ஸ்டாலின் ராஜாங்கம்

எந்த தேசியவாதமாக இருந்தாலும் அதற்கு தேவை ஒரு பக்கம் வெறுப்பும் மறுபக்கம் கண்ணை மூடிய விசுவாசமும் தான். கர்நாடக அரசியல்வாதிகளுக்கு சத்யராஜீன் பேச்சு எதிர்மறையானதென்றால் நம்மூர் அரசியல்வாதிகளுக்கு நேர்மறையானது. இரண்டையும் அந்தந்த தரப்பு நியாயம் என்றே நம்புகிறது.
மற்றபடி நம்மூர் முற்போக்குவாதிகளுக்கு தங்கள் அரசியல் சரித்தன்மைகளை காட்டிக் கொண்டே இருக்க ஏதாவதொரு தீனி தேவைப்படுகிறது. இப்போது சத்யராஜ் மூலம் அந்த தீனிக்கு வழி கிடைத்திருக்கிறது. இவர்களுக்கு இது போதுமானதாகி விடுகிறது. ஒருவர் நாம் விரும்பும் ஏதேனும் ஒரு விசயத்தில் சாதகமாக பேசிவிட்டால் மற்ற மற்ற வகைகளிலும் போராளி இமேஜுக்கான வரலாற்றையெல்லாம் கண்டுபிடித்து அவர் மீது ஏற்றத் தொடங்கி விடுவோம். அதில் காஸ்ட்லியான முற்போக்கு என்றால் அது தலித் பரிவு என்பது தானே ? இப்போது சத்யராஜ் வரலாற்றில் அதற்கான இடமும் உருவாகத் தொடங்கி விட்டது.
இன்றொரு பதிவில் ஈரோடு பகுதி காளிங்கராயன் கால்வாயை திறக்க அழைத்தபோது தலித் ஒருவரை அழைத்து திறந்தால் தான் வருவேன் என்று கூறி சத்யராஜ் வர மறுத்து விட்டார் என்று புகழப்பட்டிருந்தது. அந்த அளவில் அந் நிலைபாட்டை மதிப்போம். ஆனால் அதிலேயே திருப்தி அடைந்து விட முடியாது.ஒரு தலித்திற்கு தேவை இவை தானா?
உண்மையில் ஒரு தலித்திற்கு நிலம் தேவைப்படுகிறது. நியாயமான கூலி தேவைப்படுகிறது. சமமான உரிமைகள் தேவைப்படுகின்றன. இப்போது அவற்றை வலியுறுத்துவதே முக்கியமானது. சத்யராஜ் ஒரு அரசியல் தலைவர் அல்ல என்றாலும் இத்தகைய விசயங்களை வேறேதேனும் சந்தர்ப்பங்களில் பேசியிருக்கிறாரா? அவ்வ றெல்லாம் பேசியிருந்தால் இவ்வாறு ஒட்டுமொத்த தமிழின பிரதிநிதியாக கொண்டாடப்பட்டிருப்பாரா?
இதையெல்லாம் பேசாமல் ஏதோவொன்றை பேசியிருக்கிறார் என்பதாலேயே அவரை விமர்சனமில்லாமல் பாராட்டிக் கொண்டிருப்பது ஒரு வகையான முற்போக்கு சுய திருப்தி .
மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் சத்யராஜ் சமூக பார்வை கொண்டிருக்கிறார் (அவையும் கூட முற்போக்கு மெயின்ஸ்டீம் கருத்துகள் என்பது வேறு விசயம்) என்பது நிச்சயமாக முக்கியமானது. ஆனால் அவற்றையெல்லாம் விட ஒரு கலைஞனாக சத்யராஜூன் பங்களிப்பு என்ன என்று பார்ப்பதே முக்கியமானது .அந்த வகையில் சத்யராஜூன் பங்கு என்று கூற சினிமாவில் எதுவுமில்லை எனலாம்.அவர் இயக்கிய வில்லாதி வில்லன் படத்தை ஆரோக்கியமான பொழுதுபோக்கு சினிமா என்று கூட கூற முடியாது.மேலிருந்து கீழே நோக்கும் தலித் சித்தரிப்பு, பிராமண பெருமிதம், நாயகியின் உடலை பண்டமாக்கும் வியாபாரம் என்றே அப்படம் அமைந்திருந்தது. ஆனால் புழக்கத்திலிருக்கும் அரசியல் கருத்துகளை மேடைகளில் பேசி விடுவதன் மூலம் அவருடைய கலை பங்களிப்புகள் யோசனைக்கு எட்டாமல் போய்விடும்.
நாம் விரும்பும் அரசியல் கருத்துகளை பேசுவதாலேயே ஒருவரின் அசலான கலைத் துறை பற்றிய பங்களிப்பு கேள்விக்கே வராமல் போகிறது. ஆனால் ஒரு கலைஞனாக தன் பங்களிப்பை மிகச் சரியாக வெளிப்படுத்திய ஒருவரின் தனிவாழ்க்கை தொடர்பான விருப்பங்கள் நம் அரசியல் நம்பிக்கைகளுக்கு தோதானதாக இல்லாமல் இருப்பதாலேயே நாம் அவர்களை காலமெல்லாம் கரித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் காலம் கலைஞனொருவனின் தனிப்பட்ட கருத்துகள் மற்றும் விருப்பங்களுக்காக அல்லாமல் அவனின் கலை பங்களிப்புக்காகவே நினைவில் கொள்ளும். கலையும் அரசியலும் முரணனானது என்ற பொருளில் நான் இதை கூறவில்லை.
ஸ்டாலின் ராஜாங்கம், மதுரை அமெரிக்கன் கல்லூரியின் தமிழ்த்துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார்.
இவருடைய நூல்கள் :
2. ஆரிய உதடும் உனது திராவிட உதடும் உனது
4. சனநாயகமற்ற சனநாயகம்