வினுச்சக்ரவர்த்தி: நம் மூதாதையரை நினைபடுத்திய கலைஞர்!

கவிஞர் மகுடேசுவரன்

மகுடேசுவரன்

எண்பதுகளின் திரைப்படங்களைப் பார்த்து வளர்ந்த தலைமுறையினராகிய நாங்கள் நம்பியாரைப் பார்த்தோ மனோகரைப் பார்த்தோ பயப்பட்டவர்கள் அல்லர். மண்வாசனையின் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்டைப் பார்த்துத்தான் பயப்பட்டோம். “யோவ் கோணைவாத்தி… இது ஒன்னும் கவர்மெண்ட்டுப் பள்ளிக்கூடம் இல்லய்யா… கர்ரஸ்பாண்ட்டுப் பள்ளிக்கூடம்… கர்ரஸ்பாண்ட்டு… பார்த்து நடந்துக்குங்க…” என்று பேசுகையில்தான் பயந்தோம்.

அந்த நடிகர் பெயர் வினுச்சக்ரவர்த்தி என்பதுகூட வளர வளரத் தெரிந்துகொண்டதுதான்.”மண்வாசனை” திரைப்படத்திற்கு என் பட்டியலில் எப்போதும் இடமுண்டு. கரிசல்பட்டியும் காக்கிநாடன்பட்டியும் அடித்துக்கொள்ளும் அந்தப் படத்தில் காக்கிநாடன்பட்டி பஞ்சாயத்துத் தலைவர்தான் வினுச்சக்ரவர்த்தி. “என் தம்பி மட்டும் மருந்து வெக்கலைன்னா அந்த மாட்டை உங்க ஊரு ஆளு தொட்டிருக்க முடியுமா ?” என்று சாராயக்கடைக்காரி கேட்க, “இதா பாரு… மாட்டைப் புடிச்சது நாங்கதான்னு ஊர் முழுக்க மார்தட்டிப்புட்டோம். இனிமே முன்வெச்ச கால பின்ன வெச்சோம்… எங்க ஊர் மானமே போயிடும். மாட்டப்புடிச்ச ரகசியத்த உன் நெஞ்சுக்குள்ளயே வெச்சுக்க… மத்ததை அப்புறம் பார்த்துக்குவோம்…” என்று சொல்கின்ற அந்தக் கொடுமிடுக்கு மறக்கக்கூடியதா என்ன ?

மண்வாசனை நாயகி முத்துப்பேச்சி தன் மாமனைச் சேர்வாளா என்ற பதற்றத்தைத் தொடர்ந்து நிலைநிறுத்தியதில் அதில் நடித்த வினுச்சக்ரவர்த்தியின் தோற்றத்திற்கும் பங்குண்டு. அப்படத்திற்குப் பிறகு அதில் நடித்தவர்கள் எல்லாரும் ஒரு வட்டம் வந்தார்கள்.

அடுத்து “மண்ணுக்கேத்த பொண்ணு” என்னும் திரைப்படம். நடிகர் இராமராஜன் நடிக்க வருவதற்கு முன் இயக்கிய முதல்படம். நல்ல திட்டமான திரைக்கதை. நாயகியின் தந்தை வேடம் வினுச்சக்ரவர்த்திக்கு. மண்வாசனையில் சம்பாதித்த “கொடுமைக்காரன்” என்னும் பெயர் இப்படத்தில் “ஆள் நல்ல மனுசன்தான்பா” என்று நினைக்குமளவுக்கு மாறியது. ஏறத்தாழ அதே நடிகர்கள். மனைவியிடம் எந்நேரமும் மையல் தீராமல் திரியும் பெரியவர் வினுச்சக்ரவர்த்தி. மனைவி காந்திமதி. தங்கள் சரசத்தை வீட்டு வேலைக்காரனும் மகளும் கண்டுவிட்டாலும் ஆள் ஓயமாட்டார். தொண்டையைச் செருமியபடி “சரிசரி… மோர எடுத்துட்டு உள்ள வா…” என்று மனைவிக்குக் கட்டளையிட்டுச் செல்பவர்.

அடுத்து வந்த படம் முதல் வசந்தம். தொடக்கத்தில் அப்பாவிப் பாண்டியனைப் புரட்டியெடுக்கும் குடிகார அடியாளாக வினுச்சக்ரவர்த்திக்கு வேடம். கதாபாத்திரங்களை மிரட்டுவோராகச் சித்தரிப்பதில் மணிவண்ணன் எப்போதும் சளைத்தவரல்லர். வினுச்சக்ரவர்த்திக்குத் தரப்பட்ட அந்தப் பாத்திரத்திற்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்து படம் முழுக்கவே கொண்டுசென்றிருப்பார்.

முதலில் அப்பாவி நாயகன் பாண்டியனை அடித்துதைப்பதும் பிறகு அவன் வீரமானவனாய்த் திரும்பி வருகையில் அடிவாங்குவதும் ஊரே திரண்டு பண்ணையாரை எதிர்ப்பதற்கு முதல் ஆளாக முன்நிற்பதுமாய் வினுச்சக்ரவர்த்தி நின்று விளையாடியிருப்பார்.

இடையில் கமல்ஹாசனோடு “தூங்காதே தம்பி தூங்காதே” என்னும் படம். செந்தாமரை, வினுச்சக்ரவர்த்தி, கவுண்டமணி ஆகிய மூவரும் தீயவர்கள். அளப்பரிய சொத்துகளின் வாரிசான கமல்ஹாசனுக்குப் போதை ஊசிபோட்டு இன்பத்தில் திளைக்கடித்து சொத்துகளைச் சுருட்டுவது இவர்கள் வேலை.

நடுவாந்திரமான தொந்தியும் முழுக்கைச் சட்டையுமாய் இரண்டு கைகளையும் இடுப்பில் சிறகுபோல் வைத்துக்கொண்டு வசனம் பேசினாலே போதும். வினுச்சக்ரவர்த்தி அந்தக் காட்சியை எடுத்து நிறுத்துவார்.

வினுச்சக்ரவர்த்தியின் தொந்தியைக் குறைப்பதற்கு கமல்ஹாசன் ஓர் யோகாசன வகையைப் பரிந்துரைத்திருக்கிறார். படுக்கையை விட்டு எழுமுன் பத்து மணித்துளிகள் கவிழ்ந்து படுத்தபடி கையைமட்டும் முழுமையாய் ஊன்றி நிற்றலைப்போன்ற ஆசனம் அது. மயிலாசனம் போன்றது. அதைச் செய்தாலே தொந்தி குறையும் என்பது அவர் பரிந்துரை. வினுச்சக்ரவர்த்தி எப்போதும் அதைச் செய்ய முயன்றதில்லையாம். ஒரு நேர்காணலில் மகிழ்ந்து சொன்னார்.

முதல் படத்திலிருந்து கடைசிப் படம்வரைக்கும் அவருடைய தொந்தியில் எந்த மாற்றமும் இல்லை. விகே இராமசாமியும் ஏறத்தாழ அப்படித்தான், முதல் படத்திலிருந்து தம் கடைசிப் படம் வரைக்கும் ஒரே மாதிரியான புடைவயிற்றோடு இருந்தவர். அகல்திரைப் படங்களுக்கு முந்திய நாயகப் படங்கள் பெரும்பாலானவற்றிலும் வினுச்சக்ரவர்த்தி தவறாது பங்குபெற்றிருந்தார். தீயவர் குழுவில் ஒருவராக வருவார். இடையிடையே குணவடிவமான பாத்திரங்களிலும் அவர் தோற்றம் இருந்தது.

அவர் நகைச்சுவைப் படங்களில் செய்த சேட்டைகள் இன்றும் நினைவில் நிற்கும் காட்சிகளாக அமைந்துவிட்டன. குருசிஷ்யனில் லஞ்சம் வாங்கியதால் நாயகர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் காவல் ஆய்வாளர். இன்ஸ்பெக்டர் நல்லசிவம். “இப்ப என்ன செய்வீங்க…? இப்ப என்ன செய்வீங்க…?” என்று அவர் இடவலமாய் இடுப்பாட்டியது குபீர்ச் சிரிப்பை வரவழைத்துவிட்டது.

வினுச்சக்ரவர்த்தி அறிமுகமான ‘வண்டிச் சக்கரம்’ திரைப்படத்தைப் பிற்பாடுதான் பார்த்தேன். வண்டியிழுக்கும் கூலிக்காரர்களின் வாழ்க்கை முறையைச் சொல்கின்ற படம். “என்னிக்குமில்லாம இன்னிக்குப் பசிக்குதுன்னு சொல்றியே அண்ணாத்த… உனக்கு வாங்கித்தர இப்ப என்கிட்ட ஒன்னுமில்லையே…” என்பதுபோல் நெகிழ்கின்ற காட்சி வரும். முதல்படம் என்பதை மீறிய நடிப்பை அவ்விடத்தில் வெளிப்படுத்தியிருந்தார் வினுச்சகரவர்த்தி. வினுச்சக்ரவர்த்தியின் குரல்வளம்தான் அவர் உடலசைவை மீறிய நடிப்பை வெளிப்படுத்தும். ழகரப் பலுக்கம் தெளிவாக இருக்கும். வில்லனாய் அவர் உறுமிச் சூளுரைக்கும் குரல்நடிப்பே போதுமானது. ஏனோ பல்குரல் கலைஞர்கள் அவர் குரலை மிகுதியாய்ச் செய்யத் தவறினார்கள்.

வண்டிச்சக்கரத்தை இயக்கியவர் கே.விஜயன் என்னும் இயக்குநர். எண்பதுகளின் வர்த்தகப்பட இயக்குநர்களில் இவரே மிகச்சிறந்தவர் என்பது என் கணிப்பு. விதி என்ற திரைப்படத்தைப் பார்த்தபோது இதை உணர்ந்தேன். கே. விஜயனைப் பற்றி இன்று யார்க்கும் எதுவும் தெரியாது. இணையத்தில் அவரைப் பற்றிய சிறுகுறிப்பும் காணவில்லை. வினுச்சக்ரவர்த்தியின் திரைப்பயணம் ரோசாப்பூ இரவிக்கைக்காரி, வண்டிச்சக்கரம் போன்ற படங்களிலிருந்து தொடங்குகிறது.

தமிழ்த் திரையுலகைக் கறுத்த முகங்கள் எப்போதும் ஆண்டுகொண்டே இருந்தன. நடிகையரிலும் ராஜகுமாரி முதல் சாவித்திரி, வாணிஸ்ரீ, கே.ஆர்.விஜயா என்று கனமான பட்டியல் உண்டு.

நடிகர்களில் பெரும்பான்மையரும் கறுத்த நிறத்தவர்களே. தங்கள் நிறத்தால் மக்களிடத்தில் உறங்கும் ஏதோ ஒரு தொன்மையைச் சுண்டி நினைவூட்டும் தன்மையோடு அவர்கள் இருக்கின்றார்கள். தேவர் மகன் என்ற திரைப்படத்திற்குப் பிறகு மாரடைப்பால் இறந்த ‘நாகராஜசோழன்’ என்னும் நடிகர் அப்படிப்பட்ட தோற்றமுடையவர். தேவர்மகன் திரைப்படத்தில் கண்மாய்க்குக் குண்டு வைத்தமைக்காக கமல்ஹாசன் ஒருவரைச் சேற்றில் புரட்டியெடுப்பாரே, அவர்தான் நாகராஜசோழன்.

அத்தகைய கறுத்த கோவிந்தமான நிறங்களில் நாம் நம் மூதாதைகளின் நிழல்களை காண்கின்றோமோ என்னவோ ! வினுச்சக்ரவர்த்தியின் தோற்றமும் நடிப்பும் அப்படிப்பட்ட மன நெருக்கத்தை நம்மிடையே தோற்றுவித்தன.

கடைசியாக அவருடைய தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றைக் காண்கையில் நிறைவான சொற்களையே கூறினார். தாம் உடல்நலிவுற்றிருக்கையில் தம்மைக் கவனித்துக்கொண்ட செவிலிக்குப் பட்டுப்புடவையும் பரிசும் தந்து வணங்கி வந்ததாகத் தெரிவித்தார். மண்வாசனையில் கண்ட காக்கிநாடன்பட்டி பஞ்சாயத்துப் பிரசிடெண்டை அப்போது அவர்வழியாய்க் காணவில்லை என்றாலும் முதிர்ந்த மனிதராய்க் கண்களில் அன்பூறத் தென்பட்டார்.

எம்காலத்தில் எங்களையெல்லாம் களிப்பித்த கலைஞர் மண்ணைவிட்டு நீங்குகின்றார். இந்த இரவு ஆழ்ந்த மௌனத்தின் எடைதாங்கவியலாமல் மேலும் கறுப்படைகிறது, வினுச்சக்ரவர்த்தியைப்போலவே.

கவிஞர் மகுடேசுவரனின் சமீபத்திய நூல் விலைகள் தாழ்வதில்லை (கட்டுரைத் தொகுப்பு) தமிழினி வெளியீடு.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.