மூணாறில் உள்ள 92 வட்டங்களிலும் தேயிலைப் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்கள் “பெண்கள் ஒற்றுமை” என்கிற அமைப்பை உருவாக்கி கடந்த செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் நாற்பது நாள்கள் வேலை நிறுத்தம் செய்து பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தினர். மேலும் அவர்களின் போராட்டம் தலைநகர் திருவனந்தபுரத்தின் வீதிகளிலும், தலைமைச் செயல கத்திலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
போராட்டத்தின் இறுதியில் தேயிலை மற்றும் காபி தோட்டத் தொழிலாளர்களின் ஒருநாள் கூலி 301 ரூபாய் , ஏலக்காய்த் தோட்டத் தொழிலாளர்களின் கூலி 330 ரூபாய் , இரப்பர் தோட்டத் தொழிலாளர் கூலி 381 ரூபாயாக என்று உயர்த்துவதாக கேரளா அரசு முடிவு செய்தது.
நாடு முழுவதையும் பெண்களின் இந்த போராட்டம் திரும்பி பார்க்க வைத்தது. பெண்கள் ஒற்றுமை என்கிற இந்த அமைப்பின் தலைவராக கோமதி என்கிற தமிழ்ப்பெண்தான் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில் கேரளா அமைச்சர் மணி நேற்று இடுக்கி மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, இடுக்கி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ‘பெண்கள் ஒற்றுமை’ என்ற அமைப்பு குறித்து ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. போராட்டம் நடத்திய நாற்பது நாட்களும் அவர்கள் குடியும் கூத்துமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டதாககூறப்படுகிறது.
அது மட்டுமில்லாமல், மணியின் பேச்சைக்கண்டித்து போராட்டம் நடத்தக் கிளம்பிய பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதுடன் “பாண்டி பறை*&^% அனுமதி அளிக்க முடியாது” என்று அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் கூறியதாகவும்”பெண்கள்ஒற்றுமை” அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.
இதற்கிடையே அமைச்சர் மணியை கண்டித்து பாரதீய ஜனதா சார்பில் இடுக்கி மாவட்டத்தில் இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.