அசோகமித்திரன்: வாழ்விலே ஒருமுறை!

முத்துகுமார்

வாழ்வின் (பல்வேறு தருணங்களில்) நித்திய அபத்தங்களிலும் அபத்த நித்தியங்களிலும் உழலுபவர்கள் பற்றிய கரிசனையைக் கடந்து சென்று சாந்தி நிறைவுறும் ஆன்மீகமோ, கொதிநிலை, கொந்தளிப்பு அரசியலோ, தத்துவமோ அசோகமித்திரனின் படைப்பு வரைபடத்திற்கு அப்பாற்பட்ட இன்மையே. சமயமற்ற ஆன்மீகம் என்பது அவரது கொள்கையாக இருக்கலாம், ஆனால் அப்பாலைத் தேட்டம் இல்லை, (no trancendance) அற உணர்வு உள்ளார்ந்து அமைதி நிலையில் காந்தியமாக, ஜே.கிருஷ்ணமூத்தியியமாக, பகவத் கீதையியமாகச் சுவடு காட்டுகிறது… என்றாவது ஒருநாள், ஆழமாக உணரும் வாசகர்கள் அவரது நீண்ட நெடும் கதை வரிகளின் இடைவெளிகளில் புதைந்து கிடக்கும் அப்பாலைத் தேட்டச் சாத்தியத்தை கண்டுணரும் சாத்தியமேற்பட்டால் அது அதிசயம்தான்.

வெப் உலகம் இணையதளத்திற்காக 2001-ம் ஆண்டு நான் அவரை நேர்காணல் செய்ய வேண்டியிருந்தது. அப்போது திநகரில் அவர் குடியிருந்தார். நேர்காணல் செய்ய தொலைபேசிய போது நடுக்கம், வாய் குளறல், ஏனெனில் எனக்கு பத்திரிகை உலகம் அப்போது வெகுபுதிது. இது நான் எடுக்கும் முதல் நேர்காணல். மருத்துவப் பிரதிநிதி வேலையிலிருந்து நேரடியாக ஜென்ராமின் அரிய நட்புச் சந்திப்புக்குப் பிறகு வெப் உலக வாசம். ஆனால் அசோகமித்திரன் நிதானமாக ‘எப்ப வருவீங்க?’ என்றார். நான் நேரத்தைச் சொன்னதும், தலைவலி பயங்கரமாக இருக்கிறது மறுநாள் வாங்களேன் என்று கூறினார். அவர் ஆஸ்துமாவுக்காக இன்ஹேலர் உறிஞ்சிக் கொண்டிருந்த காலக்கட்டம், இன்ஹேலர் மருந்து கடும் தலைவலியை ஏற்படுத்தக் கூடியவை என்பது எனது சொந்த அனுபவமும் கூட.

நேர்காணலில் நான் கேட்ட கேள்விகள் அபத்தமானவையா அல்லது அவரை முகம் சுளிக்கவைப்பவையா என்பது கூட தெரியாத காலக்கட்டம், ஆனால் அவர் எந்தக் கேள்வியையும் அப்படி உணரவில்லை என்பது தெரிந்தது. காரணம் அவர் பதில்களில் அவ்வளவு தெளிவு.

பேட்டியை முடித்த பிறகு என்னைப் பற்றி கேட்டார். என் சம்பளத்தைப் பற்றி கேட்டார். நான் என் சம்பளம் 3,000 என்றேன், உங்க எடிட்டர் எவ்வளவு சம்பளம் என்று தெரிந்து கொண்டீர்களென்றால் mind boggling-ஆக இருக்கும் என்றார். 1999 வாக்கில் நான் சென்னை ஐக்கஃப் மன்றத்தில் நடந்த பின் நவீனத்துவம் பற்றிய கருத்தரங்கில் கோணங்கியை விமர்சனம் செய்திருந்தேன், அதையும் அவர் என் பெயரைச் சொன்னவுடன் புரிந்து கொண்டு நீங்க பின்நவீனத்துவ வாதியா என்றார். நான் அப்படிக் கூறிக்கொள்ளும அளவுக்கு எனக்கு வாசிப்பு இல்லை என்றேன். அப்போதைக்கு எனக்கு இந்த சம்பாஷணை ஒரு சந்தோஷ அதிர்ச்சி அளித்தது. எனக்கு நியூ டைரக்‌ஷன்ஸ் என்ற ஒரு பின்நவீனத்துவ படைப்புகள் அடங்கிய நூலையும் சீன நாவல் ஒன்றையும், ஜான் அப்டைக்கின் The Coup என்ற மேஜிக்கல் ரியலிச satire நாவல் ஒன்றையும் எனக்குப் அன்பளிப்பாக அளித்தார். அது பின் காலனிய ஆப்பிரிக்கா பற்றிய ஒரு நையாண்டி நாவல். நிச்சயம் அசோகமித்திரனின் கப் ஆஃப் டீ அதுவல்ல என்று பின்னால் புரிந்தது. ’ஆமா… இந்த Metaphor பத்தி பின்நவீனக்காரா என்ன சொல்றா?’ என்று திடீரென ஒரு கேள்வியைத் தூக்கிப் போட்டார். எங்கும் எப்போதும்-ஏற்கெனவே அனைத்தும் உருவகம்தான் என்று கூறுவார்கள் என்று நான் கூறியதாக நினைவு. பிறகு அவரது தண்ணீர் என்ற ரியலிஸ்ட் நாவலில் கூட தண்ணீர் என்பதை உருவகமாக (தத்துவார்த்த) பேராசிரியர் ஆல்பர்ட் விளக்க முயன்றதைக் குறிப்பிட்டேன். அவர் ஓரளவுக்கு மேல் இதில் ஆர்வம் காட்டவில்லை.

அவர் வில்லியம் பாக்னர், ஹெமிங்வே, ஹென்றி ஜேம்ஸ், ஜாய்ஸ் இன்னும் பல மேதைகளை ஊன்றி வாசித்தவர், ஆனால் அதைப்பற்றியெல்லாம் இப்போது சிலர் பீற்றிக்கொள்பவர்கள் போல் அவர் ஒருநாளும் பீற்றிக் கொண்டதில்லை. அவரை, பேட்டிக்குப் பிறகு வெவ்வேறு நபர்களுடன் ஒரு 4-5 முறையாவது சந்தித்திருப்பேன்.

பேட்டி முடிந்து வெளியே வந்து என் சைக்கிளை எடுக்க வேண்டும், அந்தக் குடியிருப்பில் விளக்கு வெளிச்சம் போதாமையினால் சைக்கிள் பூட்டை திறப்பது கடினமாக இருந்தது. நான் கஷ்டப்படுவதை பார்த்த அவர். உடனே, ‘அந்தப் பக்கவாட்டில் சாவி போட்டு திறப்பது போல் இருந்தால் என்ன கெட்டுவிடப்போகிறது, சைக்கிள் திருடர்கள் பூட்டை உடைத்து எடுத்துச் செல்வது என்ன இமாலய வேலையா? பக்கவாட்டில் இருந்தால் சவுகரியமாக இருக்கும், சைக்கிள் கேரியருக்குள் சாவியை விட்டு திறக்கற மாதிரியான பூட்டு என்னத்துக்கு? இதெல்லம் ‘ரொம்ப கஷ்டம்’! இருங்க நான் டார்ச் லைட் எடுத்துட்டு வரேன்’என்று டார்ச் லைட் எடுத்து வந்தார். நான் பூட்டைத் திறந்தவுடன், இந்தக் காலத்திலும் சைக்கிளில் வரும் பத்திரிகைக்காரராக இருக்கிறீர்கள் என்று ஒரு நமுட்டுச் சிரிப்புடன் என்னை சுயபச்சாதாபம் பீடித்துக் கொள்ளும் விதமாக கூறிவிட்டு உள்ளே சென்றார்.

எனக்கும் உள்ளுக்குள் ஒரு நப்பாசை நிச்சயம் இந்த சைக்கிள் பூட்டு சம்பவம், என் குறைந்த சம்பளம், எனது மிடில் கிளாஸ் உருவம், என்று நான் விரைவில் அவரது கதைமாந்தராக அவரது கதையில் உள்ளே நுழைந்து விடுவேன் என்று கருதினேன். அப்படி ஒரு ஆசை இருந்தது உண்மைதான்!

அவரது மணல் குறுநாவல் என் தாயின் இறப்பு என் குடும்பத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை எனக்கு முன் கூட்டியே சூசகமாக அறிவுறுத்திய அற்புதப் படைப்பு என்றே இப்போதும் என்னால் கருத முடிகிறது. குடும்பத்தினரிடையே இருந்த ஒரு பிடிப்பு தளர்ந்து அனைவருமே ஒட்டுதல் இல்லாமல் ஒரே கூரையின் கீழ் கிட்டத்தட்ட நடைபிணமாகவே வாழ்வார்கள். எம்.பி.பி.எஸ். படிக்க ஆசைக் கொண்ட சரோஜினி மீது தாய் இறந்த பிறகு அனைத்துப் பொறுப்புகளும் விழும், தன் வயதுக்கான இயல்பான காதல் உணர்வுகள் இல்லாமல் இருக்கும் சரோஜினி, கடைசியில் அந்த போட்டோ கடைக்காரர் அழைப்பிற்கு இணங்க சுந்தரம் பார்க் நோக்கி சென்றாள் என்று முடித்திருப்பார். என்னுள் மிகவும் தாக்கம் ஏற்படுத்திய குறுநாவல் இது. என் தாயின் இறப்புக்குப் பிறகு என் குடும்பத்திற்கு நேர்ந்ததை அவர் உளவியல் ரீதியாக படம்பிடித்துக் காட்டியது மட்டுமல்ல, அதன் பிறகு இந்த நாவல் பற்றி நான் பகிர்ந்து கொண்டவர்களிடத்திலும் அவர்கள் குடும்பத்தில் இப்படி நடந்துள்ளதை என்னுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர். மிக அரிதாகவே இம்மாதிரியான நெருக்கம் ஒரு படைப்பு கொடுக்கும். அதில் மணல் குறுநாவலை மறக்க முடியாது.

மனித வாழ்க்கையில் நாம் பெரிதும் பொருட்படுத்தாத, எளிதில் கடந்து சென்று விடுகிற சிறுசிறு சிரமங்கள் அதன் இயல்பைத் தாண்டி மனிதனை கூனிக்குறுக செய்பவை என்பதுதான் அவரது பார்வை. நாம் அன்னியமாகிப் போன நிலையில் அனுபவிக்கும் அன்றாட சவால்கள் அவரது பார்வையில் பூதாகரமாக இருக்கும், ஆனால் அவர் வெளிப்பாட்டு வடிவத்தில் அது பூதாகரமாக இருக்காது, அவர் அந்த சிரமங்களை எதிர்கொண்ட விதம் அவருக்கு அதனை பூதாகாரமாகக் காட்டும் போல் தெரிகிறது.

ஆனால் சிறுசிறு சிரமங்களை அனுபவிக்கும் மத்திய தர வர்க்கத்தினரின் பாடுகளை வேதனையுடனும், அபத்த, அவல நகைச்சுவை உணர்வுடனும் அணுகும் இவர் சாதிப்படிமுறை, அடக்குமுறை கொண்ட சமூகத்தில் ஒரு பிரிவினர் இதை விடவும் மிக மோசமான இழிவுகளைச் சந்தித்தது அவருக்கு உறுத்தாதது நமக்கு உறுத்தலாகவே உள்ளது.

மானசரோவர் நாவல் அதன் வடிவம் அப்போது புதிதானதாகும். ஆனால் கோபால்ராவ் குடும்பத்தில் முஸ்லிம் நடிகர் ஏற்படுத்திய இடையூறு, கோபால்ராவ் மனைவியை மனநிலைப் பிறழ்வுக்கு இட்டுச் சென்றதும் இதனால் தன் குழந்தையையே பலிகொடுத்த பயங்கரமும் அதன் பயங்கரத்துடனேயே அமைதியான முறையில் கூற முடிகிறது அவரால், ஆனால் கடைசியில் மெஹர்பாபா என்ற சாமியார் சத்யன் குமார் என்ற அந்த பாகிஸ்தான் ஆரிஜின் முஸ்லிம் நடிகரை மானசரோவர் புனித நீர் மூலம் பாவ நிவர்த்தி செய்து கொள்ளுமாறு வைத்திருப்பது அவரிடம் உள்ள ஒரு இந்து சநாதனியை வெளிப்படுத்துகிறது. அதாவது குரங்குகள் கதையில் கடைசியில் பண்டிதர் ஒருவர் கூறும் தீர்வுக்கும் இதற்கும் வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படையில் ஒரு சநாதன மனோபாவமே. அவரது மிக முக்கியமான பரிசோதனை நாவலான “இன்று” நாவலில் ஒரு ஆர்.எஸ்.எஸ். குரல் இருக்கிறதே என்று நான் என் பேட்டியில் கேட்ட போது, அவர் ஆம், என்று ஒப்புக் கொண்டார், ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தினரிடையே உள்ள கட்டுக்கோப்பு, ஒழுக்கம் தனக்கு பிடித்தமானது என்றே கூறினார்.

ஒற்றன் நாவலிலும் அயல்நாட்டு எழுத்தாளர் தன் குளிர்பதனப் பெட்டியில் வைத்திருக்கும் அசைவ உணவுகள் பற்றிய சித்தரிப்பும் இத்தகைய மனோநிலையை வெளிப்படுத்துகிறது. தன்னிடம் காதல் உறவுகள், சிக்கல்கள் பற்றி கூறும் இன்னொரு இளம் பெண் எழுத்தாளரின் பிரச்சினை என்னவென்றே அவருக்குப் புரியாததுதான் ஒற்றனில் தெரியவரும். முதன்முதலாக அமெரிக்காவில் இறங்கும் ஒரு நபர் என்ன வயதாக இருந்தாலும் அந்த ஆச்சரியம், குதூகலம் அவரிடம் இல்லை, சென்னயிலிருந்தே அவர் தன் அன்றாடங்களை சுமந்து அமெரிக்கா செல்கிறார், இவ்வாறு குழந்தைமையை இழந்த ஒரு எழுத்தாளராகவே அவர் இருந்திருக்கிறார். ஜான் அப்டைக், ஹென்றி மில்லர் போன்றோரை அவர் வாசித்திருந்தாலும் செக்‌ஷுவாலிட்டி மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் மிகப்பெரிய உளவியல் தாக்கங்களும் அவர் கதைகளில் இருப்பதில்லை, அப்படியே இருந்தாலும் அதுவும் சூழலின் நிர்பந்தம் காரணமாக என்று ஒரு சிச்சுவேஷனிஸ்ட் பார்வை மூலமே வலம் வரும்.

செக்‌ஷுவாலிட்டியும் மனிதனின் அடிப்படைப் பிரச்சினைகளுள் மிக முக்கியமானவை, அந்தரங்கமானவை, ”தனி ஒருவனுக்கு ” சிறுகதையில் சூசகமாகவே அது தெரிவிக்கப்படும். செக்‌ஷுவாலிட்டி என்பது வெறும் தேவை என்ற அளவில் பயன்படுவது என்ற பார்வையைத் தாண்டிய சிக்கல்கள் அவரது கருத்திற்கு எட்டவில்லையா, அல்லது எட்டியும் அது எழுதுவதற்கு உகந்ததில்லை என்று நினைத்தாரா என்பது தெரியவில்லை.

இன்னல்களே அன்றாட வாழ்க்கை சவால்களே அவரது லிட்டில் டிவினிட்டீஸ், யேட்ஸ் கூறும் கேஷுவல் காமெடி, சிறுசிறு புனிதங்கள். different sort of little things நபகோவ் கூறும் divine details, லக்கான் கூறும் particular absolutue இந்தச் சட்டகத்தில்தான் அன்றாட நிகழ்வுகள் அவருக்கு அர்த்தமுள்ளதாகின்றன. ஆனால் இந்த அன்றாட இன்னல்கள் தன்னளவிலேயே ஏற்பட்டு தன்னளவிலேயே வாழ்ந்து விடப்படுவதாகவே காட்டப்படுகிறது, அன்றாடச் சமனிலைக் குலைவுக்கு, தடம்புரளலுக்கு உளவியல் ரீதியான ஒரு அடிப்படைத் துன்பம் (traumatic) எதுவும் அவர் கதைகளில் காட்டப்படுவதில்லை. அதனால் பல வேளைகளில் அவரது கதைக்களங்கள் ஆயாசமூட்டுபவையாகவே இருக்கின்றன.

தன் கேரக்டர்களுடன் ஒரு Pathological attachment உள்ளவர் அசோகமித்திரன். இந்தக் கதாபாத்திரங்கள், இந்தக் கதைவெளிதான் அவரது fantacy space ஆனால் இந்த ஃபான்டசி ஸ்பேஸில் கதாபாத்திரங்களுக்கென பிரத்யேகமான ஃபாண்டசி ஸ்பேஸ் இல்லை. இவர்கள் உழல்பவர்களே. இந்த அன்றாடக்கடமை, நித்திய நிரந்தரங்கள் நம்மைக் கட்டிப்போடும் ஒரு அபத்த பந்தம், அசட்டுத்தனமானவை என்ற ஏதோ ஒரு வேதாந்தம் அவரிடம் உள்ளது. காந்தியம், கிருஷ்ணமூர்த்தியியம் ஆகியவற்றுடன் ஒரு சங்கர வேதாந்தியும் அவரிடத்தில் உள்ளார். எனவே அவருக்குள் அவரை விடாது பிடித்திருக்கும் ஒரு சனாதனியை அவரது எழுத்துக்கள் மூலம் எளிதில் கடந்து விட முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை.

முத்துக்குமார், ஊடகவியலாளர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.