பீட்டர் துரைராஜ்

அமுதன் அடிகள் இலக்கிய விருது மார்ச்சு மாதம் தமிழ் நதிக்கு வழங்கப்பட்டுள்ளது. வாசகசாலை இந்நாவலுக்கு திறனாய்வுக் கூட்டம் நடத்தியுள்ளது. விகடன்.காமிற்காக நியாஸ் அகமது தொகுத்த 2016 ல் கவனம் கொள்ளத் தக்க நூட்கள் பட்டியலில் இதனைப் பரிந்துரைத்திருக்கிறார் பத்திரிக்கையாளர் மாரி செல்வராஜ். இந்நாவலைப் படித்து முடித்தபிறகு நாம் ஒரு மாற்றத்தை கண்டிப்பாக உணரமுடியும் என அறுதியிட்டு கூறுகிறார் தி.க. வழக்கறிஞர் அருள்மொழி. இவ்வளவு அங்கீகாரத்திற்கும் பொருத்தமானது இந்த நாவல்.
கிட்டத்தட்ட 1983 முதல் 1990 வரை இலங்கையில் ‘போரால் அலைக்கழிக்கப்படும் ‘ ‘பரணிகளையும் ‘ ‘வானதிகளையும்’ பற்றித்தான் இந்தக்கதை.
இலங்கையின் ஒரு சாதாரண கிராமத்திலிருந்து 12 பேர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சேருகின்றனர்.அவர்களில் ஒருவன் பரணி. ( அவனை அழைத்துச் சென்றவர் வேறு இயக்கத்தில் சேர்த்திருந்தால் அதில் சேர்ந்திருப்பான்). இந்தியாவில் பயிற்சி எடுக்கிறான்; படிக்கிறான், விவாதிக்கிறான், மக்களை நேசிக்கிறான், மக்களோடு இருக்கிறான், தாக்குகிறான்,சக போராளிகளுக்கு தண்டனை வழங்குகிறான். உயிருக்கு பணயம் வைத்து ஓடுகிறான். இவ்வளவு தியாகம் புரிந்த அவன் எப்படி புரிந்து கொள்ளப்படுவான். தியாகியாகவா? துரோகியாகவா?
அவன் கிராமத்தைச் சார்ந்த வானதி முதலில் பள்ளியில் பின்னர் பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள். பரணியும் வானதியும் காதலிக்கிறார்கள். அவள் தன் குடும்பத்தோடு தொடர்ச்சியாக இடம் பெயர்கிறாள்; அல்லல் படுகிறாள். முதலில் சிங்கள இராணுவத்தால் பின்னர் இந்தியனாமியால். அவள் தந்தை அருமைநாயகம், அம்மா தனபாக்கியம் அற்புதமான கதாபாத்திரங்கள்; ஒரு அல்லலுறும் குடும்பம் எனலாம். ஜீவானந்தம் போன்ற பொது மனிதன் எழுப்பும் கேள்விகளுக்கு என்னமாதிரியான எதிர்வினை ஆற்றப்படும் ?
கதை எளிய வார்த்தைகளில், ஒரே நேர்க்கோட்டில் செல்லும் யதார்த்தமான நாவல். பல அழகு தமிழ்வார்த்தைகள் ( திறப்பு(சாவி), வதையடி(ராகிங்), கைலேஞ்சி(கைக்குட்டை),உள்ளரசியல்) பயன்படுத்தப்பட்டுள்ளன. அறம் சார்ந்த பல கேள்விகளை இந்நாவல் எழுப்புகிறது. அந்தரங்க சுத்தியோடு சுய விமரிசனங்கள் வருகின்றன. சக போராளிகளின் உயிருக்கு மதிப்பு உண்டா இல்லையா ?மாத்தையாவோடு முரண்பட்டதால் ‘ தன்னைகொல்லக் கொடுப்பதற்கான’ பணியை கொடுப்பதன் அதிகார அகம்பாவம் இயக்கத்தில் வரலாமா?
பார்த்த்தீனியம் செடி இந்தியாவில் இருந்த வந்த தீங்கற்றதாய் தோன்றும் செடி. ஆனால்’ நிலத்தில் இருக்கிற சத்தையெல்லாம் உறிஞ்சிப்போடும். அதைவிட தனக்குப் பக்கத்தில் எந்தவொரு செடியையும் அழிச்சிப்போடும்’ ‘ இந்தியாவும் பார்த்தீனியமும் ஒன்றுதான் ‘, என்பது கதை சொல்லும் சேதி. ஒருவேளை சுதந்திர ஈழம் மலர்ந்திருந்தால் ஆணாதிக்க மனோபாவத்திலிருந்து ஆட்சி விடுபட்டிருக்குமா? சாதிய படிநிலை உடைக்கப்பட்டு சமநிலை எய்வதற்கான உள்ளீடு அந்த விடுதலை இயக்கத்திற்குள் இருந்ததா? சுதந்திர ஈழத்தில் “மாத்தையாக்கள் ” கையில்தான் நிர்வாகம் இருந்திருக்கும். அந்த நிர்வாகத்தில் பரணிகள் நிலை என்ன? இது போன்ற பல கேள்விகளை அழகுணர்ச்சி சற்றும் குறையாமல் எழுப்புகிறார் தழிழ் நதி. இந்நாவல் பல்லாண்டு காலம் பேசப்படும்.
நற்றிணை பதிப்பகம்/ 512 பக்கம்/ ரூ.450/ ஏப்ரல் 2016.