கி. நடராசன் :
காரல் மார்க்ஸ் நூலகம் மரியாதைக்குரிய மூத்த தோழர் கண்ணன் காலமானார். அவரது வீட்டை நூலகமாக்கி ஆயிரக்கணக்கான அரிய நூல்களை, இதழ்களை அனைவரும் – குறிப்பாக தோழர்கள் படிக்க வாய்ப்பை வழங்கியவர். பார்வையற்ற மாணவர்கள் படிப்பதற்கு தொடர்ந்து பல பத்தாண்டுகளாக உதவியவர். அவர் வயது 93..
அவரது உடல் மருத்துவமனைக்கும் மதியம் 3 மணிக்கு அவரது விருப்பப்படி வழங்கப்பட உள்ளது..பேரிழப்பு. செவ்வஞ்சலிகள்…
யமுனா ராஜேந்திரன்:
அறிவு ஊற்றுக்கு ஆதார வேர் காணமுடியாது. அநாதி காலம் இவரது ஆயுள். கார்ல் மார்க்ஸ் நூலக ஸ்தாபகர் தோழர்.கண்ணனுக்குத் தலைதாழ்ந்த அஞ்சலி..
ஞாநி:
இன்னொரு மரணம். இன்னொரு நிறைவாழ்வு வாழ்ந்த பெரியவரின் மரணம். கார்ல் மார்க்ஸ் கண்ணன் என்று எங்களால் குறிக்கப்படும் ச.சீ.கண்ணன் இன்று தன் 94வது வயதில் காலமானார். செய்தி கிடைத்து அவர் வீட்டுக்குச் சென்றபோது உடல் அவர் சகோதரர் கல்வியாளர் ச.சீ ராஜகோபாலனால் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொடையளிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது. மருத்துவமனைக்கு நானும் பத்மாவும் விரைந்தோம். மார்ச்சுவரியில் உடல் ஒப்படைக்கப்படும்போது காண முடிந்தது. இறுதி வரை மார்க்சிய அரசியலிலும் எளிமையான காந்திய வாழ்க்கை முறையிலும் நம்பிக்கையுடன் வாழ்ந்தவர் கண்ணன். சுமார் நாற்பதாண்டு காலமாக அவரை நான் அறிவேன். பொதுத் தொண்டுக்கு என் ஆதர்சங்களில் அவர் முதன்மையானவர்.
தமிழக மின் வாரியத்தில் தலைமை கண்காணிப்புப் பொறியளராகப் பணியாற்றி அவரது இடதுசாரிப் பார்வையினால் தலைமைப் பொறியாளர் பதவி மறுக்கப்பட்டு ஓய்வு பெற்றவர். ஆனால் அவர் ஓய்ந்திருக்கவே இல்லை. அவரும் தோழர் எஸ்.வி ராஜதுரையும் சேர்ந்து கார்ல் மார்க்ஸ் நூலகத்தை தொடங்கினார்கள். கண்ணன் வீட்டு மாடியே பல்லாண்டுகள் நூலகமாக இருந்தது. மார்க்சியம் தொடர்பாக அங்கு இல்லாத நூல்கள், சஞ்சிகைகளே இல்லை.
கண்ணனின் இன்னொரு மாபெரும் சமூகப் பணி பார்வையற்ற கல்லூரி மாணவருக்காக இறுதி வரை உழைத்ததாகும். பார்வையற்ற மாணவர்கள் பட்டதாரிகள் சங்கத்தை ஏற்படுத்த உதவி, அதன் வழியே படிப்புக்கும் தேர்வுக்கும் உதவிகள் அளிப்பதோடு உரிமைகளுக்கான களப் போராட்டங்களிலும் அவர் பங்கெடுத்துக் கொண்டிருந்தார். கடும் வெயிலில் தன் எழுபதாம் வயதில் அவர் சென்னை தார் சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்று பார்வையற்ற மாணவருக்கான ஸ்காலர்ஷிப், சான்றிதழ் இவற்றுக்கெல்லாம் அலைந்த காட்சி இன்னும் என் கண் முன் நிற்கிறது.
எங்கள் பரீக்ஷா குழுவின் செயல்பாடுகளில் ஆரம்பம் முதல் ஈடுபாடு காட்டி வந்தார். நாடகம் முடிந்ததும் அவரிடமிருந்து விமர்சனமாக ஓர் அஞ்சலட்டை வரும். ஹிரண்ய கசிபு நாடகத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் அவரையும் நடிக்க வைத்தேன். என் முதல் வீடியோ படமான 48.2 % படத்தில் அசோகமித்திரனின் நண்பராக ஒரு காட்சியில் நடித்தார். அவர் வீடு எப்போதும் பார்வையற்ற மாணவர்கள் கூடி மகிழும் நந்தவனமாக இருந்தது. கண்ணனைப் போன்று சமூக அர்ப்பணிப்பும், மனித நேயமும் கொள்கை உறுதியும் கொண்ட தலைமுறை மனிதர்கள் விடை பெற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.