
கே. ஏ. பத்மஜா
Nisabdham | Michael Arun | Tamil | 2017
“பாபநாசம்” படம் வந்த சமயத்தில் ஒவ்வொரு பெண்பிள்ளைகளின் பெற்றோரும் பார்க்க வேண்டிய படம் என்று பலர் பாராட்டினர். அதேபோல் சமீபத்தில் வெளியான “நிசப்தம்” படத்தையும் பெண்பிள்ளைகளின் பெற்றோர் பார்க்க வேண்டிய படம் என்று விளம்பரப்படுத்தினர் நண்பர் வட்டம். அது என்ன ஆண்கள் கழிப்பறை, பெண்கள் கழிப்பறை மாதிரி ஆண்பிள்ளைகளின் பெற்றோர், பெண்பிள்ளைகளின் பெற்றோர் பார்க்க வேண்டிய படம் என்று தனித்தனியாய் படம் எடுக்க ஆரம்பித்து விட்டனரா என்ற வெறுப்பு வரவே, இந்தப் படத்தை பார்ப்பதை தவிர்த்தேன். இருந்தும் தோழி ஷைலஜாவின் தொடர் வற்புறுத்தலின் காரணமாய் இந்தப் படம் பார்க்க நேர்ந்தது.
மைக்கேல் அருண் இயக்கத்தில் அஜய், அபிநயா, பேபி சாதன்யா, கிஷோர் ஆகியோர் நடிப்பில் ஏஞ்சலின் டாவின்சி தயாரிப்பில் வெளிவந்த படம் ‘நிசப்தம்’. கொரியா மொழியில் வெளிவந்த “ஹோப்” என்ற படத்தின் கதைக்கரு என்று பலரால் சொல்லப்பட்டது. ஆனால், இயக்குனர் தரப்பில் இது பெங்களூரில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம், அதுவே கதைக்கான களம் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
படத்தில் நிறைய குறைகள் இருப்பதால் நல்ல கதை இருந்தும் போதுமான வரவேற்பை பெறவில்லை. ஆனால், படத்தை ஒரு நல்ல பாடமாக பார்த்தால் உண்மையில் நிசப்தம் படம் பெண்பிள்ளைகளின் பெற்றோருக்கு மட்டும் அல்ல; சமூகத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் எப்படி நடக்க வேண்டும் என்று பாடம் எடுத்திருக்கிறது என்றே சொல்லலாம்.
பெண்களை ‘ப்ரொட்டாகனிஸ்ட்’ ஆகவும், முக்கியக் கதாபாத்திரங்களாகவும் பதிவு செய்த நல்ல சினிமா படைப்புகள் குறித்த பார்வையே நிழலழகி தொடர்.
ஆதி – ஆதிரா தம்பதிக்கு பூமி என்ற எட்டு வயது மகள். சந்தோஷமான நடுத்தரக் குடும்பம். இவர்கள் மூவரின் வாழ்க்கையும் ஒரு மழை நாளில் புரட்டி போடப்படுகிறது. நல்ல மழையில் பள்ளிக்கு குடையுடன் நடக்கும் பூமி, அம்மாவிடம் கோபித்துக்கொண்டு தனியாக சென்றுகொள்வேன் என நடக்கும்போது மழை காரணமாக வேறு பாதையில் சுற்றிப்போகும்படி அம்மா சொல்லிவிட்டு மகளை வழியனுப்பி வைக்கிறாள். சிறிது நேரத்தில் பூமி கொடூரமான நிலையில் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக போன் வருகிறது. ஆதிரா விரைந்து சென்று பார்க்கும்போது பூமி பள்ளிச் செல்லும் பாதையில் ஒரு குடிகாரனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டது தெரியவருகிறது. பூமி எப்படி அந்தச் சம்பவத்தின் பாதிப்பில் இருந்து மீண்டாள், குற்றவாளிக்கு சட்டம் என்ன தண்டனை கொடுத்தது? சமூகம் அதை எப்படி கையாண்டது? – இவைதான் திரைக்கதை.
பூமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காட்சிக்குப் பின் என்னுடன் படம் பார்க்க யதேச்சையாக என் இரண்டு மகள்களும் சேர்ந்து கொண்டனர். ஒருத்திக்கு 11, இன்னொருத்திக்கு 9 வயது. அவர்களுக்கு “குட் டச், பேட் டச்” உள்ளிட்ட அடிப்படை விழிப்புணர்வுகள் எல்லாம் ஏற்கெனவே சொல்லிக் கொடுத்துவிட்டேன். ஆனாலும் சின்னவள் ‘அந்தப் பாப்பாக்கு என்ன அச்சு? ஏன் ஹாஸ்பிடல்ல இருக்காங்க?’ என்ற கேள்விக்கு பதில் சொல்ல அதிகம் தடுமாறினேன். இதுவரை நான் அவர்களிடம் பலாத்காரம் பற்றி பேசியது இல்லை. நான் தடுமாறி பதில் சொல்லி முடித்ததும், திரையில் என் மகளின் ஒத்த வயதில் உள்ள குழந்தையான பூமிக்கு இயக்குனர் இதை எப்படி புரியவைத்து இருப்பார் என்று எண்ணியபோது வியப்பாய் இருந்தது.
அந்தச் சிறு பெண்குழந்தை தனக்கு நேர்ந்த கொடுமையை கையாண்ட விதம் மூலம் மொத்தப் படத்தையும் தூக்கி நிறுத்துகிறது பேபி சாதன்யாவின் நடிப்பு. பூமி கதாபாத்திரத்தின் மீது பரிதாபம், ஆறுதல், நம்பிக்கை என அத்தனையும் நமக்கு கொட்ட தோன்றும். மயக்கத்தில் இருந்து கண் விழித்ததும் “அவன் கெட்டவன், அவனை போலீஸ்ல பிடிச்சு குடுத்து தண்டனை வாங்கிக் கொடுங்கப்பா” என்று சொல்லும்போது கலங்கடிப்பாள். குழந்தை மொழியில் அந்தக் கொடூரனை கெட்டவன் என்ற சொல்லில் சொன்னதை வைத்து என் மகளுக்கு “ஒரு கெட்டவன் அந்த பாப்பாவை பேட் டச் பண்ணி அடிச்சு போட்டுட்டான்” என்றேன்.
ஊடகங்கள் செய்தியாய் விற்க ஆவல்படும் சமயத்தில், அவர்களிடம் இருந்து சற்றே தூரத்தில் இருந்து பூமியை மறைத்துச் செல்வார் அப்பா. அப்போது அவரிடம், “நான் ஏதாவது தப்பு பண்ணிட்டேனா அப்பா?” என்று கேட்கும் மகளின் வார்த்தை, இன்றும் பாலியல் பலாத்காரம் செய்தவர்களை விட, அதனால் பாதிக்கப்பட்டவர்களையே தப்பு செய்தவர்கள் போல் சித்தரிக்கும் அவலத்தைச் சுட்டிக் காட்டியது.
நிருபமா விஷயத்தில் கூட ‘நடு இரவில் பெண்ணிற்கு வெளியில் என்ன வேலை?’ என்று பூசி மழுப்பியவர்கள் வாழும் சமூகம் இது.
பெண் உறுப்பு, மலக்குடல் சேதம் அடைந்து இருப்பதால் செயற்கை மலச்சேகரிப்பு பையை சுத்தம் செய்ய அப்பா தனது ஆடையை தோடும்போது கத்தும் பூமி, எல்லா ஆண்கள் மீதும் நம்பிக்கை போய்விட்டதை உணர்த்துவாள். மனநல ஆலோசகர் உதவியுடன் கொஞ்சம் கொஞ்சமாய் இயலபு நிலைக்கு திரும்பும் பூமி, “அந்தக் கெட்டவன் கண்டிப்பாய் வெளியில் இருக்க கூடாது என் வகுப்பில் இன்னும் நிறைய பெண் தோழிகள் இருகாங்க. அவன் அவங்களையும் அப்படிச் செய்து விடுவான்” என்று சொல்லும்போது நமக்கே மனம் பதறும்.
கலகலப்பை பட்டாம்பூச்சி போல் துள்ளித் திரிந்த பூமி, நசுக்கப்பட்ட புழுவாய் மாறி யாரோடும் பேசாமல் தனிமையாய் இருந்து பின் அனைவரின் ஒத்தாசையுடன் தன் மன தைரியத்தால் அந்தச் சம்பவத்தில் இருந்து வெளிவந்து தொலைத்த வண்ணங்களை திரும்ப பெறும்போது பூமி என்னும் சின்ன குழந்தை நமக்கு பல பாடங்களை நடத்தி விடுகிறாள்.
அப்பா, அம்மா வேலையாய் இருப்பார்கள் என்று அவசர உதவிக்கு அழைத்து உதவி கேட்கும் தெளிவு. தப்பு செய்தவனுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்ற கோபம். தன் வயது பிள்ளைகளுக்கு இதுபோல் நடக்கக் கூடாது என்ற பொறுப்பு. பள்ளியில் மறுபடியும் சக மாணவர்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கை. கெட்டவர்கள் சட்டத்தின் ஓட்டை வழியாய் வெளியே வரக் கூடாது என்ற உறுதி என பூமி நம் மனதில் சுற்றிக்கொண்டே இருக்கிறாள்.
இந்தப் படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களும் குறிப்பாய் போலீஸ் அதிகாரி முதல் பள்ளியில் ஆசிரியர் வரை சமூகத்தில் ஒவ்வொருவரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் சொன்னவிதமும், குடியிருப்பு மற்றும் பள்ளிப்பகுதியில் மதுக்கடை இருப்பதன் விளைவின் தீவிரத்தை சொன்னதும் முக்கியமானவை. சட்டத்தில் இப்படிப்பட்ட குற்றங்களுக்கு இருக்கும் குறைந்தபட்ச தண்டனையும், விசாரணையில் இருக்கும் நடைமுறை சிக்கல்களையும் உணர்த்திய விதம் அருமை.
உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு இந்த அவலம் நடந்திடக் கூடாது என்று நம்மை எச்சரித்து, நமக்கு படம் மூலம் நடித்து பாடம் நடத்திய பூமி மனதில் இன்னும் பாரமாய் நிழலழகியாக தங்கிவிடுகிறாள்.
தொடர்வோம்…