கே.ஏ.பத்மஜா

நூல்: நெடுஞ்சாலை வாழ்க்கை | நூலாசிரியர்: கா.பாலமுருகன் | வெளியீடு: விகடன் பிரசுரம்
சிறுவயது முதல் பயணத்தில் ஜன்னல் வழியில் பார்க்கக்கூடிய அழகிய உலகத்தை நான் ரசித்ததே இல்லை. வாந்தி வரக்கூடும் என்பதால் வாகனத்தில் ஏறியதில் இருந்து இறங்கும் வரை தலையைக் கவிழ்த்தபடியே பயணிப்பேன். இதுவே பயணங்களை வெறுப்பதற்கு முக்கிய காரணமாகவும் அமைந்துவிட்டது.
இந்த ஆண்டில் இருந்து அதிகம் வாசிக்க வேண்டும் என்று தீர்மானம் எடுத்த எனக்கு, பிறந்தநாள் பரிசாக கிடைத்த புத்தகம், கா.பாலமுருகன் எழுதிய ‘நெடுஞ்சாலை வாழ்க்கை’. இந்தப் புத்தகத்தை படிக்க தொடங்கியபோது எனக்குள் ஓர் எதிர்பார்ப்பு, இது ஒரு நாவலாகவோ அல்லது யாராவது ஒருவரது வாழ்க்கைச் சம்பவமாக இருக்கும் என்று. முதல் சில பக்கங்களை கடக்கும்போது லாரி குறித்த டெக்னிக்கல் தகவல்களும் விளக்கங்களும் அதிகம் இருந்தன.
பாடி சேஸ், லிட்டருக்கு இத்தனை கி.மீ., என்ஜின் போன்ற வார்த்தைகளை பார்த்தபோது, இது ஏதோ ஆட்டோமொபைல் தொழில் சார்ந்த புத்தகம் போல; இது நம் ரசனைக்கு ஏற்ற புத்தகம் அல்ல என்று அலுத்துக் கொண்டேன். இதற்கு இன்னொரு தனிக் காரணமும் உண்டு. நான் வளர்ந்த வீட்டில் அண்ணனின் தொழில், பட்டாசு லாரி சம்பந்தப்பட்டது. புகுந்த வீட்டில் கணவர் தொழிலோ மணல் லாரி தொடர்பானது. எனவே, இந்த வார்த்தைகள் எல்லாம் புளித்துப் போனவை என் காதுகளுக்குள். இருந்தாலும் பக்கங்களைப் புரட்டினேன். நான்கு பக்கங்கள் தாண்டும்போது எழுத்து நடை முழுவதுமாக என்னை இழுத்துப் போவதை உணர முடிந்தது. குறிப்பாக, அந்த ”சேலம் – கொல்கத்தா” பயணம். ஆம், இந்தப் புத்தகத்தில் லாரியில் தான் இந்தியா முழுவதும் பயணம் பயணம். கொல்கத்தா, டெல்லி, நாக்பூர், காஷ்மீர் என எல்லா திசைகளிலும் லாரியில் டிரைவர் மற்றும் சரக்கு லோடு உடன் பயணிப்போம். இப்படி ஒவ்வொரு திசையிலும் பயணம், அதன் அனுபவம், டிரைவர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் ஒவ்வொரு அத்தியாமும்.
கிட்டத்தட்ட நானும் எல்லா பயணத்திலும் லாரி கேபின் உடன் பயணித்த அனுபவத்தை தந்தது நூலாசிரியர் (கா.பாலமுருகன்) எழுத்து நடை. நெடுஞ்சாலை இருட்டு, மரங்கள், வேகத்தடையில் ஏறி இறங்கும் குலுக்கல், வெயில், குளிர், கசகசப்பு, பயண அலுப்பு அத்தனையும் வாசிக்கும்போது நமக்கும் தொற்றிக்க்கொள்வது ஆச்சரியம். ஒவ்வொரு முறையும் அந்த லாரி டிரைவர்கள் ‘இந்த அநியாயத்தை எல்லாம் எழுதுங்க சார்’ என்று ஆசிரியரிடம் கேட்டுக்கொள்ளும்போது அது வெளி உலகக்கு தெரியாமல் நடக்கும் ஓர் அவலம் என்று தெரியும். இதை தெரிந்துகொள்ள முயற்சிக்கதாக நமது மெத்தனப் போக்குக்கு சாட்டையடி போல இருக்கும். இப்போது எனக்கு இந்தியாவின் அனேக நெடுஞ்சாலைகள் நெருக்கமானவை. ஆம், அவற்றை நான் என் மனக்கண்ணால் ரசித்துவிட்டேன். பயணித்துவிட்டேன்.
இந்தப் புத்தகத்தில் இதயத்தை வருடும் காதல் கதை எதிர்பார்த்த எனக்கு, மூளையை வருடும் பல நூறு அனுபவக் கதைகள் கிடைத்தது, தனிப்பட்ட முறையில் கூடுதல் சிறப்பு. இந்தப் புத்தகத்தை படித்த முடித்த பின்பு ஒருநாள் மாலையில் நான் சாலையில் நடந்துசெல்லும்போது, இடது ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆள் இல்லாத இரும்புக் குதிரையை பார்த்தும் மனதுக்குள் மிகவும் நெருக்கமானவரை பார்த்த உற்சாகம் ஏற்பட்டது. என்னையும் அறியாமல் அந்த லாரியைப் பார்த்து புன்னகைத்தேன். எனக்கு உன்னை நல்லா தெரியும் என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டே யாருக்கும் தெரியாமல் அந்த லாரியை என் கைகளால் வருடியபோது ஒருவித பரவசம்.
இந்தப் புத்தகத்தை வாசிப்பவர்களுக்கு பல அனுபவமும் சிறந்த புரிதலும் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பது உறுதி. இந்தப் புத்தகத்தை வாசிக்க முடியாதவர்களுக்கு, இந்தப் புத்தகம் சொல்லும் ஓர் எளிய சேதியை மட்டும் இங்கே பகிர்கிறேன். அது: “குறைவான வேகத்தில் சென்றால் கூட பிரேக் பிடித்தால் ஐந்து மீட்டராவது தாண்டித்தான் லாரி நிற்கும். இதை டூ வீலர் ஓட்டுபவர்கள் புரிந்துகொள்வதே இல்லை. எங்களுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலே டூ விலர்கள்தான்.” இப்போதெல்லாம் டூ வீலரில் செல்லும்போது சாலையில் கொஞ்சம் பெரிய வாகனங்கள் வரும்போது நான் முந்துவதே இல்லை. இனி நீங்களும்தான் என்று நம்புகிறேன்.
கே.ஏ.பத்மஜா, பத்தியாளர்.