(தலைவர் கிருஷ்ணசாமி அவர்கள் கூறிய இந்துத்துவம் சார்ந்த சர்ச்சைக்குரிய கருத்துகளை அனைவரும் விவாதித்தாகிவிட்டது. எனக்கும் அதில் தலைவர் மீது மிகப்பெரிய வருத்தம் தான்.
ஆனால் ஏன் ஒருவர் கூட அவர் திராவிடத்தின் மீது வைத்த குற்றசாட்டை விவாதத்திற்கு உட்படுத்தவில்லை.
1. திராவிடம் சமூகநீதிக்கு எதிரான திசையில் பயணிக்கிறது என்கிறார். உண்மையா? இல்லையா?
2. இரண்டு திராவிட கட்சிகளின் (திமுக & அதிமுக) தென்மாவட்ட மாவட்ட செயலாளர்கள் தேவர் சாதியாகவும், கொங்கு மண்டல மாவட்ட செயலாளர்கள் கவுண்டர்களாகவும், வடக்கு மாவட்ட செயலாளர்கள் வன்னியர்களாகவும் மட்டுமே இருக்கிறார்கள். ஏன் அதிகாரம் இடைச்சாதிகளின் கைகளில் மட்டும் கொடுக்கப்படுகிறது என்று கேட்கிறார்.
3. தேவர்-பள்ளர் சண்டை, வன்னியர்-பறையர் சண்டை, கவுண்டர்-அருந்ததியர் சண்டையை தூண்டி விடுவதே திராவிட கட்சிகள் தான் என்கிறார். உண்மையா? இல்லையா? இதை நிறுத்துவதற்கு திராவிட கட்சிகள் செய்தது என்ன?
4. முக்கியமாக அண்டை மாநிலங்கள் எங்கும் இல்லாத அளவுக்கு 200 க்கும் மேற்பட்ட சாதிய ஆணவ படுகொலைகள் தமிழகத்தில் மட்டும் ஏன் நடக்கிறது என்ற கேள்வியையும் எழுப்பியிருக்கிறார்.)Viji Ambedkar avrkalin intha pathivirku en pathileedu. Avarin comment boxil idamillai.aakaiyaal ingee pathividukiren.
மருத்துவர் அவர்களின் குற்றச்சாட்டு நியாயமானது. ஆனால் அவர் திராவிட இயக்கம் எனறு எதைச் சொல்கிறார் அல்லது உணர்கிறார் என்பது மிக முக்கியம். திராவிடம் என்ற சொல்லாடல் ஓர் அரசியல் தத்துவக் குறியீடு. அது நிலவரையறைச் சார்ந்தோ அல்லது மொழிவரையறைச் சார்ந்தோ புரிந்துக்கொள்ளப்படுவது அன்று. எப்படி தலித் என்ற சொல்லின் தத்துவக கோட்பாடு இருக்கின்றதோ அதைப் போல. (தலித் என்பதையே கி.சா அவர்கள் ஏற்பதில்லை). அந்தத் தத்துவம் என்பது இந்து இந்தி இந்தியா என்னும் தத்துவங்களுக்கு மாற்றாக வைக்கப்பட்டது. அங்கு மறுக்கப்பட்ட ஜாதி ஒழிப்பு,கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, சமூகநீதி, இடஒதுக்கீடு போன்றவை இங்கு மையம். திராவிடம் சூத்திரர்களையும் பஞ்சமர்களையும் இணைப்பதற்கான வேலைதிட்டங்களைக் கொண்டது.
அதை நோக்கிய கால அளவுகள் நீண்டதாலும் அவற்றை காத்திரமாக முன்னெடுத்த தலைவர்கள் இறந்துபோனதாலும் திராவிடம் என்னும் தத்துவம் வழக்கொழிகிறது. அத்தத்துவத்தின் நீர்த்தத் தன்மையோடு பிரிந்த இயக்கங்கள் ஆட்சியாளர்களாக வந்தபிறகு, ஆட்சியும் அதன் ருசியும் அவர்களை மலிவானவர்களாக மாற்றி ஊழல், பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் பிரிவினைத்தூண்டல் ஆகியன நிகழ்கின்றன. கூடுதலாக பிற்படுத்தப்பட்டவர்கள் தங்களின் ஜாதி ஆதிக்கத்தை உணர்ந்தவர்களாக ஆண்ட பரம்பரை சத்திரிய ஜென்மம் என்று பேசி ஓட்டு வங்கிகளாக அணியமானபோது நீர்த்த திராவிட இயக்கங்கள் அவற்றைப்பயண்படுத்தலாயின.
தன் தாய்க்கே முதல்வரின் தாய் என்னும் அடிப்படையில் எந்தப் பலனும் போகக்கூடாது என்ற பெருந்தலைவர் காமராஜர் நாடார் ஜாதியின் குறியீடானார். கப்பலோட்டிய சிதம்பரம் முதலியார் ஜாதியின் குறியீடு. பிரபாகரன்கூட தமிழ்நாட்டில் ஒரு ஜாதியின் குறியீடு தான். இப்படி ஜாதிக்கோட்பாடு திராவிட கோட்பாட்டிற்கு எதிரானது, மதக்கோட்பாடு திராவிடக்கோட்பாட்டிற்கு எதிரானது என்பது தெரியாமலேயே ஒரு தலைமுறை இந்த இயக்கங்களுக்குப் பொறுப்பாளர்களாக வருகிறார்கள் ஸ்டாலின் உட்பட.
அதனால் திராவிட கோட்பாடுகள் மறைந்து திராவிட என்னும் பெயரில் இந்துத்துவக் கோட்பாட்டுன் இவ்வியக்கங்கள் இயங்குகின்றன. மதம், ஜாதியைத் துறந்தவர்கள்தான் இந்த இயக்கங்களில் இருக்க வேண்டும் என்று சொன்னால் கூடாரங்கள் காலி ஆகிவிடும். ஆனால் உண்மையான திராவிட இயக்கங்கள் தேர்தலில் நிற்காத பெரியாரிய இயக்கங்கள். இவை ஏதாவது கி.சா கூறும் குற்றச்சாட்டுகளுக்கு உட்படும் என்றால் அவை நியாயமானவை எனலாம்.
அத்வாலே செய்யும் தவறுக்கு தலித்தியல் எப்படி குற்றம் சுமத்தப்படும். நாம் வாழும் காலத்திலேயே கான்சிராம் BAMCEF என்ற அமைப்பினைத் தொடங்கி பகுஜன் ஆட்சி மாற்றத்திற்கு வழி கோலினார் இப்போது Backward and most backwards என்ன ஆனார்கள்? இதுதான் திராவிடம் என்னும் கோட்பாட்டிற்கும் நிகழும் அநீதி.
தென்னாட்டு கருப்பர்கள் என்று வடநாட்டு வெள்ளையர் தருண் பேசியது ஆரியம். வடவியம். அது தவறு என தென்னாட்டு மல்லிகார்ஜூன கார்க்கே இந்தியாவை அந்தப் பேச்சு பிரிக்கும் என பாராளுமன்றத்தில் பேசியது திராவிடம்,தென்னியம்.
திராவிடம் என்னும் தத்துவத்தை கி.சா மட்டுமல்ல எவரும் குறை சொல்ல முடியாது. SC இடஒதுக்கீட்டில் மருத்துவராக மாறி வசதிகள் வந்தபின் நாங்கள் அவர்கள் அல்ல என்று சொல்வது என்ன நியாயம் என்றே தெரியவில்லை. இன்னும் இடஒதுக்கீட்டின் பயனை அடையாத இளைஞர்களின் வாழ்க்கையை எண்ணிப் பாருங்கள் பெருமான்களே. நீங்கள் பி.வ. ஆகிவிட்டால் இடஒதுக்கீடு வேண்டுமா வேண்டமா எனக்கூறுங்கள். அல்லது பார்ப்பனராகிவிட்டால் அர்ச்சகராகி விடுவீர்களா கூறுங்கள். அமித்ஷாவின் தமிழ்குரலாய் நீங்கள் ஒலிக்க மக்கள் பலியா தலைவரே!
யாழன் ஆதி, கவிஞர்; செயல்பாட்டாளர்.