான நிகழ்வாய் பதிந்துவிடும். அதனால்தான் இன்றும் பல வீடுகளில் வடிவேலு, சந்தானம் போன்றவர்கள் பாலியல் தொழிலாளிகளிடம் போய் அடிவாங்கும் கட்சியை ரசித்து பிள்ளைகளோடு சேர்ந்து சிரிக்கிறோம்.

பிள்ளைகளின் இசைத் திறமையை வெளிப்படுத்த பல தனியார் சேனல்கள் நீ நான் என போட்டிப் போட்டு தமிழகத்தின் குரல் தேடல் என்று விளம்பரத்துடன் வரிந்துகட்டி நிற்கின்றன. பிள்ளைகளைப் பாடாய்படுத்தித் தயார்படுத்தும் பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் மழலை மாறாத குழந்தைகள் பாடும் இசை வரிகளை கவனிக்க மறந்து விடுகின்றனர். எனக்கு இன்னும் நினைவு இருக்கிறது, “மே மாதம் தோண்ணுத்தெட்டில் மேஜர் ஆனேனே” என்ற பாடலை வீட்டிற்குள் பாடிக்கொண்டு இருந்தபோது, துடைப்பத்தால் என் அம்மாவிடம் அடி வாங்கியது. “என்ன கண்றாவி பாட்டு இது?” என்று அம்மா உதைத்தபோது, “சினிமா பாட்டுதான்” என்று வீறுகொண்டு கோபப்பட்டேன்.

இன்று அதே பருவ வயதில் இருக்கும் என் மகள், நான் வீட்டிற்குள் முணுமுணுக்கும் “ஆணில் உள்ள பெண்ணைக் கொஞ்சம்… பெண்ணில் உள்ள ஆணை கொஞ்சம்… கொஞ்ச சொல்லி, கொஞ்ச சொல்லி யாசித்தோம்” என்ற பாடல் வரிகளை அடிக்கடி கேட்டு, அவள் வயதில் அவள் பாடும்போது அது அருவருப்பாய் இருப்பதை உணர்ந்தேன். இன்று மேடைகளில் இசைப் போட்டியில் “நான் முத்தம் தின்பவள்” என்று ஆறு வயது குழந்தை பாட்டுக்கு ஏற்றார் போல் அரைகுறை ஆடையுடன் பாடும்போது, அதை கைத்தட்டி ரசிக்கும் பெற்றோர்களைப் பார்க்கும்போது, இப்படி குறுக்கு வழியில் குழந்தையை பிரபலம் ஆக்கி என்ன சாதிக்க போகிறார்கள் என்று கேட்க தோன்றுகிறது.

குழந்தைகளுக்கான இன்னொரு நிகழ்ச்சியில் நான்கு பிள்ளைகளை பிடித்து ஒய்யாரமான சேரில் அமர்த்தி, “உங்க அம்மா, அப்பாவை எப்படி அடிப்பாங்க? உங்க அப்பா, உங்க அம்மாவை எப்படி கொஞ்சுவாங்க?” என்று குழந்தைகள் யோசிக்க வேண்டியது இல்லாத கேள்விகளை கேட்கின்றனர். அந்த மழலைகள் மாறி மாறி சொல்லும் பதில்களுக்கு மொத்த அரங்கமும் விழுந்து விழுந்து சிரிக்கிறது. குழந்தைப் பருவத்திலேயே தேவையற்ற மனமுதிர்ச்சி அடைவதற்கு நாமே அத்தனை வேலைகளையும் செய்கிறோம் என்றே தோன்றுகிறது.

இன்னும் ஒரு சேனலின் குழந்தைகள் பங்குபெறும் விளையாட்டு நிகழ்ச்சியில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தையிடம் கேட்கும் கேள்விக்கு, பெற்றோரும் குழந்தையும் ஒரே பதில் சொல்லும்போது மதிப்பெண் வழங்கப்படுகிறது.

அதில் அம்மாவிடம் ஒரு கேள்வி: “உங்கள் குழந்தை கோபம் வந்தவுடன் என்ன செய்வாள்?” அந்த அம்மாவின் பதில்: “எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைப்பாள்.”

இதைக் கூட பொறுத்துக்கொள்ளலாம். ஆனால், இதே கேள்வி அந்தக் குழந்தையிடம் கேட்கப்பட்டது. “கோபம் வரும்போது என்ன செய்வீங்க?”

“எல்லாத்தையும் தூக்கிப் போட்டு உடைப்பேன்” என்று அந்தக் குழந்தைச் சொன்னதும் ஒரே கரகோஷம்.

“முழு மதிப்பெண்” என்று சொல்கிறார் தொகுப்பாளர்.

உண்மையில் அந்தக் குழந்தை தான் கோபத்தில் தூக்கிப்போட்டு உடைப்பதை ‘சரி’ என்று நியாயப்படுத்துவது போல இருந்தது, அந்த கரகோஷம். இனி என்று யார் புரியவைப்பார்கள் அந்தக் குழந்தைக்கு, “கோபத்தில் உடைப்பது தவறான பழக்கம்” என்று.

இன்னும் ஒரு படி மேலே போய் குழந்தைகள் நடிப்பு திறமை, காமெடித் திறமையை வெளிப்படுத்த என புதிது புதிதாய் முளைக்கும் நிகழ்ச்சியில் கைத்தட்டலும் பரிசுகளும் வாங்க வேண்டும் என்று அவர்களுக்குள் வயதிற்கு மீறிய விஷயங்களை உள்ளே திணிப்பதும், அதைக் குழந்தைகள் சர்வ சாதாரணமாக மேடையில் நடித்துக் காட்டுவதுமான அவலங்கள் அரங்கேறுகின்றன.

“பிள்ளைகள் முன்பு சண்டைப் போடாதீர்கள். அது குழந்தைகளின் மனநிலையை பாதிக்கும்” என்று பெற்றோரிடம் உளவியல் நிபுணர்கள் கூவிக்கொண்டிருக்கிறார்கள். அங்கே நிகழ்ச்சியிலோ குழந்தைகள் அப்பா – அம்மா வேஷம் போட்டு மேடையில் சண்டை போடுவதும், மாமியாரை திட்டுவதும், பொருந்தாத காதல் பற்றி பேசுவதும் என சமூகத்தில் குழந்தைகள் கண்ணுக்கு மறைக்கப்பட வேண்டிய அத்தனை அசிங்கங்களுக்கும் வசனம் எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்யவைத்து நடிக்கவைத்து ரசிக்கும் பெற்றோர்களை என்ன சொல்ல?

இப்போது உணவில் பெரும் விழிப்புணர்வு புரட்சி ஒன்று ஏற்பட்டு வருகிறது. பிராய்லர் கோழியை தவிர்க்கும்படி மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதற்கு குறைந்த நாளில் நல்ல விலைபோக கொடுக்கப்படும் தேவையற்ற ஊசிகள், மருந்துகள் மற்றும் எடையைக் கூட்டும் ஆரோக்கியமற்ற உணவுகளே காரணம்.

உண்மையில் நாமும் நம் குழந்தைகளை இப்படி தொலைக்காட்சி சேனல்களுக்கு தீனிபோட்டு, குறுகிய காலத்தில் பெயர் புகழ் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையுடன், தேவை இல்லாத வயதிற்கு மீறிய விஷயங்களை திணித்து ப்ராய்லர் கோழிகளாய்தான் குழந்தைகளை வளர்க்கிறோம். டிஆர்பி மோகம் கொண்ட டிவி சேனல்களின் வதைமுகாம்களின் நம் பிள்ளைகளை அடைக்கிறோம்.

கே.ஏ. பத்மஜா, கட்டுரையாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.