கொல்லப்படும் கிணறுகள்: சூழலியலாளர் நக்கீரன்

நக்கீரன்

நக்கீரன்

கிணறுகளை நாம் என்னென்ன வடிவங்களில் பார்த்திருக்கிறோம்? வட்டம், சதுரம், செவ்வகம் அல்லது ஒழுங்கற்ற வடிவம் என்பதாகப் பார்த்திருப்போம். ‘ஸ்வஸ்டிக்’ வடிவத்தில் கிணறு பார்த்தவர்கள் எத்தனை பேர்? திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறையில் ‘மாற்பிடுகு பெருங்கிணறு’ எனப்படும் ஸ்வஸ்டிக் வடிவ கிணறு ஒன்று இருக்கிறது. ஆனால் இங்குள்ள மக்கள் இக்கிணற்றை இப்படி வடமொழி பெயெரெல்லாம் சொல்லி அழைப்பதில்லை. அவர்கள் எளிய தமிழில் ‘நாலு மூலைக் கேணி’ என்றே அழைக்கின்றனர்.

1200 ஆண்டுகளுக்கு முந்தைய கிணறு இது. `முப்பதுக்கு முப்பது சதுர வடிவிலான இக்கிணற்றில். நான்கு பக்கமும் படிக்கட்டுகள் இறங்குகின்றன. ஒவ்வொரு பக்கத்திலும் 52 படிகள் உள்ளன. உண்மையில் இதுவொரு சதுர வடிவக் குளம், படிகள் மட்டுமே நான்கு பக்கமும் நீண்டு ஸ்வஸ்டிக் வடிவில் அமைந்துள்ளது. ஸ்வஸ்டிக் என்கிற பெயரைக் கொண்டு இதை மதம் சார்ந்த வடிவமாகச் சிலர் திரிக்க முயல்கிறார்கள். உண்மையில் இது தமிழர்களின் பொறியியல் சாதனை.

படித்துறையை நேராக அமைத்திருந்தால் மிகப்பரந்த அளவில் இடம் தேவைப்படும். அதனால் நிலத்தின் தேவையைக் குறைக்கப் படிகளை மடித்து அமைத்தனர். ஆழமாகவுள்ள இக்கிணற்றின் சிறப்புக்கூறுகளுள் ஒன்று இங்குள்ள ஒரு படித்துறையில் குளிப்போரை அடுத்தப் படித்துறையில் குளிப்போர் பார்க்க முடியாது என்பதாகும். மேலும் இது சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய அழகிய கிணறு. இதுபோன்று நாம் எத்தனை செல்வங்களைக் கவனிக்காமல் விட்டிருக்கிறோம் அல்லது அழித்திருக்கிறோம் என்று தெரியவில்லை.

நல்லத்தங்காள் தன் பிள்ளகளைக் கிணற்றில் தள்ளிக்கொன்ற கதையைக் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் நாமோ கிணறுகளையே மூடிக் கொன்றுவிட்டோம். ஒருமுறை சென்னையில் திடீரெனப் பல கிணறுகள் மூடி தூர்க்கப்பட்டன. காரணம் நமது வாஸ்து வல்லுநர்களின் அரும்பணி. அப்போது மழைநீர் சேகரிப்பு இயக்குநராக இருந்த சேகர் ராகவன் வாஸ்துவின் பெயரில் திறந்த கிணறுகளை மூடி தூர்க்க வேண்டாம் அதில் மழைநீரைச் சேமிக்கலாம் எனக் கெஞ்சிக் கதறி வேண்டுக்கோள் விடுத்தார் பாவம்!

உண்மையில் மழைநீரை சேமிக்கக் கிணறுகளை விடச் சிறந்த அமைப்பு வேறில்லை. ஆகவே இன்று கிணறுகளை மீட்டெடுப்பது மிக மிக அவசியமாகும். தமிழகத்தின் பல இளைஞர்கள் இந்த அரும்பணியில் ஈடுப்பட்டிருப்பது மகிழ்வைத் தருகிறது. குறிப்பாகப் பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள் கிணறுகளைத் தூர் வாருவதில் முன்னணியில் இருக்கிறார்கள். இதேபோல் தர்மபுரி இளைஞர்கள் அங்குள்ள அரசுப் பள்ளிகளில் மழைநீர் சேகரிப்புக்காகத் தங்கள் சொந்த உடல் உழைப்பில் புதிதாகக் கிணறுகளைத் தோண்டிக் கொண்டிருப்பது பெருமை தரும் செய்தியாகும். இது போன்ற இளைஞர்களே தமிழகத்தின் எதிர்கால நம்பிக்கை.

ஊர் பொதுக்கிணறு என்கிற அமைப்பு மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும். அதில் சாதி மத வேறுபாடின்றி அனைவரும் புழங்குவதாக இருக்க வேண்டும். நீர் என்பது மக்களுக்கானது மட்டுமல்ல அவை அனைத்துயிர்க்குமானப் பொதுச்சொத்தாக இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தண்ணீர் தனியாரின் கைகளுக்குச் செல்லக்கூடாது. அனைவருக்கும் சமமான பங்கும் பொறுப்பும் இருந்தால்தானே அது பொதுச் சொத்து?

நம்முடைய அறிவிக்கப்படாத நீர் கோட்பாடு என்ன தெரியுமா? நடக்க இயலாத தாவரங்களுக்குதான் நிலத்தடி நீர் சொந்தம். நடமாடும் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் மழை நீரே சொந்தம்.

ஒளிப்படம் இணையத்தில் எடுக்கப்பட்டது.

எழுத்தாளர் நக்கீரன் ‘நீர் எழுத்து’ என்ற தலைப்பில் தனது முகநூலில் தொடர் பதிவை எழுதிக்கொண்டிருக்கிறார். அதன் 20வது பதிவு இது.

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி, பால் அரசியல் உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

One thought on “கொல்லப்படும் கிணறுகள்: சூழலியலாளர் நக்கீரன்

  1. இக்கட்டுரையைப் பதிந்தமைக்கு நன்றி. சுற்றுச்சூளல் உணர்வுள்ளவர்கள் இவரின் முகநுலை பிந்தொடர்தல் அவசியம். ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான, அர்ப்பணத்துடனான உழைப்பு.

    Like

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.