ஒடியன் லட்சுமணன்

வழக்கமான ஜக்கிவாசுதேவின் பேட்டிக்கும் நேற்று அவர் அளித்த பேட்டிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தது . தன்மேல் வீசப்படுகின்ற குற்றச்சாட்டுகளை அவர் நிச்சயமாக மகிழ்வுடன் எதிர்கொள்ளவில்லை. அவரின் உடல்மொழியும் கண்களும் பதட்டத்தையே காட்டியது.அந்த சிரிப்புகூட வரட்டுத்தனமாகவே இருந்தது அவரிடம் இருப்பது ஞானமல்ல சாதரணமான பொதுப் புத்திதான் என்பது அப்பட்டமாக தெரிந்தது.
அவர் சொன்னது பெரும்பாலும் உண்மைக்கு புறம்பானதுதான்.
செயல்பாட்டாளர்கள் 3 வருடங்களாக ஆவணங்களைத்திரட்டும் வேலைகளை மட்டுமே செய்துவந்தனர். அது முழுமையடைந்த பிறகே பேசவும் எழுதவும் போராடவும் செய்தனர்.
குற்றம் ஏதுமில்லையென்றால் நீர் மற்றும் யானை வழித்தடங்களை மீட்கப்போராடும் போராளிகளை இரண்டு கோடிக்கு அவருடைய ஆட்களைவிட்டு விலைபேசவேண்டிய அவசியமிருந்திருக்காது.
உணமையில் செயல்பாட்டாளர்கள் மதப்பாரபட்சம் பார்க்கவில்லை. அவர்கள் காருண்யாவையும் ஈசா மையத்தையும் ஒரே தட்டில்தான் வைத்துப்பார்க்கிறார்கள். சொல்லப்போனால் அதில் 96 சதமான பேர் சான்றிதழ்படி அவர்களின் குடும்ப வழக்கப்படி இந்துக்களே… வெள்ளிக்கிழமை தவறாமல் கோவிலுக்குப் போவதை வழக்கமாகக்கொண்டவர்கள்.
நேற்றைய பேட்டியை நான் இணையம் வழியேதான் பார்த்தேன். அங்கு போடப்பட்ட கமெண்டுகள் பல ஈசாவை எதிர்த்தே இருந்தது . இஸ்லாமியப்பெயர்களில் பல கமெண்டுகள் போடப்பட்டது.. அது தற்செயலானதல்ல.. அதைத்தொடர்ந்து செல்வன் என்பவர் இஸ்லாமிர்களே வெளியேறு என்று கமெண்டுகளை போட்டுக்கொண்டிருந்தார் . ஈசாவை ஆதரித்து ஜெகனோடு குறைந்த எண்ணிகையிலான நபர்களே சத்குரு ராக்ஸ் என்று நூறு கமெண்டுகளை தொடர்ந்துபோட்டுக்கொண்டிருந்தார்கள்.
உரிமைப் பிரச்சினைகளுக்காக செயல்படும் நண்பர்கள் ஒரு வரியோ இரண்டு வரியோ மக்களுக்கு புரியும் மொழியில் எழுதுவதற்க்கும் பேசுவதற்கும் நல்ல பலன் இருக்கிறது என்பதற்கான சாட்சியாகத்தான் அதை என்னால் பார்க்கமுடிகிறது.
ஊடகபலம் அதிகார பலம், பணபலம் பொது புத்தி இவற்றை எதிர்த்து இந்தப் பிரச்சினையை இவ்வளவுதூரம் இழுத்து வந்திருப்பது சாதரணமான விசயமல்ல… நிச்சயமாய் ஏதாவது ஒரு தொலைக்காட்சி, செயல்பாட்டாளர்களை ஒரு கூட்டுப்பேட்டிக்கு அழைத்து வாய்ப்பளிக்கவேண்டும்.
ஒடியன் லட்சுமணன், எழுத்தாளர்; செயல்பாட்டாளர்.