ராஜசங்கீதன்

பணம், வளர்ச்சி, பதவி போன்ற கட்சி தில்லுமுல்லுத்தனங்கள் கம்யூனிஸ்ட் கட்சிகளிலும் ஊடுருவியிருப்பதை மறுப்பதற்கில்லை. சர்ச்சைக்குரிய வேட்பாளர் தேர்வு, கார்ப்பரெட் நடைமுறைகள் என கடுமையான விமர்சனங்களுக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தப்பியதில்லை. ஒரு சராசரியான இந்திய கட்சி அல்லது நம்மூர் திராவிட கட்சிகளுக்கு உள்ளே இருக்கும் கேவலமான குழு அரசியலையும் கம்யூனிஸ்ட் கட்சிகள் கண்டே வந்திருக்கின்றன. ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி அது கம்யூனிஸ்ட் கட்சி. அதில் இருப்பவன் ஒரு கம்யூனிஸ்ட். அவனை எவராலும் ஒன்றும் செய்து விட முடியாது. அவன் தான் சகாவு.
கிருஷ்ணகுமார் ஒரு கம்யூனிஸ்ட். இன்றைய தலைமுறையினன். அவனுக்கு மார்க்ஸோ லெனினோ பிடலோ எவர் கருத்தியலிலும் ஈர்ப்பு எல்லாம் இல்லை. இருக்கும் வாய்ப்புகளையும் பதவியையும் வைத்துக்கொண்டு கையை காலை பிடித்து வளர்ந்து முதலமைச்சராகி விட வேண்டும். அவ்வளவுதான். அப்படிப்பட்ட ஒருவன் ஆஸ்பத்திரியில் ரத்தம் கொடுக்க போய், சகாவு கிருஷணனை பற்றி தெரிந்து கொள்கிறான்.
சகாவு கிருஷ்ணன் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறான். அவனை பற்றி அவன் மகள், மனைவி, நண்பர்கள் என பலரிடம் கேட்டறிகிறான் கிருஷ்ணகுமார்.
ஒரு எஸ்டேட்டில் முதல் தொழிலாளர் சங்கத்தை பல போராட்டங்களுக்கு பிறகு கம்பெனிக்காரர்களை எதிர்த்து உருவாக்கிய பெருமை கொண்டவன் சகாவு கிருஷ்ணன். அதுபோல் பல ஊர்களில் பல பிரச்சினைகளில் முன் நின்று போராடி இருக்கிறான். நடுவே சக போராளியை மணம் முடிக்கிறான். மகள் ஊடக நிருபர் ஆகி, தன்னளவில் நியாயங்களுக்கு குரல் கொடுக்கிறாள். வயதாகி ஒரு கை விளங்காமல் போகிறது. கிருஷ்ணன் தொழிற்சங்கம் கேட்டு போராடிய கம்பெனிக்காரன் சில வருடங்களில் கம்பெனியை மூடி விட்டதால், தொழிலாளர்கள் வாழ்க்கைப்பாடு சிக்கலில் இருக்கிறது. தன் நண்பன் ஒருவரை அந்த எஸ்டேட்டை வாங்க சொல்கிறான்.
கிருஷ்ணன் மீதுள்ள மதிப்பில், எஸ்டேட்டை வாங்குகிறான் நண்பன். தொழிலாளர் பிரச்சினை திரும்ப வந்துவிட கூடாது என்பதற்காக கிருஷ்ணனையே தொழிலாளர் நலனுக்கான பொறுப்பில் இருக்க வைக்கிறான் நண்பன். அந்த எஸ்டேட்டின் ஒரு பகுதியில் ரிசார்ட் அமைத்து ஆக்கிரமித்திருக்கும் ஒருவனுக்கும் சகாவு கிருஷ்ணனும்க்கும் பிரச்சினை ஆகிறது. அந்த பிரச்சினையில் சகாவு கிருஷ்ணன் குத்துப்பட்டுத்தான் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறான். அறுவைசிகிச்சையில் சகாவு கிருஷ்ணன் பிழைக்கிறான். அவர் கதையை கேட்ட சந்தோஷத்துடன் நிறைவுடன் கிளம்புகிறான் கிருஷ்ணகுமார். சகாவு கிருஷ்ணன் விட்டு சென்ற வேலையை கிருஷ்ணகுமார் தொடர்கிறான்.
எதிர்பார்த்த கதைதான்.
கேரளாவில் சங்கம் வளர்த்துதான் கம்யூனிசம் வளர்க்கப்பட்டது என்பதால் சங்க பிரச்சினைகள்தான் ப்ளாஷ்பேக்கில் பெரும்பகுதி. எல்லாவற்றையும் மீறி அதற்குள் சொல்லப்பட்ட்டிருக்க்கும் சகாவு கிருஷ்ணன் என்ற கம்யூனிஸ்ட்டின் கதை. அவனை அடித்த போலீஸிலிருந்து ஊர் பேர் தெரியாத மனிதர்கள் என பலரின் அன்புக்கு பாத்திரமான அந்த கம்யூனிஸ்ட்டின் கதைதான் உங்களை கட்டிப்போடும்.
படத்தை பொறுத்தவரை வசனங்கள் பிரமாதம். கம்யூனிஸ்ட்டு கதையை காலத்துக்கு தேவையான கமர்ஷியல்தனங்களுடன் சொல்லி இருக்கிறார்கள். அநாயசமாக நாயர், நம்புதரி, காங்கிரஸ் என படத்தில் பேசுவதை பார்க்கையில்தான் நம்மூர் சினிமாவையும் சென்சாரையும் நினைத்து பெருமூச்சு விட வேண்டியிருக்கிறது. கிருஷ்ணனை கடைசி வரை அடுத்தவரின் வாய்மொழி கதை வழியாகவே ப்ளாஷ்பேக்கில் காண்பித்துவிட்டு, காணும் சந்தர்ப்பம் வரும்போதும் கிருஷ்ணகுமார் பார்க்காமல் “எனக்குள் சகாவு கிருஷ்ணன் வந்துவிட்டார்” என சொல்லிவிட்டு கிளம்புவது அழகு. அடுத்தவரின் கதைவழியே சொல்லப்படும் சகாவு கிருஷ்ணனின் வாழ்க்கை Jim Carrey நடித்த Majestic போல் இருந்தாலும் ரசிக்க வைக்கிறது. இசையும் அற்புதம்.
வயதானாலும் ஒரு பிரச்சினை எனில், கம்யூனிஸ்ட் போராட கிளம்பி விடுவான் என்பதுதான் உண்மை. நான் ஏற்கனவே சொன்னதுதான். ஒரு சரியான கம்யூனிஸ்ட்டை கொல்லாமல் வெல்ல முடியாது. அவன் அவ்வளவு தீர்க்கமானவன். உறுதியானவன். உங்கள் மாவட்டம், ஊர் எல்லாவற்றிலும் விசாரித்து பாருங்கள். கம்யூனிஸ்ட் லெஜண்ட் ஒருவன் கண்டிப்பாக இருப்பான். அவனை பற்றிய பெருமையான கதைகள் இன்றும் பேசப்பட்டு கொண்டிருக்கும்.
இப்படியெல்லாம் இன்று இருக்கிறார்களா என்றால் கண்டிப்பாக இருக்கிறார்கள். இந்த பதிவுக்கே பல பின்னூட்டங்கள் நக்கல் அடித்து இடப்படும். அப்படி இடுபவர்கள் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் மூளைகளின் சிந்தனையை, கம்யூனிஸ்ட்டை ஒரு ஜோக்கராக சிந்திக்க வைத்திருக்கும் கருத்தியல் ஒன்று உலகத்தில் இருக்கிறது. அந்த கருத்தியலுக்கு ஆதரவாக நீங்கள் இருக்கிறீர்கள். அந்த கருத்தியல் உங்களை பயன்படுத்தி உங்களை சுரண்டுகிறது. ஒடுக்குகிறது. ஆனால் பாருங்கள், நீங்கள் நக்கல் அடிக்கும் அந்த கம்யூனிஸ்ட்டோ உங்களுக்கும் சேர்த்து போராடிக் கொண்டிருக்கிறான். அது தெரியாமல் அவனை நக்கல் அடிக்கும் நீங்கள்தான் நீங்கள். அது தெரிந்தும் உங்களின் நியாயத்துகாக போராடுகிறானே, அவன் தான் கம்யூனிஸ்ட்.
ஆபத்தான காலங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய நாளில், சோரம் போகும் ஒரு போலி கம்யூனிஸ்ட்டை முன்னிறுத்தி உண்மையான கம்யூனிஸ்ட் பற்றிய மீள்வாசிப்பாக அமைந்திருக்கும் வகையில் சகாவு மிக முக்கியமான படம். கம்யூனிஸ்ட்டை நக்கல் அடிக்க நீளும் நாவுகள் பாசிஸ்ட்டுகளுக்கு எதிராகவும் நீளுதல் வேண்டும். நக்கல் அடித்தாலும் விமர்சனங்களை ஏற்று நாங்கள் சுயபரிசோதனையுடன் திருத்திக்கொண்டு உங்களுக்காக போராடுவோம். ஆனால் பாசிஸ்டுகள்? உங்களுக்கு தேச துரோகி பட்டம் கொடுத்து சிறையில் அடைப்பார்கள்.
நாங்கள் உங்களின் நேச சக்திகள். எங்களுடன் முரண்படுங்கள். முரண்பட்டு பாசிஸ்ட் ஆகாதீர்கள். அது உங்களுக்கே ஆபத்தாக முடியும்.
படம் பார்க்க ஐநாக்ஸ் சென்றிருந்த போது மிகவும் ரசித்த விஷயம் ஒன்று இருக்கிறது. படம் பார்க்க வந்த இளைஞர் குழாம் ஒன்றில் ஒரு இளைஞர் கேரள பாணி கைலி கட்டி வந்திருந்தார். சேட்டன்மார் சேட்டன்மார்தான். Rebellious. அத்தனையும் சகாவுமார்!
ராஜசங்கீதன், ஊடகவியலாளர்.
கம்யூனிஸ்ட் எவ்வளவு வயதானாலும் போராட கெலம்பிடுவர் நம் நல்லகண்ணுவை போல
LikeLike