நக்கீரன்

இன்று நம் குழந்தைகளில் எத்தனை பேர் கிணறு பார்த்திருப்பார்கள்? தப்பித்தவறிப் பார்த்திருந்தாலும் அவர்களில் எத்தனை பேர் நீர் இறைத்து அல்லது குளித்து மகிழ்ந்திருப்பார்கள்? வாய்ப்பே இல்லை. கிணறு என்றால் என்னவென்றே அறியாத ஒரு தலைமுறையை உருவாக்கிவிட்டோம். ஆனால் நம் பண்பாடு கிணறுகளுடன் தோன்றிய பண்பாடு. ஆழமற்ற கிணறு போன்ற பள்ளத்தில் தேங்கிய நீர் ‘கூவல்’. கூவலை ஆழப்படுத்தினால் கிடைப்பதுதான் கிணறு. இதையடுத்துக் கூவம் என்றொரு சொல் இருந்தது. இது சென்னையின் கூவம் அல்ல. இதற்கு ஒழுங்கில் அமையா கிணறு எனப் பொருள்.
கொங்குநாடு போன்ற வன்புலமாயினும் சரி, சோழநாடு போன்ற மென்புலமாயினும் சரி அனைத்து இடங்களிலும் கிணறு இருந்திருக்கிறது. மென்புலத்தில் நிலத்தடி நீர் கிடைப்பது எளிது. அதுவே வன்புலத்தில் நிலத்தடியில் நீர் இருக்கிறதா என்பதறிய பல நுட்பங்கள் இருந்திருக்கின்றன. இதற்காகவே சில நூல்களும் இயற்றப்பட்டிருக்கின்றன. நாம் ஒருசில செய்திகளை மட்டும் இங்குக் காண்போம்.
ஆவாரம் செடி இருக்கும் நிலத்தின் அடியில் நீர் இருக்கும். இடி விழுந்த தென்னை மரம் இருக்குமிடத்தின் அடியில் நீரோட்டம் இருக்கும். அங்குக் கிணறு தோண்டினால் வற்றாத நீரோட்டம் இருக்கும். தண்ணீரற்ற வறண்ட பகுதிகளில் மிக மிருதுவான அருகம்புல் வளருமாயின் அவ்விடங்களில் ஆழத்தில் தண்ணீர் அகப்படும். ஒரு மரத்தில் ஒரு கிளை மட்டும் கீழ்நோக்கி வளைந்திருந்தால் அங்கு நீர் கிடைக்கும். கண்டங்கத்திரி முட்கள் இல்லாமல் பூக்களுடன் காணப்படின் அவ்விடத்தின் அடியில் நீர் கிடைக்கும் போன்றவை தவிர மரங்களை அடிப்படையாக வைத்தும் ஏராளமான அறிகுறிகள் சொல்லப்பட்டுள்ளன. .
புற்றுக்கண்ட இடத்தில் கிணறு வெட்டு என்றொரு பழமொழி உண்டு. ஏனெனில் கரையான் என்பவை நிலத்தடி நீர்க்காட்டிகள். நிலத்தின் கீழ் நீரிருக்கும் இடத்தைத் தேர்ந்தெடுத்தே அவை புற்றைக் கட்டுகின்றன. நீர்த்தன்மை நிறைந்த மண்ணைக் கொண்டே அவை புற்றினைக் கட்ட வேண்டும். எனவே பட்டறிவால் இப்படியொரு பழமொழியை உண்டாக்கி வைத்திருந்தனர். இப்போது கரையானைப் பார்த்தால் நமக்குக் கரையான் கொல்லிகள் மட்டுமே நினைவுக்கு வருகிறது.
மேற்கண்ட செய்திகளை நம்பி இன்று யாரும் கிணறு வெட்டிவிட முடியாது. வெட்டினால் பணம் காலி. ஏனெனில் கிணறு என்பதன் அடிப்படை அறிவையே நாம் இழந்தது நிற்கிறோம். முன்பு கிணறு தோண்டுவதற்கு இயற்கையை மீறாத சில வழிமுறைகளை நாம் வைத்திருந்தோம். அதில் முதன்மையானது நிலத்தடி நீர்வளம். இன்றுபோல் ஆயிரம் அடிகள் ஆழத்துக்கெல்லாம் அறிவற்று நாம் நீரை உறிஞ்சியதில்லை. ஆங்கிலத்தில் Aquifer என்று அழைக்கப்படுவது தமிழில் நீரகம் அல்லது நீர்த்தாங்கி என அழைக்கப்படுகின்றது. ஏறக்குறைய நூறடி ஆழத்துக்குக் கீழேயுள்ள நிலத்தடி நீர்தான் நீரகம் ஆகும். பெரும்பாலும் நீரகத்தில் கைவைக்காத கிணறுகள்தான் நம் கிணறுகள். நிலத்துக்கும் நீரகத்துக்கும் இடையிலுள்ள Subsurface water நீரையே நாம் பயன்படுத்தி வந்தோம்.
நீர்நிலைகளை Surface water என்றும், நிலத்துக்குக் கீழுள்ள நீரை Subsurface water என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. இவற்றைத் தற்காலத் தமிழில் ‘மேற்பரப்பு நீர்’ என்றும் ‘நிலத்தடி நீர்’ என்றும் குறிப்பிடுகிறார்கள். இவற்றைவிடப் பொருத்தமான சொற்கள் மணிமேகலையில் காணப்படுகிறது. ‘பரப்புநீர்ப் பொய்கையுங் கரப்புநீர்க் கேணியும்’ (காதை 19: 104). மேற்பரப்பு நீருக்கு ‘பரப்பு நீர்’ என்றும் நிலத்திலுள்ள நீருக்கு ‘கரப்பு நீர்’ என்றும் துல்லியமான சொற்களைத் தந்துள்ளது. இவற்றை முறையே ‘பரந்துறை நீர்’, ‘கரந்துறை நீர்’ என்றும் குறிப்பிடுவர். மணிமேகை வரியில் ‘கரப்புநீர்க் கேணியும்’ என்கிற சொல் மிகத் துல்லியமாகப் பொருந்துகிறது. ஏனெனில் இத்தகைய நீர் சுரக்கும் நிலப்பகுதியில் மட்டுமே நம் முன்னோர்கள் கிணறுகளை அமைத்திருந்தார்கள்.
கரப்புநீர் மழைநீரால் மட்டுமே நிலப்பகுதியில் சேமிப்பாகும். இக்கரப்பு நீர் அளவைக் குறைய விடாமல் நம் முன்னோர்கள் வைத்திருந்தார்கள் என்பதுதான் சிறப்பு. இந்நீர் வளமானது அப்பகுதியில் சேமிக்கப்படும் மழைநீர் அளவைப் பொறுத்தது என்பதால் அதனை நிலத்தடியில் சேமிக்க மரங்களின் அடர்த்தியைப் பாதுகாத்தார்கள். குறிப்பாகக் கிணற்றுக்குப் பக்கத்தில் நீரைச் சேமித்துத் தரும் பனையை வளர்த்தனர். அதுமட்டுமன்றி அருகிலுள்ள குளம் போன்ற நீர்நிலைகளையும் பாதுகாத்து வந்தார்கள். இதன் விளைவாகக் கிணற்றில் நீரளவு மாறாதிருந்தது. வேளாண்மைக்குப் பயன்படுத்தப்பட்ட கிணறுகளும் கூடக் கரப்பு நீரையே பயன்படுத்தின.
அன்று கமலையைக் கொண்டு நீர் இறைக்கப்பட்ட கிணறுகளில் கமலை நீர் இறைக்கும் அளவும், கிணற்று நீர் ஊறும் அளவும் சமமாக இருந்தது. ஒரு சால் நீரை வாய்க்காலில் ஊற்றிவிட்டு அடுத்தச் சால் இறைக்கப் போகுமுன் கிணற்றில் நீர் ஊறிவிடும். இன்று Sustainability Water Management’ என்றழைக்கப்படும் வளங்குன்றா நீர் மேலாண்மையை அன்றே பின்பற்றியவர்கள் நாம். இதன் விளைவு நீரகம் பாதுகாப்பாக இருந்தது.
இப்படியான நீர் மேலாண்மை செய்து வாழ்ந்த நம்முடைய வயலில் வேதியுப்புக்களைக் கொட்டி; பயிருக்குச் செயற்கையாகத் தண்ணீர் தாகத்தை ஏற்படுத்தி; அதை ஈடுசெய்ய ஆயிரம் அடி ஆழத்துக்கு நீரை உறிஞ்சும் நுட்பத்தையும் அறிமுகப்படுத்தி; நிலத்தடி நீரை அழித்ததோடு கூடவே நம் கிணறுகளையும் அழித்துவிட்டது கார்ப்பரேட் அறிவியல்.
ஒளிப்படம்: ஏ.சண்முகானந்தம்
எழுத்தாளர் நக்கீரன் ‘நீர் எழுத்து’ என்ற தலைப்பில் தனது முகநூலில் தொடர் பதிவை எழுதிக்கொண்டிருக்கிறார். அதன் 18வது பதிவு இது.
நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி, பால் அரசியல் உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார்.