அருண் நெடுஞ்செழியன்

துருக்கியில் ஜனாதிபதி பதவிக்கு மிக அதிகமான அதிகாரம் வழங்குகிற சட்டத் திருத்தம் மீதான ஓட்டெடுப்புக்கு சாதகமாக 51% விழுக்காட்டு மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
இன்னும் சில தினங்களில் எர்டோகன் ஜனாதிபதியாக பதவியேற்றுக் கொள்வார்.அடுத்து பத்தாண்டுகளுக்கு இவர் துருக்கியின் அரசியல் பொருளாதாரத்தை ஏகபோகமாக தீர்மானித்திட,சர்வாதிகார ஆட்சி நடத்திட சட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.துருக்கியின் நீதிபதிகள், ராணுவம்,அரசியல் தேசிய சபை என அனைத்தும் எர்டோகன் ஒருவரால் கட்டுப்படுத்தப்படும். எர்டோகனின் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்த லட்சக்கணக்கானோர் சிறையில் உள்ளனர்.
மதமும் அரசும் ஒன்றுடன் ஒன்று கலக்கப்பட்டு நவதாரளமய சந்தைப் பொருளாதாரத்துடன் பிண்ணிப் பிணைந்து, எதிர்ப்புகளை மக்கள் எழுச்சிகளை இரும்புக் கரம் கொண்டு அடக்குகிற “துருக்கி மாதிரி” இந்தியாவின் மோடியின் தலைமையிலான “இந்திய மாதிரிக்கு”ஒரு முன்னோட்டமே!
ஒட்டாமன் மன்னராட்சிக்கு எதிராக கேமலிஸ்ட் தலைமையில் 1923 இல் துருக்கியில் குடியரசு ஆட்சிமுறை வந்தது. ஆனாலும், இந்த முதலாளித்துவ அரசு ஒரு முழு நிறைவான ஜனநாயகத்தை பூர்த்தி செய்யவில்லை. ஏகாதிபத்திய முகாம்களின் பங்காளியாக இருந்து,உள்நாட்டு சொந்த வளர்ச்சியை முடக்கியது. இதற்குப் பின்னர் வந்த தாராளமயம், இஸ்லாம் மதத்துடன் ஒன்று கலக்கப்பட்டது. 2002 முதல் எர்டோகன் துருக்கியை ஆட்சி செய்து வருகிறார்.
இந்தியாவில் நேருவின் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 1950 இல் மதசார்பற்ற குடியரசாக பிரகடனப் படுத்தப்பட்டது. இந்திய முதலாளித்துவ அரசு ஒரு முழு நிறைவான ஜனநாயக புரட்சியை நடத்தவில்லை. நிலசீர்திருத்தம், உள்நாட்டில் வளர்ச்சி சாத்தியமாகவில்லை. சோவியத் முகாம், பின்னர் அமெரிக்க முகாம் சார்ந்திருந்தது.தற்போது இந்து மதத்துடன் ஒன்றுகலக்கப்பட்ட நவதாரளமய சந்தைப் பொருளாதார ஆட்சியை பாஜகவின் மோடியின் தலைமையில் ஆர் எஸ் எஸ் மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் மோடி அரசும் துருக்கியின் எர்டொகன் அரசும் கிட்டத்தட்ட ஒரே பண்புகளை உடையவை. மோடி அரசானது இந்துத்துவ பிற்போக்கு மதவாதம், தேசியவாதம் கூடவே போலி வளர்ச்சி மாதிரி முழக்க அரசியலை முன்வைத்து இந்திய நாடாளுமன்ற தேர்தல் அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகிறது.மக்களின் ஹீரோவாக மோடி உருவாக்கப்படுகிறார். எர்டோகன் அரசானது இஸ்லாம் பிற்போக்கு மதவாதம் கூடவே போலி வளர்ச்சி மாதிரி முழக்க அரசியலை முன்வைத்து துருக்கிய நாடாளுமன்ற தேர்தல் அரசியலில் செல்வாக்கு செலுத்தி வருகிறது. மக்களின் ஹீரோவாக எர்டொகன் உருவாக்கப்படுகிறார்.
எவ்வாறு இந்தியாவில் பஜாகவின் வெறித்தன வளர்ச்சிக்கு வலுவான எதிர்கட்சி இல்லையோ அதேநிலைதான் துருக்கியிலும்.
மோடியின் பிற்போக்கு தேசியவாதம்,வகுப்புவாத அரசியல் மற்றும் போலி வளர்ச்சி மாதிரிக்கு நகர்ப்புற இளைஞர்கள்,கிராமப்புற மக்கள்,குட்டி முதலாளிகள்,பெரு முதலாளிகள் ஆதரவளிக்கின்றனரோ அதேபோல துருக்கியிலும் இந்த சமுதாய சக்திகளிடம் இருந்து எர்டோகனுக்கு ஆதரவு இருக்கிறது.
இந்தியாவில் இந்துத்துவ அரசியல்,முதலாளித்துவ நாடாளுமன்ற அரசியலை மீறிச் செல்லுமா என்ற ஐயம் பல ஜனநாயகவாதிகளின் ஐயமாக தற்போது இருந்து வருகிறது.குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்தின் முதல்வராக வகுப்புவாத வெறியுடைய யோகி ஆதித்தியனாத் பதவியேற்ற பிற்பாடு இந்த ஐயம் பரவலாக எழுந்துள்ளது.
ஆர் எஸ் எஸ்ஸின் தலைவர் மோகன் பகவத், எங்களது இப்போதைய ஒரே எதிரி மேற்குவங்காள முதல்வர் மம்தா பானேர்ஜிதான் என்கிறார். கேரளாவில் பிரணாயி விஜயன் அரசுடன் ஆர் எஸ் எஸ் நேரடியாக மோதி வருகிறது. தமிழகத்தில் அதிமுக முகாமின் பலவீனத்தை பயன்படுத்தி ஊடுருவி வருகிறது.
இம்மூன்று மாநிலங்களைத் தவிர்த்துப் பார்த்தால் அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜக மிகப்பெரும் ஒற்றை தேசியக் கட்சியாக பலம் வாய்ந்து அதிகார மையமாக செல்வாக்கு செலுத்த வாய்ப்புள்ளது.ஏகாதிபத்திய சக்திகளின் கருவியாகவும், பெரு முதலாளி வர்க்கத்தின் செல்லப் பிள்ளையாகவும்,குட்டி முதலாளிகளின் பிரதிநிதியாகவும் உள்ள பாஜகவின் அரசியல் பரிணாம வளர்ச்சி எவ்வாறு இருக்கும்? எர்டோகன் அதை இந்த சட்டத்திருத்தம் மூலமாக தெளிவு படுத்திவிட்டார். துருக்கி மக்களுக்கு ஆபத்து என்ற தீவிரவாத, பயத்தை கட்டியும், நீடித்த வளர்ச்சிக்கு அதிகரா குவிப்பு அவசியம் என்றும் பிரச்சாரம் செய்தும், மக்களிடம் சமூக ஒப்புதலை பெற்றார். ஆனாலும் 49% விழுக்காட்டு மக்கள் இத்திருத்தத்தை ஏற்க்கவில்லை என்பது குறித்து அவருக்கு கவலையில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள பிரதம மந்திரி பதவியையும் தேசிய சபையையும் இந்த சட்டத் திருத்தம் ஒழித்துவிட்டது. செயல்-ஜனாதிபதி என்ற புதிய அதிகார மையமாக அனைத்து அதிகாரமும் கொண்ட பதவியை உருவாக்கி, தம்மை ஜனாதிபதியாக எர்டொகன் நிறுவிக் கொள்கிறார். நீதிபதிகளையும், அமைச்சர்களையும் நேரடியாக இவரால் நியமிக்கப்படுவார்கள்.
அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு சதியை முறியடித்த பிற்பாடு, சுமார் 1,30,000 அதிகாரிகள், அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வாய்ப்பை பயன்படுத்தி பல ஜனநாயக குரல்கள் நசுக்கப்பட்டு, சிறை வைக்கப்பட்டுள்ளனர். பத்திரிக்கை சுதந்திரம் அங்கு முடக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக துருக்கியின் நவீன முதலாளித்துவ ஜனநாயகம், கடந்த கால பிற்போக்கு முடியரசுவாத சர்வாதிகார சுல்தான் ஆட்சியாக பின்னோக்கி சென்று கொண்டுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அரசியல் வடிவங்களுக்கு சமாதி கட்டப்படுகிறது. ஜனநயாக ஆட்சியின் சட்டத் திருத்தங்கள் மூலமாக எதேச்சியதிகார ஜனநாயகம் வடிவில் சர்வாதிகாரம் மக்களை ஆட்சி செய்கிறது. துருக்கியில் தற்போது நடைபெற்ற வருகிற இம்மாற்றங்கள், இந்திய அரசியல் எதிர்காலத்தை முன்கூட்டியே சொல்லிவருவதாகவே தெரிகிறது! துருக்கி மாதிரியின் இந்தியப் பிரதிபளிப்புதான் மோடி அரசு.
அடுத்த பத்தாண்டுகளுக்கு பாஜக, சர்வாதிகார ஆட்சி முறைக்குள்ளாக நாட்டைத் தள்ளும். இனிவரும் காலங்களில் சண்டையானது காகித அறிக்கைகளில், அடையாள ஆர்ப்பாட்டங்களில், பாராளுமன்றங்களில் வழி நடத்தி பிரயோசனம் இல்லை. சண்டை தெருவில் நடந்தாகவேண்டும். இல்லையேல், இரண்டாயிரம் வருடத்திற்கு பிந்தைய சமூகத்திற்கு நம்மை பாஜகவும் ஆர் எஸ் எஸ்சும் இட்டுச்சென்றுவிடும்.
அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.