எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட “அதிமுக சட்டவிதிகள்” இவைதான்…

சசிகலா தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது அ.தி.மு.க.வின் சட்டத்திட்டங்களுக்கு விரோதமானது என்று ஓ.பன்னீர்செல்வம் அணியினர், கூறுகிறார்கள். டி.டி.வி. தினகரன் தலைமையிலான அ.தி.மு.க.வோ, சட்டவிதிகளின்படி பொதுக் குழுவால்தான் சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்  என்று உறுதிபட தெரிவிக்கிறது.

அ.தி.மு.க. விதிகள் என்ன கூறுகின்றன?. இருவருமே அ.தி.மு.க. சட்டத்திட்டங்களை தங்கள் வாதங்களுக்காக வலுசேர்க்கிறார்கள். ஆக, சட்டத்திட்டங்கள் என்னதான் கூறுகிறது? என்பது எல்லோரும் தெரிந்துகொள்ள விரும்பும் ஒன்றாகும்.

அ.தி.மு.க. விதிகளின்  முக்கியம்சங்களை தொகுத்திருக்கிறோம்.

* அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ம் நாள் பேரறிஞர் அண்ணாவின் லட்சியங்களான சாதியற்ற, சமதர்ம, பகுத்தறிவு சமுதாயத்தை இந்திய அரசியல் சட்டத்திட்டத்துக்குட்பட்ட ஜனநாயக வழியில் நிறைவேற்ற புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது.

* அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் தலைமை தமிழகத்தில் இயங்கும்.

* அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் நேரடிப் பொறுப்பில் கழகத்தின் தமிழ் மாநில பிரிவு இயங்கும். எனவே, தமிழகத்துக்கு என தனி செயலாளர் இருக்கமாட்டார்.

* பொதுச்செயலாளர் விரும்பினால், தமிழ் மாநிலக் கழக நிர்வாகத்துக்கென ஒரு துணை செயலாளரை நியமித்துக்கொள்ளலாம். பொதுச்செயலாளர் நிர்வாக வசதிக்காக பொது உறுப்பினர்களில் இருந்து ஒரு துணை பொதுச்செயலாளரையும், 10-க்கும் மேற்படாத தலைமை கழக செயலாளர்களையும் நியமித்துக்கொள்வார்.

* 1976 அக்டோபர் 17-ம் நாள் முதல் இந்த சட்டத்திட்டங்கள் அமலுக்கு வரும்.

* கழகக் கொடி நீள, அகலத்தில் முறையே 3 பங்குக்கு 2 பங்கு விகித அளவில் 3:2 இருக்கவேண்டும். கொடியின் நீளத்தில் சரிபாதி மேல் பகுதி கருப்பு நிறமாகவும், சரிபாதி கீழ்பகுதி சிவப்பு நிறமாகவும் இருக்கவேண்டும்.

* கழகத்தினுடைய குறிக்கோள்களையும், நோக்கங்களையும் ஏற்று, கழகத்தினுடைய சட்டத்திட்டங்களுக்குட்பட்டு கழகத்தை வளர்ப்பதற்காக உறுதியேற்று நடத்தும் 18 வயது நிரம்பிய அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண், பெண் இருபாலரும், கழகத்தின் முடிவே இறுதி முடிவு என்றும், அதற்கு எதிராக வழக்குமன்றங்களுக்கு போவதில்லை என்றும் ஏற்றுக்கொண்டவர்கள் மட்டும் உறுப்பினர்கள் ஆவதற்கு தகுதி படைத்தவர்கள் ஆவார்கள்.

* சாதி, மத சங்கங்களிலோ, அல்லது வேறு அரசியல் கட்சி அமைப்புகளிலோ, உறுப்பினர்களாகவோ, அல்லது நேர்முகமாகவோ, மறைமுகமாகவோ தொடர்புகொண்டவர்கள் கழகத்தில் உறுப்பினராக இருக்கும் உரிமையை இழந்துவிடுகிறார்.

* கழக சம்பந்தமான எந்த பிரச்சினைகள் பற்றியும் வழக்குமன்றங்களுக்கு செல்ல கழக உறுப்பினர்களுக்கு உரிமை இல்லை.

* தலைமைக்கழக பொதுக்குழு, கழகத்தின் முழு அதிகாரங்களை கொண்ட தலைமை அமைப்பாகும். பொதுக்குழுவின் முடிவே இறுதி முடிவாகும்.

* பொதுக்குழுவின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் கழகத்தினுடைய அவைத்தலைவர், பொருளாளர் பொதுக்குழுவில் இடம்பெறுவர்.

* பொதுக்குழு கூட்டம் குறைந்தது 6 மாதங்களுக்கு ஒருமுறை பொதுச்செயலாளரால் கூட்டப்படும்.

* பொதுக்குழு கூட்டம் குறைந்தது 15 நாள் முன்னறிவிப்புடன் கூட்டப்படவேண்டும்.

* கழக கொள்கைகளை வகுப்பது, அவற்றை நிறைவேற்ற திட்டங்களை தீட்டுவது, கழகத்தை வழிநடத்தி செல்வது போன்ற கழகத்தை பொருத்த எல்லா நடவடிக்கைகளிலும் இறுதிமுடிவு எடுக்க பொதுக்குழுவே முழு அதிகாரம் பெற்றதாகும்.

* பொதுக்குழுவின் கால அளவு பொதுவாக 5 ஆண்டுகள் ஆகும்.

* பொதுச்செயலாளர்:- கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தில் இருக்கக்கூடிய எல்லா பொது உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படுவார்.

* கழகத்தின் நிர்வாக பொறுப்புகள் அனைத்தையும் நிர்வகிப்பவர் பொதுச்செயலாளராவார்.

* பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் செயற்குழு உறுப்பினர்களும், துணை பொதுச்செயலாளரும், தலைமைக் கழக செயலாளர்களும், அந்த பொதுச்செயலாளரின் பதவிகாலம் வரையில் நீடிப்பர். இதற்கிடையில், பொதுச்செயலாளர் விடுவிக்கப்பட்டாலோ, அல்லது பதவியிலிருந்து விலகினாலோ, இடைப்பட்ட காலத்தில் அதாவது புதிய பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பை ஏற்கும் வரையில், முந்தைய பொதுச்செயலாளரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் பதவியில் நீடித்து கழக பணியினை தொடர்ந்து செயல்படுத்தவேண்டும்.

* பொதுக்குழு, செயற்குழு கூடாத நேரங்களில், அரசியல் நிகழ்ச்சிகள், நடவடிக்கைகள் பற்றிய கொள்கை-திட்டம் ஆகியவற்றைப்பற்றி அவசரத்தின் முன்னிட்டு தக்க முடிவுகள் எடுக்க பொதுச்செயலாளருக்கு உரிமை உண்டு. அந்த முடிவுகளுக்கான ஒப்புதலை அடுத்து கூடும் பொதுக்குழுவில் பெறவேண்டும். பொதுக்குழு கூடாத நேரங்களில், குறிப்பிட்ட அரசியல் நிகழ்ச்சி, நடவடிக்கை பற்றி பொதுக்குழு உறுப்பினர்களின் கருத்துகளை பொதுச்செயலாளர் கடிதம் மூலம் கேட்டு ஒப்புதல் பெறலாம்.

* துணை பொதுச்செயலாளர்:- பொதுச்செயலாளர் அவர்களால் நியமனம் செய்யப்படுவார்.

* பொதுச்செயலாளர் இல்லாத நேரத்தில், துணை பொதுச்செயலாளர் அவரது பொறுப்புகளை ஏற்று பணிகளை நிறைவேற்றுவார்.

* அவைத்தலைவர்:- தலைமை கழகத்தின் அவைத்தலைவர், பொதுக்குழுவின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்.

* அவைத்தலைவர்- பொதுக்குழு -செயற்குழு கூட்டங்களுக்கு தலைமை ஏற்று நடத்தி கொடுப்பார். அவைத்தலைவர் இல்லாத நேரங்களில் உறுப்பினர்களில் ஒருவர் தலைமை ஏற்று நடத்தி கொடுப்பார்.

* பொருளாளர்:- பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார். கழகத்தின் வரவு- செலவு கணக்கு, நிர்வாக பொறுப்புகளை வகிப்பவர் கழக பொருளாளர் ஆவார்.

* ஆட்சிமன்ற தேர்வு குழு 7 உறுப்பினர்களை கொண்டதாகும். பொதுச்செயலாளர் – துணை பொதுச்செயலாளர் ஆகியோர்களை தவிர, 5 உறுப்பினர்களை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பர்.

எம்.ஜி.ஆர் மறைவுக்குப்பிறகு,அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா,  கட்சியின் சட்டத்திட்டங்களில் சில திருத்தங்கள் கொண்டுவந்தார். அதில் பின்வருவனவற்றை குறிப்பிட்டு இருக்கிறார்.
* கட்சியில் இருந்து தாங்களாகவே விலகி செல்பவர்களும், பொதுச்செயலாளரால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு நீக்கப்பட்டவர்களும், கட்சி உறுப்பினர் பதவியை இழக்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் மீண்டும் கட்சியில் சேர்க்கப்படும்போது, அவர்கள் மீண்டும் சேர்க்கப்பட்ட நேரத்தில் இருந்து அவர்களது உறுப்பினர் காலம் கணக்கிடப்படும். அவர்கள் அமைப்பு ரீதியான தேர்தல்களில் போட்டியிட 5 ஆண்டுக்கு பிறகுதான் தகுதிபடைத்தவர்கள் ஆவார்கள்.

* இந்த விதி, பொதுதேர்தல், அல்லது உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து நின்று போட்டியிட்டதற்காக, கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு அதுகுறித்து அறிவிப்பு வெளியிடவில்லை என்றாலும் பொருந்தும்.

* பொதுச்செயலாளருக்கு இந்த விதியை தளர்த்த உரிமை இருக்கிறது.

* பொதுக்குழுவுக்கு கட்சியின் எந்தவொரு விதியையும் உருவாக்கவோ, திருத்தம் செய்யவோ, நீக்கவோ உரிமை இருக்கிறது. ஆனால், பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் விதியில் மட்டும் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களால்தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்பது மாற்றப்படவோ, திருத்தப்படவோ முடியாது. ஏனெனில், அதுதான் கட்சியின் அடிப்படை கட்டமைப்பாகும்.


மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.