அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின், அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் ஒரு அணியும் உருவாகின. சசிகலா சிறைக்குச் சென்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானார். சசிகலாவின் உறவினரான டிடிவி தினகரன் துணை பொதுச்செயலாளர் ஆனார். இந்நிலையில் ஜெயலலிதாவின் தொகுதியான ஆர். கே. நகர் தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அப்போது அதிமுகவின் இரு அணிகளும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரின. இந்த வழக்கு தேர்தல் ஆணையத்துக்குச் சென்றது. தேர்தல் ஆணையம் சின்னத்தை முடக்கியது; கட்சியின் பெயரை பயன்படுத்த தடை விதித்தது.
இந்நிலையில் ஆர். கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாகக்கூறி அமைச்சர் விஜய்பாஸ்கர் வீட்டில் வருமானவரி சோதனை நடைபெற்றது. அதில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் அடிப்படையில் தேர்தல் நிறுத்தப்பட்டது. அதிமுகவுக்கு உரிமை கோரும் வழக்கு தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் உள்ளவர்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக சுகேஷ் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டார். சுகேஷ் மூலமாக லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார்.
இத்தகையதொரு சூழ்நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இணைக்கப்பட வேண்டும் என அமைச்சர்கள் முயற்சிகளை எடுத்தனர். ஓ.பி. எஸ் அணியினரும் இணங்கி வந்தனர். பேச்சுவார்த்தை தொடங்குவதில் இழுபறி இருந்துவந்த நிலையில், டிடிவி தினகரன் கைது செய்யப்பட்ட பிறகு அதிமுக தலைமையகத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தை தொடங்கும் முன் தலையகத்தில் வைக்கப்பட்டிருந்த சசிகலா, டிடிவி தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டன. ஆனால் பேச்சுவார்த்தை பற்றி ஊடகங்களில் பேசிய அமைச்சர் சி.வி. சண்முகம் சுபமுகூர்த்த நாளில்தான் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காத்திருந்தோம் என பேசினார்.