விவாதம்: “கக்கூஸ்” ஆவணப்படத்தை பார்க்கணும்; ஆனால், அது பேசும் அரசியலை நிராகரிக்கணும்”

மீனா சோமு

மீனா சோமு

திவ்யா பாரதி இயக்கிய, “கக்கூஸ்” ஆவணப்படம் பார்த்தேன். மலத்தோடு அதன் நாற்றத்தோடு செத்துக் கொண்டிருப்பவர்களை பற்றிய ஆவணம் அது. 1.30மணி நேரம் ஓடிய ஆவணப்படம், நம் சமூகத்தின் கேடுகெட்ட நிலையை முகத்தில் மலத்தை அறைந்து சுட்டுகிறது.

மலம் அள்ளும் பணியாளர்கள் இல்லையென்று சொன்னாலும் மலம் அள்ளும் நிலைக்கு தள்ளப்படும் துப்புரவு பணியாளர்கள் குறித்தும் அவர்களை அந்த நிலைக்கு ஆளாக்கிய அரசின் எத்தனம் பற்றியும் சமூக நிலை பற்றியும் பட்டவர்த்தனமாய் வைக்கும் ஆவணப்படம் இது. அதே போல துப்புரவு பணியாளர்களை செப்ட்டிக் டாங்கை சுத்தம் செய்ய ஆட்களை இறக்கி அதனால் நிகழும் மரணங்களை அம்பலப்படுத்தும் ஆவணம்.

கையால் மலம் அள்ளும் தொழிலை தடை செய்யும் சட்டம் நடைமுறையில் இருந்தாலும் கொஞ்சமும் மனிதத்தன்மையற்று மலக்குழிகளில் மனிதர்களை இறக்கி அவர்களின் சாவு குறித்த எந்த குற்றவுணர்வும் இல்லாத அமைப்பை நிர்வாணப்படுத்தும் படமிது.

சுத்தமான பாரதம் என்பது வெறும் துடப்பங்களை கையில் வைத்துக் கொண்டு கொண்டுவரும் விழிப்புணர்வு அல்ல. இந்திய ரயில்வே போன்ற பெரிய நிறுவனங்களிலிருந்து காலனிப்பகுதியில் இருக்கும் கழிப்பறை வரை சுத்தமாக இருக்க துப்பரவு பணியாளர்களை மனிதனாக மதிக்கும் பிரஞ்சையில்லாத டாய்லெட்டுகளும், தண்ணீர் வசதியற்ற கழிப்பறைகளும், சுத்தம் குறித்த பிரக்கனையற்ற கல்வித்திட்டமும் கொண்ட அரசின் நிறுவனங்களின் கொள்கை மீதான விமர்சனத்தை முன் வைக்கிறது கக்கூஸ்.

இந்த படம் கொள்கை முடிவெடுக்கும் மட்டத்தில் தகுந்த அழுத்தத்தை தரக் கூடிய படமாக எடுத்திருக்கும் வாய்ப்பை, இந்த படத்தில் பேசும், காட்டும் சில சில்மிஷமான அரசியல் உள்நோக்கம் உடைய காட்சிகள், விவாதங்கள் மூலம் திவ்யா பாரதி படத்தின் நோக்கத்தை கூர்முனையை மழுங்க செய்வதுடன், அவரது நோக்கம் குறித்த விமர்சனத்தை தானாகவே வேண்டுமென்றே பிரதானப்படுத்தியுள்ளார் என்றே தோன்றுகிறது.

அந்த வகையில் தலித் அரசியலை கேவலப்படுத்தும் முயற்சியில் இறங்கும் கம்யூனிசம் என்று சொல்லிக் கொள்ளும் தோழர்களின் நடவடிக்கை போன்றே திவ்யாவும் மையக்கருத்தான மலம் அள்ளும் அவலத்தை சுட்டிக் காட்டி அரசையும் நிர்வாக அமைப்பையும் இந்த சமூகத்தின் கேவலமான சாதிய கட்டமைப்பையும் தட்டிக் கேட்கும் தன் ஆவணப்படத்தின் கூர்மையை மழுங்கடித்துவிட்டார்.

சரி… என்னவகையில் அதை செய்திருக்கிறார் ?

முதலில் அந்த படத்திற்கு சற்றும் தேவையே இல்லாத விசயமாக தலித் ஜாதிகளின் இடையே இருக்கும் ஜாதி வேறுபாடுகளை அருந்ததியர் ஜாதியின் பிரதிநிதி என்று சொல்லிக் கொள்பவர் மூலமாக சொல்கிறார்.

“நாங்க அவர்களை எங்க சகோதரர்களாக தான் நினைக்கிறோம். ஆனால் அவர்கள் எங்களை வேறாக ஒதுக்குகிறார்கள்.”

இது படம் முழுக்க ஆங்காங்கே வரும்படி பார்த்துக் கொள்கிறார். இத்தனைக்கும் அருந்ததியர் அமைப்பின் தலைவர் அதியமான் விசிகவின் தலைவர் திருமாவளவன் மற்றும் தலித்முரசு ஆசிரியர் என பல தலித்திய அமைப்புகளும் ஆளுமைகள் அனைவரும் இந்த ஆவணப்படத்தில் பேசுகின்றனர்.

ஆனால் படத்தில் 3 இடங்களிலாவது மலக்குழியில் இறந்தவர்களுக்கு வழங்கிய இழப்பீட்டில் தலித் அமைப்பினர் கமிஷன் வாங்கியதாக சொல்லுகிறார். இதை படம் பார்க்கும் அத்தனை பேரின் மனநிலையில் பதியுமாறு அழுத்தமாக சொல்கிறார்.

என் கேள்வி எளிமையானது. கமிஷன் பெற்றவன் தலித்தாக இருக்கலாம். அவனது தனிப்பட்ட குற்றம் தலித் அமைப்பின் மீது சுமத்துவது என்ன வகையான உள் நோக்கம்? கம்யூனிச கட்சியை சேர்ந்தவன் கமிஷன் பெற்றால் கம்யூனிச அமைப்பு என சொல்லுவீர்களா? தலித் அமைப்புகள் கமிஷன் பெறும் தரங்கெட்ட வேலையை தான் செய்கிறதா ? என்ன நேர்மையிருக்கிறது இத்தகைய குற்றம்சாட்டலில் ?

ஆக இத்தகைய மக்களுக்கு தலித் அமைப்பினர் எதிரானவர்கள் என்ற கேடுகெட்ட பிரச்சாரத்தை செய்யவா இந்த ஆவணப்படத்தை எடுத்தீர்கள் ? அங்கு செத்துக் கொண்டிருப்பவனுக்கு தலித்தாக கூடி உரிமை குரல் எழுப்ப லாயக்கில்லை என மழுங்கடிக்கும் உங்கள ஆவணப்படத்தில் தான் தலித் அமைப்பின் தலைவர்களும் அம்மக்களுக்காக பேசுகிறார்கள் என்பதை எப்படி வசதியாக மறந்து போகிறீர்கள் ?

இதற்கு சப்பைகட்டாக திவ்யா அவர்கள் தனது பேச்சில் அதை நியாயப்படுத்துகிறார். தான் சார்ந்த அமைப்பான எம்எல் அமைப்பையும் விமர்சிப்பதாக சொல்லி, தலித் அமைப்புகளை கமிஷன் ஏஜெண்டுகளாக சித்தரித்த தனது தவறை நியாயப்படுத்துகிறார். கம்யூனிச அமைப்பினை விமர்சிப்பதாக அவர் சொல்லும் காட்சியில் பொதுவாக தொழிற்சங்கங்கள் சந்தா கேட்கிறார்களே தவிர தங்களுக்காக போராடுவதில்லை என்ற வரிகள் வருகிறது. சங்கங்கள் என்றால் கம்யூனிச தொழிற்சங்கங்கள் தானா ? எனக்கென்னவோ மிக தெளிவாக தலித் அமைப்புகளை விமர்சிக்கும் உள்நோக்கத்தில் தெரிவது தரங்கெட்ட அரசியலாகவே தோன்றுகிறது.

ஏனெனில் இந்த ஆவணப்படத்தின் நோக்கம் மலம் அள்ளும்/மலக்குழியில் இறங்கும் கேவலமான நிலையை அம்பலப்படுத்தி அம்மக்களின் நிலைக்கு தீர்வை தேடவேண்டுமெனில், அரசு, அமைப்பு, சமூகம் இவற்றை விமர்சிப்பது தான் சரியாக இருக்கும். அதை விட்டு, இதில் நுழைத்த அரசியல் “தலித் அரசியலை” அடிக்கும் உள்நோக்கம் இருக்குமானால் மிக வருத்தத்துடன் சொல்கிறேன், உங்கள் ஆவணப்படம் எதை செய்ய வேண்டுமோ அதற்கு நேர்மாறான அரசியலை கட்டமைக்கிறது. இழிவாக நடத்தப்படும் நிலையில் துப்புரவு பணியாளர்களை அமைப்பு ரீதியாக பலப்படுத்தாமல், அவர்களிடம் பிரிவினைவாதம் பேசி நீங்கள் சாதிக்கப் போவது என்ன ?

மீனா சோமு, எழுத்தாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.