பெண்கள் தினமான நேற்று, கொச்சியின் மிகப் பிரபலான மெரைன் ட்ரைவில், “குடைக்குக் கீழேயான காதலுக்கு முடிவு கட்டும் போராட்டம்” என்று எழுதப்பட்ட பேனர்களுடன் வலம் வந்த சிவசேனா அமைப்பை சேர்ந்தவர்கள், அங்குக் கண்ணில் பட்ட இளம் ஜோடிகளைச் சரமாரியாகத் தாக்கத் துவங்கியுள்ளனர். அது மட்டுமல்லாமல், கையில் பிரம்புடன் பெண்களின் பின்னால் சென்ற அந்த அமைப்பினர், அவர்களிடம் மிக மோசமான வசைகளை உதிர்த்ததுடன், அந்தப் பிரம்பினால் அவர்களை அடித்து விளாசியுள்ளனர்.
இதைத் தடுக்க வேண்டிய போலீசார், கைகட்டி வேடிக்கை பார்த்ததுடன், சிவசேனா கட்சியினரின் தங்களின் அராஜகங்களை அரங்கேற்றி கொள்ளவும் அனுமதி அளித்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்குப் பணியில் இருந்த சப் இன்ஸ்பெக்டர் விஜயசங்கர் என்பவர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அங்கிருந்த சுமார் பத்து போலீசார் பணியிட மாற்றம் செய்யபப்ட்டுள்ளனர்.
சிவசேனா அமைப்பின் இந்த அராஜகம் குறித்து கண்டனம் வெளியிட்டுள்ள முதலமைச்சர் பினராயி விஜயன் “கலாச்சார காவலர்களுக்கோ, ரவுடித்தனத்திற்கோ இடமில்லை என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். காவலர்களின் லத்தி என்பது இது போன்ற நபர்களுக்கு எதிராகத்தான் செயல்பட வேண்டும் என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவுக்கு நேர்ந்த அவமானம் இது என்று சுட்டிக்காட்டியுள்ள பினராயி விஜயன் “பெண்களை அடிமைபப்டுத்தியே வைத்திருக்க விரும்பும் ஆணாதிக்கத்தின் வழியில் செயல்பட இது போன்ற மனிதர்கள் விரும்புகிறார்கள். பெண்களை வீட்டிற்குள் பூட்டி வைக்கவே இவர்கள் ஆசைப்படுகிறார்கள்.
ஒன்றாக காபி அருந்திக்கொண்டிருக்கும் இளைஞி, இளைஞன் , ஒன்றாக பயணிக்கும் இளைஞி, இளைஞன் , ஒன்றாக பணிபுரியும் இளைஞி, இளைஞன் மீது வன்முறையை பிரயோகித்த மனிதர்கள், மனதளவில் ஊனமுற்றுவர்கள். இன்றைய காலகட்டத்தில் கலாச்சார காவல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் பினராயி கூறியுள்ளார்.