மார்பக வரி தெரியுமா?: மார்பை அறுத்து எறிந்து போராடிய பெண்ணின் ரத்த வரலாறு…

கேரளாவில் நிலவிய சாதியக்கொடுமைகளைப் பற்றி ஏராளமான நூல்களும், வரலாறுகளும் இன்னும் எழுதப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் நங்கெலி என்கிற பெண்ணின் தியாகம் மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்.

சேர்த்தலாவில் மனோரமா காவலா அருகில் உள்ள பகுதி ஒரு காலத்தில் இவருடைய தியாகத்தை நினைவூட்டும் வகையில் முலச்சிபறம்பு என்று அழைக்கப்பட்டது.

18, 19ம் நூற்றாண்டுகளில் திருவிதாங்கூர் மன்னர்கள் கேரளத்தின் பெரும்பகுதியை ஆண்டு வந்தனர். திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சியில் அடிமைப்பட்டுக் கிடந்த கீழ்சாதி மக்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்பட்டன. உலகில் வேறெங்கும் விதிக்கப்படாத வரிகள் இவர்கள் மீது விதிக்கப்பட்டன. இவ்வாறு வசூலிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு அரச வம்சம் செல்வச் செழிப்புடன் விளங்கியது.

நிலங்கள், விளைச்சல் மீது மட்டும் வரி விதிக்கப்படவில்லை. விவசாயிகள் நகை அணியும் உரிமைக்கு வரி, மீசை வளர்ப்பதற்கு வரி, பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைத்துக் கொள்வதற்குக் கூட வரி கட்ட வேண்டும். இந்த வரிக்குப் பெயர் “முலக்கரம்”

இது போன்ற மனிதகொடூரங்கள் கொண்ட வரிகளால் கீழ்சாதி மக்கள் தொடர்ந்து துயரத்தில் உழல்வது உறுதிப்படுத்தப்பட்டதுடன், கொழுத்த உயர்சாதியினர் கொழுத்துக் கொண்டேயிருந்தனர்.

சேர்தலாவில் வாழ்ந்த ஏழ்மையான ஈழவப் பெண் நங்கேலி . அரசு விதித்த வரியை அவருடைய குடும்பத்தினரால் கட்ட முடியவில்லை என்பதால், அந்தக் குடும்பமே ஆட்சியாளர்களிடம் பெரும் கடன் பட்டிருந்தது.

பரவாத்தியார் என்று அழைக்கப்படும் வரி வசூலிப்பவர் அவளுடைய வீட்டுக்கு வந்து வரியைக் கட்டுமாறு கேட்டார். வீட்டில் இருந்த நங்கேலி வரி கட்டுவதற்குப் பணம் இல்லாததால் தன்னுடைய மார்பகங்களை அறுத்து ஒரு வாழை இலையில் வைத்துப் பரவாத்தியாரிடம் கொடுத்தார். அதைக் கண்ட பரவாத்தியார் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்.

வீட்டு வாசற்படியிலேயே விழுந்த நங்கேலி தன்னுடைய மார்பிலிருந்து வடிந்த ரத்தத்தால் அந்த இடத்தையே நனைத்து  அங்கேயே மரித்தாள். வீட்டுக்கு வந்த அவருடைய கணவன் சிறுகண்டன் சின்னாபின்னமடைந்த தனது மனைவியின் உடலைக் கண்டார். மனைவியின் சிதையில் துக்கம் தாங்காமல் விழுந்து இறந்தார். இந்தச் சம்பவம் 1803ம் ஆண்டில் நடந்தது.

இச்சம்பவம் ஆலப்புழா உள்ளிட்ட நகரங்களிலும், சேர்த்தலாவை சுற்றியுள்ள பகுதிகளில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மாநிலமெங்கும் மன்னராட்சி விதித்த முலக்கரம்( மார்பக வரி) வரியை எதிர்த்து இயக்கங்கள் நடந்தன. 1812ம் ஆண்டில் மார்பக வரி வசூலிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

சாதிய அடக்குமுறையின் ஒருவகைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அவர் வசித்து வந்த பகுதிக்கு முலச்சிபறம்பு என்று பெயரிடப்பட்டது.

முலச்சிபறம்பு என்றால் மார்பகம் கொண்ட பெண்ணின் நிலம் என்று அர்த்தம்.

 

Source: தீக்கதிர்.

 

 

 

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.