நிழலழகி – 3 : நிஜ விடுதலை நோக்கிப் பயணித்த வீரா!

கே.ஏ.பத்மஜா

கே. ஏ. பத்மஜா
கே. ஏ. பத்மஜா

பெண்களை ‘ப்ரொட்டாகனிஸ்ட்’ ஆகவும், முக்கியக் கதாபாத்திரங்களாகவும் பதிவு செய்த நல்ல சினிமா படைப்புகள் குறித்த பார்வையே இந்தத் தொடர்.

Highway | Hindi | Imtiaz Ali | 2014

‘ஹைவே’ – இம்தியாஸ் அலி இயக்கத்தில் ரந்தீப் ஹூடா, ஆலியா பட் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிந்தி திரைப்படம்.

நீங்கள் இதுவரை ஹிந்தி சினிமா பார்த்ததில்லை என்றால், இந்தப் படம் பாருங்கள்; உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். நீங்கள் ஹிந்தி சினிமாவை விரும்பிப் பார்ப்பவர்களா, இந்தப் படத்தை தவறவிடாதீர்கள். நீங்கள் சினிமாவுக்கும் வாழ்க்கைக்கும் தொடர்புடைய உயிர்ப்பான படைப்பை நம்பும் தீவிர சினிமா ரசிகர் என்றால், உங்கள் பட்டியலில் அடுத்துத் தேடி பார்க்கவேண்டிய படம் ‘ஹைவே’.

பாலிவுட் என்றாலே என்றாலே கண்ணைப் பறிக்கும் காட்சிகளும், வண்ண வண்ண ஆடைகளும் மட்டும்தான் என்ற பிம்பம் பரவலாக இருப்பதற்கு அங்கிருந்து உற்பத்தியாகும் வணிக திரைப்படங்களே காரணம். ஆனால், அங்கும் நல்ல சினிமா அவ்வப்போது வெளியாகின்றன. அவற்றில் ஒன்றான இந்தப் படத்தில் நீங்கள் கதை, இசை, காட்சி அமைப்பு, பாடல்கள், நடிப்பு, ஒளிப்பதிவு, ஒலி அமைப்பு… இப்படி எதில் பயணிக்க நினைத்தாலும், அது சுகமான அனுபவமாகவே நிறைவு தரும்.

‘ஹைவே’ இப்படி பல அம்சங்கள் போட்டிபோட்டு மனதில் தனித்தனியாக டிக்கெட் போட நினைத்தாலும், படம் பார்த்து முடித்த பின்னும் பல மாதங்களாக என் மனத்திற்குள் பயணிக்கும் வீரா என்ற வீரா திரிபாதி (ஆலியா பட்) கதாபாத்திரம் என்றும் மறக்க முடியாதவள் என்றே கருதுகிறேன்.

அரசியல் பின்பலம் நிறைந்த செல்வந்தரின் மகள் வீரா. ஆடம்பரமாக ஏற்பாடாகும் தன்னுடைய திருமணத்திற்கு எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் தயாராகிறாள். திருமணத்திற்கு முந்தைய இரவு தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையுடன் வீட்டிற்கு தெரியாமல் வெளியே செல்கிறாள். அப்போது எதிர்பாராதவிதமாக மகாவீர் (ரந்தீப் ஹூடா) தலைமையிலான ரவுடி கும்பலால் கடத்தப்படுகிறாள். அதன்பின் அவள் சந்திக்கும் பிரச்சினைகளையும், அதையொட்டிய நெடுஞ்சாலை பயணத்தில் தன்னுடைய வாழ்க்கையின் தேடலை கண்டடைவதும்தான் கதையின் சுருக்க வடிவம்.

ஆரம்பம் முதல் இறுதி வரை ஏக்கமாய், பரிதாபமாய், பொறாமையாய், பதற்றமாய், தைரியமாய், அன்பாய், அரவணைப்பாய் வீரா தோற்றமளிப்பாள். ஏதோ ஒரு சாயலில் எந்த ஒரு பெண்ணும் தனக்குள் ஒரு வீராவை கண்டடைய முடியும். ஆகையால், காட்சிக்குக் காட்சி விவரித்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை முழுமை பெறாது. எனவே, எனக்குள் இருந்த வீரா வெளிப்பட்ட விதம் மட்டும் பகிர்கிறேன். இப்படம் பார்க்கும் பெண்கள் தங்களுக்குள் இருக்கும் வீராவை மிக எளிதில் அடையாளம் காண்பார்கள்.

மகாவீர் கடத்தி வந்திருப்பது ஒரு செல்வந்தரின் மகள் என்று தெரிந்ததும் பெரும் பிரச்சினை என்று தனது கும்பல் தலைவன் பின்வாங்கும்போது, பணக்காரர்களின் ஒடுக்குமுறையில் வெறுத்துபோய் இருந்த மகாவீர், தானே வீராவை எங்காவது கொண்டுபோய் விற்றுவிடுவதாக நெடுஞ்சாலை நோக்கி ஆள்கடத்தல்காரனாக தனது பயணத்தை வீராவுடன் தொடங்குகிறான்.

எளிதில் கணித்திட முடியாத குணாம்சங்கள் கொண்ட மகாவீர் உடனான பயணத்தில், அவன் மிகவும் பாதுகாப்பானவன் என்று தெரியும்போது அவனிடம் இருந்து தப்பிக்கும் முயற்சியைக் கைவிடுகிறாள். அந்தப் பயணத்தை அனுபவித்துத் தொடரும் வீரா ஒருகட்டத்தில், தனக்கு குழந்தைப் பருவத்தில் நடந்த அவலத்தை மகாவீருடன் பகிர்ந்து தோள் சாய்கிறாள்.

வீராவின் ஒன்பதாவது வயதில், தன் வீட்டிற்கு வெளிநாட்டு சாக்லேட்களுடன் வரும் மாமா மடியில் உட்காரவைத்து அவளைக் கொஞ்சுவார். பினபு தனிமையில் மடியில் வைத்து அனுபவிப்பார். குளியல் அறை வரை இது நீடிக்கும். அவள் சத்தம்போட்டு கத்துவதற்கு முயற்சிக்கும்போது அவளுடைய வாயைப் பொத்துவார். நடப்பதை யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டி வெளியில் அனுப்புவார். ஒவ்வொரு முறை அவர் வீட்டிற்கு வரும்போதும் குழந்தை வீராவை வலுக்கட்டாயமாக மடியில் அமர்த்திக்கொள்வார்.

இதை மனமும் கண்களும் கலங்கியபடி விவரிக்கும் வீரா, “ஒருநாள் என் அம்மாவிடம் இதை சொன்னபோது, அவர் ‘ஷ்ஷ்ஷ்… யாரிடமும் இதைப் பற்றி சொல்லாதே’ என்றார். எல்லாம் ஒரு காலத்தில் நின்றுபோனது. ஆனால், இன்னும் அந்த மாமா எங்கள் வீட்டிற்கு வருகிறார். அவர் காலில் விழுந்து வணங்கவேண்டும் என்பது கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுடனான கலாச்சாரமாம்” என்று வெதும்பிச் சொல்வாள்.

அந்தக் காட்சி முடிந்தவுடன் சில நிமிடங்கள் என்னால் படத்தைத் தொடர்ந்து பார்க்க இயலவில்லை. என் சிறுவயது நிகழ்வு நினைவுக்கு வந்தது. அப்போது நான் ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். ஒரு விடுமுறைக்கு கேரளாவில் வசிக்கும் அக்கா வீட்டுக்குச் சென்றேன். என் அண்ணன்தான் என்னை அங்கிருந்து திரும்ப ஊருக்கு அழைத்து வரவந்தார். நாங்கள் இருவரும் மாலை ஐந்து மணிக்கு ரயிலில் புறப்பட்டோம். எனக்கு ஜன்னலோரம் இருக்கை. அங்கிருந்து பார்த்தாலே அந்த கம்பார்ட்மென்ட்டின் கழிவறை வாசல் தெரியும். என் அண்ணன் ஆறு பேர் கொண்ட இருக்கையில் அமர்ந்திருந்தார். இருட்டத் தொடங்கியது. அந்த கழிவறை கதவு இடுக்கிற்குள் இருந்து ஒரு நபர் கதவை லேசாக திறந்துவைத்துக்கொண்டு அவரது ஆடையைக் களைத்து அவரது அந்தரங்க உறுப்பை என் பார்வையில் படும்படி தொடர்ந்து காட்டிக் கொண்டிருந்தார். நான் பார்க்காமல் வேறு பக்கம் திரும்பியே இருந்தால், பக்கத்தில் வந்து நின்று பதற்றத்தைக் கொடுத்தார். வேறு யாராவது பாத்ரூம் வாசல் பக்கம் வரும்போது உள்ளே போய் கதவை மூடிக்கொண்டார். அன்று இரவு பெருங்கொடுமையை அனுபவித்தேன். எனக்கு நடந்ததை நான் யாரிடமும் சொல்லவில்லை. இப்போது, இந்தப் பக்குவம் நிறைந்த வயதில் நான் யோசித்து பார்க்கிறேன், ‘நான் ஏன் யாரிடமும் சொல்லவில்லை’ என்று.

முதலில் எனக்கு அந்த வயதில் யாரிடமும் இதைச் சொல்லவேண்டும் என்று தோணவில்லை. இதுபோன்ற பாலியல் தொந்தரவுகளை எதிர்கொண்டால், சத்தமாகக் கத்த வேண்டும் என்ற அடிப்படையைக் கூட யாருமே அப்போது எனக்கு சொல்லித் தந்திருக்கவில்லை.
நான் ஏன் வேற இருக்கைக்கு மாறி உட்கார்ந்திருக்கக் கூடாது என்ற கேள்வி எழுந்தது. எப்போதும் பெண்களுடன் தான் சிறுமிகள் உட்கார வேண்டும் என்று நம் வீட்டுப் பெரியவர்கள் சொல்லிக்கொடுத்திருக்கிறார்கள். அந்த ஆறு சீட்டிலும் ஆண்களே இருந்ததால்தான் என் அண்ணனிடம் இடம்மாறி உட்காருவதற்கு கேட்க வேண்டும் என்ற எண்ணமே எனக்கு அப்போது எழவில்லை போலும். பாதுகாப்பற்றச் சூழலை சமாளிக்கக் கற்றுத்தராமல் குழந்தைகள் வளர்க்கப்படும் விதம்தான் அப்போது என்னை அந்தக் கொடுமையில் இருந்து விடுபட முடியாத சூழலுக்குத் தள்ளியது.

இந்தப் படத்தில், நெடுஞ்சாலையில் வாழ்க்கை அனுபவங்களைப் பெற்ற பின், வீட்டுக்குத் திரும்புவும் அழைத்து வரப்படும் வீரா, தைரியமாக அந்த மாமாவிடம் ‘ஏன் என்னை சிறுவயதில் அப்படி மடியில் வைத்துக்கொண்டாய்? ஏன் எனது வாயை அடைத்தாய்?’ என்று கேட்டு கத்திக் கதறுவாள். அவமானம் தாங்க முடியாத அந்த மாமா வெளியேறுவார். அப்போது தன் அப்பாவிடம், ‘வெளியே போகும்போது பத்திரமா போ-ன்னு சொல்லி கொடுத்தீங்களேப்பா… ஏன் வீட்டில் இருப்பவர்களிடம் என்னை பத்திரமாய் இருக்க எனக்கு சொல்லிக்கொடுக்கலை?’ என்று அழுவாள். தன் மகளுக்கு ஏற்பட்ட கொடுமையின் அதிர்ச்சியில் மௌனமாய் கலங்குவார் அப்பா.

நம் சமூகத்தில் இன்றும் ஒரு குழந்தை (இரு பாலர்) பாலியல்ரீதியில் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படும் சம்பவங்கள் மட்டுமே விசாரணைக்கும் விவாதத்துக்கும் எடுத்துக்கொள்ளப்படுகின்றன. ஆனால், வாழ்நாள் முழுவதும் மனதில் மாறாத வடுக்களாக இருக்கின்ற குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. குறிப்பாக, குடும்ப உறுப்பினர்களால் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் பாலியல் கொடுமைகள் கண்டுகொள்ளப்படுவதும் வெளியில் தெரிவதும் சொற்பமே. கவுரவம் என்ற பெயரில் குடும்ப மரியாதை சீர்குலையக் கூடாது என்ற சில்லறைத்தனத்துடன் அப்படிப்பட்ட கீழ்த்தரமான உறவினர்களை பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினரே காப்பாற்றும் அவலம் இன்னமும் நீடிக்கிறது. அதனால், இந்த நொடி கூட நம் நாட்டில் ஏதோ ஒரு மூலையில் உடல்ரீதியிலான பாலியல் தொந்தரவுக்கு ஆளாகும் குழந்தை வீராக்கள் வாய் பொத்தப்பட்டு கொடூரங்களை அனுபவித்து வருகின்றனர்.

தனக்கு சிறுவயதில் நடந்த கொடுமையால் மனரீதியில் வெளியே பகிரமுடியாத பாதிப்பில் இருந்த வீரா, அந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு சுகந்திரமாகவும் தைரியமாகவும் தனக்கான வாழ்க்கையை தெரிவு செய்து, அதை நோக்கி பயணிக்கத் தொடங்கும்போது, அவள் மனம் லேசாவதையும் நம் மனம் கனப்பதையும் உணர்வோம்.

இந்த விஷயத்தில் மட்டுமல்ல, இன்னும் பல கோணங்களிலும் நம்மை வீரா மிரளவைப்பாள். ‘ஹைவே’ படத்தை மகாவீர் கோணத்தில் பார்த்தாலும், சூழ்நிலையால் நெஞ்சம் கல்லாகிப்போய் திசைமாறியவனிடம் இருந்த மனிதத்தையும் நிபந்தனையற்ற அன்பையும் அவள் மீட்டெடுப்பாள். அவனுடன் வலுக்கும் உறவுக்கு அடையாளம் பூசுவதில் கவனம் கொள்ளாமல், அவனைத் தாயாகவும் அரவணைப்பாள். இப்படி, இந்த நெடுஞ்சாலை முடிவில் நமக்குள் மனிதம் சார்ந்த பல புரிதல்களை கடத்தும் வீரா என்றும் நம் நினைவில் இருந்து நீங்காத ஒரு நிழலழகிதான்!

நிழலழகிகளை பின்தொடர்வோம்…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.