அருண் நெடுஞ்செழியன்

“பூவுலகின் நண்பர்கள்” தோழர் நெடுஞ்செழியனின் நினைவு நாள் பதிவு
சி.நெடுஞ்செழியன் (18-09-1958 – 28-02-2006)
ஹைட்ரோகார்பான் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் மக்கள் திரள் போரட்டங்கள் தீவிரம் பெற்று வருகிற நிலையில், தமிழகத்தின் இயற்கை வளப் பாதுகாப்பிற்காவே வாழ்நாளில் பெரும்பகுதியை செலவிட்ட அற்பணிப்புமிக்க இந்த மாபெரும் மனிதனைப் பற்றி இன்றைய தலைமுறையினர் அறிந்துகொள்வது அவசியம்.
சுற்றுச்சூழல் என்பது குப்பை அள்ளுவது வாழிடங்களை சுத்தமாக சுகாதாரமாக வைத்துக் கொள்வது மரம் நடுவது என்பது மட்டுமல்ல, சூழலியல் என்பது அரசியல் பொருளாதாரத்தோடும் ஏகபோகத்தின் சுரண்டலோடும் கார்ப்பரேட் நலன்களோடு பிண்ணிப்பிணைந்தது என கால் நூற்றாண்டுக்கு முன்பாக அறிவித்து கோட்பாட்டு சமர் புரிந்தவர் தோழர் நெடுஞ்செழியன்.
இன்று சூழலியல் பிரச்சனைகளில் தலையீடு செய்கிறவர்கள்,பேசுபவர்கள் தனிநபர்களை முன்னிலைப்படுத்திக் கொள்கிற போக்கும் சட்டவதாக சட்டப்பூர்வ வழிமுறைகளில் சூழலியல் பிரச்சனைகளை அடைக்கிற போக்கும் தலைதூக்கியுள்ள நிலையில் தோழர் நெடுஞ்செழியனின் கூட்டுச் சிந்தனை கூட்டுச் செயல்பாட்டின் அடிப்படையிலான வேலை முறைகள் அக்கறைக்குரியவை.
நெடுஞ்செழியனும் அவருடைய தோழர்களும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பூவுலகின் நண்பர்கள் அமைப்பை நிறுவி இயங்கினார்கள். அதற்காக பல்வேறு கோட்பாடுகளை உருவாக்கிப் பணிபுரிந்தபோதும், எந்த இடத்திலும் தங்களையோ தங்கள் பெயரையோ படத்தையோ முன்னிறுத்தாமல் செயல்பட்ட அவர்கள் போட்டுத் தந்த பாதை முன்மாதிரி இல்லாதது.
தோழர் நெடுஞ்செழியனின் வரலாறும் பூவுலகின் நண்பர்களின் இயக்கத்தின் வரலாறும் பிரித்தறிய இயலாதவை.
பூவுலகின் நண்பர்கள் இயக்கமானது சூழலியல், மனிதஉரிமையில் ஆர்வமுள்ள, மூன்றாம் உலகப் பொருளாதார நிலைமை பற்றிசிந்திக்கக்கூடியவர்களாக இணைந்து 1985-ல் தொடங்கப்பட்டது. சூழலியல்பற்றிய செய்திகளை புத்தகங்கள், சிறு வெளியீடுகள் மூலம் மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வைஏற்படுத்தி வந்தது. இதற்காக ‘பூவுலகின் நண்பர்களே’ ஒரு வெளியீட்டகத்தையும் நடத்தியது. புதுச்சேரியிலிருந்து‘சூழல்’ என்ற மாத இதழும் கோவையிலிருந்து ‘பூவுலகு’ காலாண்டிதழும் வெளிவந்தன.
கோவை, நாமக்கல், கும்பகோணம், தூத்துக்குடி, சிதம்பரம், புதுச்சேரி ஆகிய ஊர்களில் ‘பூவுலகின்நண்பர்கள்’ இயக்கம் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி ஸ்டெர்லைட், கும்மிடிப்பூண்டி தாப்பர் டூபாண்ட்,பொள்ளாச்சி மாட்டிறைச்சி ஆலை, கொல்லிமலை நீர்மின்திட்டம் போன்ற சிக்கல்களை ஆராய்ந்து, அதுசூழலுக்கும் மக்களுக்கும் எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை விளக்கி புத்தகங்கள்வெளியிட்டிருக்கிறது. உள்ளூர் அமைப்புகளுடன் இணைந்து அதை மக்களிடம் கொண்டு சென்றது.
புதுச்சேரி பூவுலகின் நண்பர்கள் இயக்கம் நெடுஞ்செழியனின் காலத்திலிருந்தே செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்ட காலம் முதல் ஞெகிழிக்கு (Plastic) எதிராக விழிப்புணர்வையும், அதன் பயன்பாட்டை தடைசெய்ய வேண்டும் என்றும் போராடி வருகிறது.
சுற்றுச்சூழல் பிரச்சினைகள் சார்ந்து அறிவியல்பூர்வமான அணுகுமுறையை, பார்வையை முன்வைக்கும் புத்தகங்கள், கையேடுகளை பூவுலகின் நண்பர்கள் தொடர்ச்சியாக தமிழில் தந்து வந்ததது. ஒற்றை வைக்கோல்புரட்சி, மௌன வசந்தம் (சுருக்கமான பதிப்பு), சுற்றுச்சூழல்: ஓர் அறிமுகம், சாண்ட்ரா போஸ்டலின் மூன்றாம்உலகப் போர் தண்ணீருக்காக, வந்தனா சிவாவின் பசுமைப் புரட்சியின் வன்முறை போன்ற உலகப் புகழ்பெற்றசுற்றுச்சூழல் புத்தகங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட சுற்றுச்சூழல் புத்தகங்களை தமிழில் தந்திருக்கிறது.
பூவுலகின் நண்பன் தோழர் நெடுஞ்செழியன் அடிப்படையில் ஒரு மனிதஉரிமை, சமூகநீதி, சுற்றுச்சூழல் ஆர்வலர். இடதுசாரி தத்துவங்களின் அடிப்படையில் தன் அணுகுமுறைகளைஅமைத்துக்கொண்டவர். உலகமயம்-தாராளமயம்-தனியார்மயம் போன்றவற்றின் ஆயுதங்களான காப்புரிமை, அறிவுசார் சொத்துரிமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தவர். தமிழகத்தில் சுற்றுச்சூழல் பிரச்சினைகள்தொடர்பான சொல்லாடலை 30 ஆண்டுகளுக்கு முன்பாக குழுவாக முன்னெடுத்தவர்.
தோழரின் சிந்தனைகளை நினைவில் ஏந்தி,அவர் கனவை நினைவாக்கப் போராடுவோம்.அதுவே அவருக்கு நாம் செலுத்துகிற அஞ்சலி.
தமிழகத்தின் சுற்றுச் சூழல் முன்னோடியை நினைவு கூர்வோம்,,அவரின் சூழல் இலட்சியங்களை நிறை வேற்றுவோம்.
தோழர் நெடுஞ்செழியனின் காணொளி:
அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல், அணுசக்தி அரசியல் ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது.
மக்கள் வர்க்க ரீதியில் அணி திரண்டுவிடாமல் தடுப்பதற்காக துவங்கப்பட்ட NGO தான் இந்த பூ ந. இது ஒன்றும் போராளி அமைப்போ, மக்களுக்கான அமைப்போ அல்ல. மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை நிறுவனமயமாக்கி நீர்த்துபோக வைப்பது தான் இவர்களின் நோக்கம். இவர்களை
தியாகிகள் போல வர்ணிப்பது உண்மைக்கு மாறானது.
சுந்தரராஜனுக்கெல்லாம் என்ன வருமானம், எங்கிருந்து பணம் வருகிறது? எப்படி இந்த போராளி இன்னோவாவில் சுற்றுகிறார்? எல்லாம் ரகசியம். இது போன்ற NGO களை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி நிர்மூலமாக்க வேண்டும்.
LikeLike