விளிம்புக்கு அப்பால்: புதிய படைப்பாளிகளின் சிறுகதை சிறப்பிதழ்!

‘அகநாழிகை’ பொன்வாசுதேவன்

பொன் வாசுதேவன்

இலக்கியம் என்பது கோட்பாடுகளிலும், இஸங்களிலும் சிக்கித் தடுமாறிக்கொண்டிருக்கிறது. இலக்கியத்தைச் செய்பவர்களின் நிலை இதுதான். கண்ணுக்குத் தெரியாத பொறியில் சிக்கிக்கொண்டு விவாதங்களும், சண்டைகளும், புறங்கூறல்களும் பெருகிக்கொண்டிருக்கின்றன. எத்தனை எழுத்தாளர்கள் புதிதாக எழுத வருகிறவர்களின் படைப்புகளைப் படிக்கிறார்கள் என்பது தெரியாது. எத்தனை பத்திரிகைகள் புதிய படைப்பாளிகளின் படைப்புகளைப் படித்து அதை வெளியிடுவதில் அக்கறை காட்டுகிறார்கள் என்பது கேள்விக்குறி. ஓடுகிற குதிரையின்மீது அல்லது விரட்டி ஓட வைக்க முடியுமென்று நம்பிக்கை உள்ளவர்களின் மீதுதான் பதிப்பகங்களின் கவனமெல்லாம். புகழ், புகழ விடு என்பதான முதுகுசொறிதல்களில் எழுத்தின் அரிப்பைத் தீர்த்துக்கொள்ள யத்தனிப்பவர்கள் இவர்கள்.

வாசிப்பிலும் எழுத்திலும் ஆர்வம்கொண்ட புதிதாக எழுத வந்திருக்கும் பலரது படைப்புகளை வாசிக்கும் வாய்ப்பு சமீபத்தைய புத்தகக் கண்காட்சியில் கிடைத்தது. அனேகமாக புதிதாக எழுதத் தொடங்கியவர்களின் சிறுகதைத் தொகுப்புகள் பலவற்றைப் படித்துவிட்டேன். தேர்ந்தெடுத்த புத்தகங்களை மட்டுமே படித்ததால், ஒன்றும் பிடிக்காமல் போகவில்லை. இந்நிலையில்தான், புதிதாக எழுதும் இவர்கள் எல்லோருமே மிகக் குறைந்த அளவில் அறியப்பட்டவர்களாகவும், பத்திரிகைகளில் கதை வெளியாகும் வாய்ப்பு இல்லாதவர்களாகவும், அப்படியே இருந்தாலும் ஒன்றிரண்டு கதைகளை எழுதியவர்களாகவும், முதல் முறை அச்சேறுகிறவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

அகநாழிகை இதழை நீண்ட இடைவெளிக்குப் பிறகு கொண்டுவரும் எண்ணம் உதித்தது. முழுக்க புதிய, இளம் படைப்பாளிகளின் படைப்புகளுடன் சிறுகதைச் சிறப்பிதழாகக் கொண்டு வர நினைத்தேன். அதன் அடுத்தகட்டமாக, சிறுகதைச் சிறப்பிதழை புத்தகமாகவே கொண்டு வந்துவிடலாம் என்று தோன்றியது. அப்படி உருவானதுதான் ‘விளிம்புக்கு அப்பால்’ சிறுகதைத் தொகுப்பு. இது அகநாழிகையின் சிறுகதைச் சிறப்பிதழ், அதேசமயம் சிறுகதைத் தொகுப்பு புத்தகமும் கூட. பதிமூன்று புதிய, இளம் படைப்பாளிகளின் சிறுகதையை உள்ளடக்கிய இந்தப் புத்தகம் 160 பக்கங்களில் ரூ.120 விலையில் வெளிவருகிறது.

தேர்ந்தெடுத்துத் தொகுத்த வகையில் இந்தக் கதைகளை வாசித்து ஒரு முன்னுரையை எழுதியிருக்கிறேன் சமகால எழுத்தின் பிரயாசைகள், வகைகள் (Genres), உத்திகள் என இளம் படைப்பாளிகளின் ஆற்றோட்டமான எழுத்தின் வாயிலாக இந்தத் தொகுப்பில் வாசித்து ரசிக்கலாம்.

எழுத்தின் புதிய போக்குகளை புதிய படைப்பாளிகளின் எழுத்துகளின் வாயிலாக அடையாளங்காணவும், இந்த சிறுகதைத் தொகுப்பு / சிறுகதைச் சிறப்பிதழ் என்பதான இந்த புதிய முயற்சிக்கும் உங்களுடைய ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

பொன். வாசுதேவன், எழுத்தாளர்; பதிப்பாளர்.

விளிம்புக்கு அப்பால்
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்
(புதிய படைப்பாளிகளின் சிறுகதைகள்)
தேர்வும், தொகுப்பும்: பொன். வாசுதேவன்
160 பக்கங்கள்
ரூ.120

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.