சதிஷ் செல்லத்துரை
ஒரு படத்தை படமாக பார்க்க மட்டும் கடக்க இயலாது. ஏனெனில் சமூகத்தில் ,அரசியலில் ஆகப்பெரும் பாதிப்பை தமிழகத்தில் சினிமாக்கள் ஏற்படுத்தியுள்ளன என்பது மறுக்க இயலா உண்மை.
பராசக்தி முதல் பாகுபலி வரை பல சினிமாக்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பொதுப்புத்திகளை உருவாக்குகின்றன. கட்டமைக்கின்றன. அல்லது பொதுப்புத்திகளை உடைக்கின்றன. ஏற்றுக்கொள்ள கடினமான நியாயங்களை பேசுகின்றன.முதல் வகை சினிமாக்களால் நிறைந்த தமிழ் சினிமா உலகில் இரண்டாம் வகையில் எடுப்பதாக நைச்சியமாக முதல் வகையான சினிமாக்களை தருவதெல்லாம் ஒரு வகையான திறமை. பாமரன் கடிதங்கள், வே. மதிமாறன் போஸ்ட்களில் அந்த சூட்சும சூத்திரம் புரியலாம்.
பாகுபலி ஒரு பிரம்மாண்ட க்ராபிக்ஸ் இந்திய சினிமா என்பதை கடந்து அதனுள்ளிருக்கும் நுட்பமான அரசியல் அபாயகரமானது. இந்து மத அடிப்படையே வர்ணத்திலானது. அந்த வர்ண அடிப்படையிலான சத்ரிய வர்ணத்தின் வாயாக பேசுகிறது பாகுபலி.
சத்ரியன் என்கும்போதே மிச்ச வர்ணங்கள் உறுதியாகி விடுகின்றன. யார் யார் என்னவென.ரஜினியும் கமலும் நிற்கும் போட்டோ ஒன்றில் இதுதான் ரஜினி என காட்டி விட்டால் இன்னொருவர் கமல் என சுட்டும் முறையை பயன்படுத்தி நாயகன் பாகுபலியை சத்ரியனாக காட்டி விட்ட இயக்குனர் கட்டப்பாவை யார் என பெயர் சூட்டவில்லை எனினும் அடிமை நாய் என அழுத்தம் திருத்தமாக பதிவு செய்கிறார்.
வீரம், அரசாளும் மாட்சிமை என சத்ரியனின் குணமாக காட்டப்படும் பாகுபலியில் இட்ட வேலையை செய்து முடிக்கும் அடிமை குணமாக கட்டப்பா நிறுத்தப்படுகிறான்.
மனு தர்ம விதிப்படி சத்ரியன் போர்க்களம் காண்பவன் எனில் அவர்களுக்கு பணி செய்யும் அடிமைகளாக நாயாக யார் இருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
இதற்கு முன் பல அரசர் பெருமை பேசும் பல சினிமாக்கள் வந்திருந்தாலும் சத்ரியன் என பேசியதை விட மன்னர் பெயர் அல்லது மண் சார்ந்த பெருமை பேசியே பார்த்ததாக நியாபகம். இங்கு மகிழ்மதி பெருமை பேசி எடுத்து கடந்திருக்கலாம். ஆனால் சத்ரிய பெருமை பேசுகிறது பாகுபலி. அதனாலயே கட்டப்பாவை யார் என சிந்திக்க தூண்டுகிறது சினிமா அரசியல்.
இதெல்லாம் அவசியமில்லா ஆராய்ச்சி எனலாம். என்ன விளைவாகி என்ன ஆகப்போகுது என தோணலாம்.இந்து மத வர்ண அடிப்படையிலான ஜாதிய அடுக்கு முறை இப்படியான சினிமாக்களால் வலுவாக்கப்படும். நம்மை அறியாமல் கட்டப்பாக்களாக கண்மூடித்தனமான விசுவாசம் காட்டுவதே தர்மம் என நிலை கொள்வோம். அடிமைத்தனத்தை பெருமையாக ஏற்கும் மன நிலை இயல்பாகும்.எதிர்த்து பேசுதல் அடிமைகளுக்கு அழகல்ல என பதியப்படுகிறது நம் மனதில்.
பாகுபலிக்கு இணையாக வீரம் காட்டும் கட்டப்பாக்கள் கடைசி வரை அடிமையாக வாழ்வதே கடமை என்பதும் அரசாளுவதை சிந்திக்க கூட தூண்டாத காட்சிப்படுத்துதல் என்பது உளவியல் ரீதியாக மனுதர்மத்தினை நம்மீது சுமத்துவதும், பார்ப்பனியத்தை இயல்பாக்குவதும் அது சரி என நியாயப்படுத்துதலுமான சினிமா வழி பார்ப்பனியம் ஆகும்.
இஸ்லாமியர்கள், நர்சுகள், திருநங்கைகள், வீட்டுப்பணியாளர்கள் முதல் பல உழைக்கும் மக்களை அவர்களின் வாழ்வியலை சந்தேகத்தோடு, இழிவோடு, கிண்டலோடு அணுகுவதை பொதுத்தன்மையாக இயல்பானதாக குற்ற உணர்ச்சியின்றி செயல்பட வைத்ததில் வெகு ஜன ஊடகங்களுக்கும், சினிமாவிற்கும் மிக முக்கிய பங்குண்டு. மிக தாமதமாக இதனை புரிந்த போது ஸ்லீப்பர் செல்களாக, படுக்கைக்கு பறக்கும் பெண்களாக பலரும் பலவிதமாக பொதுப்புத்திக்கு இரையாகிருப்பதை உணர முடிகிறது.
ஏற்கனவே இங்கே ஆடிக்கொண்டிருக்கும் ஆண்டப்பரம்பரை ஆர்ப்பாட்டங்களுக்கு நடுவில் இனி அவர்களின் போஸ்ட்டர்களில் வீர சத்ரியன் பாகுபலி மினுங்கலாம். ஏனெனில் இங்கு சினிமா சினிமா மட்டுமல்ல. அதற்கும் மேலே.