சோழன்

அறம் செத்த ஒரு சமூகத்தில் அறத்தின் தேவையை வலியுறுத்திப் பேசியதற்காகத்தான் ஆடம் தாஸின் ’பாம்புச்சட்டை’ க்கு ஒரு உரையாடல் கூட்டத்தை நடிப்பு இதழ் ஏற்பாடு செய்தது.
ஒரு நல்ல கதைச் சொல்லியாக எளிய மனிதர்களை பாத்திரங்களாக்கிய இயக்குநர் ஆடம் தாஸின் தார்மீக பொறுப்புணர்விற்கு மரியாதை செய்வதற்காகவும்….
பேச வந்தவர்கள் படத்தின் நிறைகுறைகளை மிக அருமையாக முன் வைத்தார்கள். இறுதியாக இயக்குநர் ஆடம் தாஸ் தன் தரப்பிலிருந்து ஏற்பையும் மறுப்பையும் முன் வைத்தார்.
இந்த கூட்டத்திலிருந்து இறுதியாக நடிப்பு இதழ் பெற்றுக்கொண்ட செய்தி என்னவெனில் குங்குமம் இதழின் ஆசிரியர் கே.என்.சிவராமன் சொன்னதுபோல ”சினிமா இயக்குநரின் மீடியா. இயக்குநருக்கு தன்படத்தின் ஒவ்வொரு ஃப்ரேமின் மீதும் தீர்க்கம் இருக்க வேண்டும். அது கைநழுவிப் போகும் சந்தர்ப்பத்தில் அதற்கான மாற்றை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் இருக்க வேண்டும். இதில் பிசகு நிகழும்போது எல்லாமுமே குலைந்து குழைந்து போகக்கூடும் ” என்பதைத்தான்.
மார்க்கெட்டில் இருக்கும் நடிகர்களைக் கொண்டு இயக்கி தனக்கான இருப்பை உருவாக்கிக்கொண்ட இயக்குநர்களோடும், புதுமுகங்களைக் கொண்டு இயக்கித் தனக்கான வெளிகளை ஸ்திரப்படுத்திக்கொண்ட இயக்குநர்களோடும் நான் பணிபுரிந்திருக்கிறேன். என்னைப் பொறுத்த மட்டில் நாடகத்தில் வேண்டுமானால் நாயகன் நடிகனாக இருக்கலாம். சினிமாவில் இயக்குநர்தான் எல்லாமே. ஹிட்ச்காக் சொல்வதுபோல நடிகன் கருவிகளில் ஒரு கருவி. ஆனால் நடிகனெனும் கருவி கொஞ்சம் கற்பனையும் படைப்பாற்றலும் சமயோசிதமும் கைக்கொண்டவனாக இருக்க வேண்டும். மனம் சொல்வதை உடலும் உடல் சொல்வதை மனமும் கேட்டுச் செயல்படுத்துவதற்கான வெளிப்படையான குழைவுத்தன்மையை இடைவிடாத தொடர்ச்சியில் பெற்றிருக்க வேண்டும்.
சினிமாவின் ஆரோக்கியம் குறித்து அக்கறை உடையவர்கள் ”தன் தொழில் ரீதியான பொறுப்பை மறந்து சொன்னதைச் செய்யும் கிளிப்பிள்ளைகளாக இருக்கும்” நடிகர்களின் பக்கம் நின்று பேசுவதும்; பொறுப்பின்மையை நியாயப்படுத்துவதும் அவர்களது அக்கறைக்கு அவர்களே சவப்பெட்டியை செய்து வைத்துக்கொள்வது போலாகிவிடும்.
ஆரோக்கியம் குறித்த அக்கறையின் அடிப்படைச் செயல் கீழ்மைகளை களையெடுப்பது. முடியவில்லையெனில் குறைந்தபட்சமாக கீழ்மைகளை ஆதரிக்காமலிருப்பது.
கவிஞர் யுகபாரதி, குங்கும் ஆசிரியர் கே.என்.சிவராமன், எழுத்தாளர் லக்ஷ்மி சரவணக்குமார், கவிஞர் மண்குதிரை, இயக்குநர் உஷா கிருஷ்ணன், கவிஞரும் வசன கர்த்தாவுமான பாக்கியம் சங்கர், இயக்குநர் மீரா கதிரவன், இயக்குநர் கீரா, எழுத்தாளர் அஜயன்பாலா, எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன், பத்ரிகையாளர் கே.ஜி. மணிகண்டன், நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய நரேஷ், பதிப்பாளர் டிஸ்கவரி வேடியப்பன்…எல்லோருக்கும் நன்றியும் அன்பும்.
சோழன், ‘நடிப்பு’ இதழின் ஆசிரியர்; நாடக இயக்குநர்.