அ. மார்க்ஸ்

‘கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்’ எனும் நூல் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல் நாசர் அவர்கள் எழுதி நண்பர் செந்தில்நாதன் அவர்களின் ஆழி பதிப்பகத்தால் இரண்டாண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.
காவலர் ஒருவர் கொல்லப்பட்டதை ஒட்டி கோவையில் நடைபெற்ற கலவரத்தில் (Nov 1997) சுமார் 14 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். இது குறித்து அகில இந்திய அளவில் அமைக்கப்பட்ட PUCL உண்மை அறியும் குழு அறிக்கை இந்தக் கலவரத்தில் காவல்துறையும் இந்துத்துவ அமைப்புகளும் இணைந்து இந்த வன்முறைகளை நிகழ்த்தின என்பதை மிக விரிவாக அம்பலப்படுத்தி இருந்தது.
அடுத்த இரு மாதத்தில் (Feb 1997) அங்கு நிகழ்ந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 50 க்கும் மேற்பட்ட அப்பாவி பொது மக்கள் கொல்லப்பட்டனர். அதை ஒட்டி நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு அவர்களில் பலர் குறைந்தபட்சம் ஒன்பது ஆண்டுகள் வரை சிறைகளில் இருந்தனர். இன்னும் கூட சுமார் 40 க்கும் மேற்பட்டோர் சிறைகளில் உள்ளனர்.
இந்தத் தொடர் வெடி குண்டு தாக்குதலை ஒட்டி நடைபெற்ற போலீஸ் தேடுதலில் கோவை முஸ்லிம்கள் மீது பல அத்துமீறல்கள் நடைபெற்றன. ஓடி ஒளிந்த ஐந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்ட கொடுமையை நாங்கள் அமைத்த ஒரு உண்மை அறியும் குழு வெளிக் கொணர்ந்தது. கோவைக் கலவரங்கள் குறித்த இப்படியான மூன்று உண்மை அறியும் குழு அறிக்கைகள் தொகுக்கப்பட்டு என்னுடைய முன்னுரையுடன் ஒரு குறு நூலாகவும் வெளி வந்துள்ளது.
கலவரங்கள் நடந்தபோது சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஏ.வி.அப்துல் நாசர் அவர்களை மகாத்மா காந்தியின் பேரரும், பத்திரிகையாளர் மற்றும் நூலாசிரியருமான துஷார் காந்தி அவர்கள் சந்தித்து போலீஸ் கெடுபிடிகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிகளுக்கு உதவுமாறு வேண்டிக் கொண்டார். கல்லூரி நிகழ்ச்சி ஒன்றுக்காக துஷார் காந்தி சென்னை வந்தபோது இந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
இதை ஒட்டி நாசர் அவர்கள் அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியைச் சந்தித்து அனுமதி பெற்று கோவைக்குச் சென்று அங்கு பலரையும் சந்தித்து வந்து முதல்வரிடம் தான் கண்டவற்றைப் பகிர்ந்து கொண்டார்.
இந்த அனுபவங்களை நாசர் அவர்கள் “கோவைக் கலவரத்தில் எனது சாட்சியம்” எனும் தலைப்பில் ஒரு நூலாக எழுதியுள்ளார். அவர் வாய் மொழியாகக் கூறியவற்றுக்கு இளம் எழுத்தாளர் பழனி ஷஹான் எழுத்து வடிவம் கொடுத்துள்ளார். ஆழி பதிப்பகம் அந்நூலை வெளியிட்டுள்ளது. அதற்கு நான் ஒரு விரிவான முன்னுரை எழுதியுள்ளேன்.
இந்ந்நிலையில், நூல் வெளிவந்து இரண்டாண்டுகளுக்குப் பின் இப்போது தமிழகக் காவல்துறை தன் கெடுபிடிகளைத் தொடங்கியுள்ளது. பதிப்பாளர் ஆழி செந்தில்நாதன் அவர்களை இந்த நூலை ஏன் வெளியிட்டீர்கள் என விசாரித்துள்ளனர். எழுத்து வடிவம் கொடுத்த காரணத்திற்காக ஷஹானையும் விசாரித்துள்ளனர். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் நாசர் அவர்களை உங்கள் நூல் காவல்துறைக்கு எதிராக உள்ளது, உங்களை விசாரிக்க வேண்டும் என அழைத்துள்ளனர். முறையாகச் சம்மன் அனுப்புங்கள் வருகிறேன் என அவர் பதிலிறுத்துள்ளார்.
நூல் ஒன்றை எழுதியதற்காக இரண்டாண்டுகளுக்குப் பின் ஒரு முன்னாள் மக்கள் பிரதிநிதி விசாரிக்கப்படக் கூடிய அவலம் தமிழக எடுபிடி அரசு எங்கே போய்க் கொண்டுள்ளது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக
அமைகிறது.
இந்திய மற்றும் தமிழ்நாட்டுக் காவல்துறைகள் அத்துமீறல்களுக்குப் பெயர்போனவை. இவை நடத்தும் போலி என்கவுன்டர் படுகொலைகள் உலகப் பிரசித்தம். அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி முல்லா அவர்கள், தான் வழங்கிய தீர்ப்பு ஒன்றில் கிரிமினல் கும்பல்களைக் காட்டிலும் ஒருங்கு திரட்டப்பட்ட போலீஸ் கும்பல் மோசமானது எனக் குறிப்பிட்டார் (1961). போலீசில் நல்லவர்களும் உள்ளார்களே எனக் கூறி காவல்துறை தீர்ப்பை மறு பரிசீலனைச் செய்ய விண்ணப்பித்தபோது “ஒரு கூடை நாறிய மீன்களில் நல்ல மீனைத் தேடும் முட்டாள் நானல்ல” என அவர் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார்.
எத்தனையோ நூற்றுக்கணக்கான வழக்குகளில் காவல்துறையை நீதிமன்றங்கள் இப்படிக் கண்டித்துள்ளன. ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட எத்தனையோ காவல் அதிகாரிகள் சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். நூற்றுக் கணக்கான உணமை அறியும் குழு அறிக்கைகளில் மனித உரிமை அமைப்புகள் காவல்துறையைக் குற்றம் சாட்டியுள்ளன. விமர்சித்துள்ளன. கண்ணியம் மிக்க காவல்டுறை அதிகாரிகளே இப்படியான கொடுமைகளைச் சுட்டிக்காட்டி நூல்களை எழுதியுள்ளனர்.
காவல்துறை விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது அல்ல.
மக்கள் பிரதிநிதி ஒருவர் முதல்வர் அனுமதி பெற்றுச் சென்று வந்த தன் அனுபவங்களைப் பதிவு செய்ததற்காக இப்படிக் கெடுபிடி செய்வது என்பது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஜனநாயக உரிமைகளில் நம்பிக்கை உடைய அனைவரும் தமிழகக் காவல்துறையின் இந்தக் கெடுபிடிகளைக் கண்டிப்போம்.
அ. மார்க்ஸ், எழுத்தாளர்; மனித உரிமை செயல்பாட்டாளர்.