
குரங்குகளைப் பற்றிச் சொல்லும் போது ஒரு கதை சொல்வார்கள். இது உண்மையா என்று நிச்சயமாகத் தெரியவில்லை. காட்டுயிர் சார்ந்தவர்கள் சொன்னால் திருத்திக் கொள்கிறேன். அதே சமயம் இந்த உதாரணம் மிகச் சிறந்ததும்கூட. கூண்டிற்குள் மாம்பழமோ ஏதோ ஒரு பழமோ வைத்து குரங்குகளுக்குப் பொறி வைப்பார்கள். அந்தக் குரங்கு கூண்டின் கம்பி இடைவெளிக்குள் கையை நுழைத்து பழத்தை பற்றி விடும். ஆனால் வெளியே எடுக்க முடியாது. பழத்தைத் தூர எறிந்து விட்டு மீண்டும் கையை விடுவித்துக் கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்யத் தெரியாது குரங்கிற்கு. அது பழத்தையும் விடாமல் கையையும் வெளியே எடுக்காமல் மாட்டிக் கொள்ளும். விகடனில் ஹாசிப்ஹான் கருத்துப் படத்தைப் பார்த்துவிட்டே இந்தக் குரங்கு உதாரணத்தைச் சொல்கிறேன். பழத்திலிருந்து கையை எடுக்கிற புத்தி வாய்க்காத நிலையில் அவை படும் பாட்டைச் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன?
அதேநிலைதான் தமிழக அரசியலிலும் நடந்தேறிக் கொண்டிருக்கிறது. தனியாய் நின்று கம்பு சுற்றி வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றத் திராணியில்லாத நிலையில் ஓபிஎஸ் அணி இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. கௌரவர்கள் போல அவர்கள் ஒன்றாக அணிவகுத்திருக்கிறார்கள். இவர்கள் பாண்டவர்களாகத் தங்களைக் கருதிக் கொண்டு தர்மயுத்தம் அதர்ம யுத்தம் என்று முழங்கிக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் பாரதியார் பாடல்களில் இருந்து தர்மம் மறுபடியும் வெல்லும் என்கிற வரிகளை மட்டும் நீக்கி விட்டால் நல்லது என்று தோன்றுகிறது. இவர்களின் தர்மமெல்லாம் பல்லிளிக்கிறது.
கடந்த வாரம் முழுக்க தமிழகத்தின் பல ஊர்களில் பயணம் செய்த போது மக்களிடம், தர்மயுத்தத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டால், அது கேப்டன் நடித்த படமா என்று கேட்கிறார்கள். மக்களுக்குத் தெளிவாக எல்லாம் தெரிந்திருக்கிறது. நமக்கு நல்லது எதுவும் நடக்காது என்பது மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. இந்த ஆட்டை சீக்கிரம் கலைந்து விடும் என்பதும் புரிந்திருக்கிறது. சசிகலா வகையறாக்கள் எதிரிக்கு இருபது கண்ணும் போகணும் என கண்டிப்பாகச் செயல்படுவார்கள் என்பது தெரிந்த கதைதான். அப்புறம் இன்னொரு கோணத்தில் கேட்கிறேன். தினகரனை அழைத்து நீ வேண்டாம்ப்பா என்று சொன்னால், உடனடியாக சரியென்று சொல்லி விடுவது ஒரு தலைவனுக்கு அழகா? அவருக்கே, நாம் செய்வது தர்மமில்லாத வேலை என்று புரிகிறது. அதனால்தான் பம்முகிறார். கைவிலங்கை வாசலுக்குப் பக்கத்தில் வைத்துக் கொண்டு, என்னப்பா சமாச்சாரம் என்று கேட்டால், நான்கூட பல்டி அடித்து விடுவேன். எடப்பாடியார் ஒரு படி மேலே போய் காரிலிருந்த சைரனை அவரே அகற்றிக் கொண்டிருக்கிறார். சொன்னால் ரெண்டு நிமிஷத்தில் ஆட்கள் அகற்றித் தந்துவிடுவார்கள். ஆனால் அண்ணன் அகற்றியதன் வழியாக கையில் தலை வைத்துக் கும்பிட்டதை மறுபடியும் செய்து காட்டியிருக்கிறார்.
இந்த எபிசோடில் தினகரன் மறுபடி மறுபடி சொல்வது, எதற்காகவோ பயந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை. உண்மைதான் ஓபிஎஸ், ஈபிஎஸ் என எல்லா தலைகளையும் மறைமுகமாக மிரட்டுவதன் வழியாக தோதான ஆட்சியை உருவாக்க பிஜேபி முயல்கிறது. இதற்கு ஓபிஎஸ் துணை போகிறார். சரிக்குச் சரியாக மோதுவதுதான் பந்தயம். ஆனால் ஒரு தரப்பை ஆதரித்து இன்னொரு தரப்பை மிரட்டுவது சரிக்கு சமமான பந்தயம் இல்லை. ஆனால் எல்லா அரசியல் கட்சிகளும் இதைச் செய்திருக்கின்றன என்பதால் இதைப் பெரிய விஷயமாகக் கருத முடியாது. ஆனால் இன்னொன்றை உரக்கச் சொல்ல முடியும்.
இவர்கள் அரசியல் செய்து பழக்கப்படாதவர்கள். ஆடு ராமா என்றால் ஆடிப் பழக்கப்பட்டவர்கள். பாடு ராமா என்றால் படுத்தே விடுவார்கள். நுணுக்கமான அரசியலை இதுவரை அவர்களின் தலைமை செய்ய விட்டதே இல்லை. ஒருசிலர் செய்திருக்கலாம். இப்போது எல்லோருடைய கைவிலங்குகளும் அறுக்கப்பட்டிருக்கின்றன. அதே சமயம் குழப்பங்களும் சந்தேகங்களும் அலங்கரிக்கிற சபையாக அது இருக்கிறது. இவர்களுக்கு கம்பிக்குள் கையை விட்டு பழத்தில் கைவைக்க மட்டுமே தெரியும். கையை உதறி பழத்தை விடுவித்து விட்டு, சுதந்திரமாக காட்டுக்குள் ஓடத் தெரியாது. அப்படி ஓட அவர்கள் பழக்குவிக்கவும் படவில்லை. மாட்டிக் கொள்வார்கள் சிக்கிரமே. அது தெரியாமல் நான்கு வருடங்களை இவர்களை வைத்து ஓட்டி விடலாம் என்று நினைப்பது பகல் கனவே. அதே சமயம் மடியில் தானாகவே வந்து விழுந்து விடும் என்று நினைத்துக் கொண்டு கடற்கரையில் இன்னொரு தரப்பு காற்று வாங்குவதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை.