
இரண்டு நாட்களாக கொஞ்சம் ஒதுங்கியிருந்து நிறைய எழுதினேன். ஒரு ஏழாயிரம் வார்த்தைகள் இருக்கும். தலைமுடி பற்றிய கட்டுரையொன்று எழுதினேன். ஈகா சலூனில் காத்திருக்கும் வணிகக் கழுகுகள் என்பது தலைப்பு. மாற்று விவசாயத்தில் கனி வளர்ப்பு பற்றி ஒருகட்டுரை. இரவு ராணியிடம் தஞ்சமடைந்த கதை என்பது தலைப்பு. இரண்டு பத்திரிகைகளுக்குக் கொடுத்திருக்கிறேன். விரைவில் வரலாம்.
இந்த அக்கப் போரில் ஒரு ஆங்கிளைச் சொல்லாமல் விட்டு விட்டேன். முன்பெல்லாம் ரிப்போர்ட்டர்ஸ் மத்தியில் ஏடியெம்கே பீட் என்றால் சிதறி விடுவோம். ஒருத்தர் பேச மாட்டார்கள். பொது வெளியில் மதிக்கவே மாட்டார்கள். ரகசியமாக உங்களுக்கே தெரியும் சார் என்பார்கள் பணிவாக. அதிமுக பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டுமானால் செத்தோம். கோட்டே வாங்க முடியாது. அவர்கள் சார்பாக சோ சாரிடம் கேட்டால், சொன்னதையெல்லாம் அப்படியே நீங்கள் எழுதுவது மாதிரி எழுதி விட்டு கடைசியாக ரெண்டு வரிகளைப் போட்டு என்கிறார் சோ என்று எழுதும் இந்தியாடுடே ஸ்டைலை நக்கலடிப்பார். கருத்துத் தர மறுத்தும் விடுவார்.
கலைஞரெல்லாம் இந்த விஷயத்தில் தங்கம். ரெண்டு வரிக்குக்கூட உரிமையாக போன் அடிக்கலாம். பத்திரிகைகள் மீது அவர் பாசம் காட்டும் மூடில் இருந்தால் லைனுக்கு வந்து விடுவார். கலைஞரையே லைனில் எடுக்க முடியும் என்றால், மற்றவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டியதில்லை. இந்த விஷயத்தில் அதிமுகவினர் நச்சுப் பிடித்தவர்கள். இப்போது பொங்கிப் பொங்கிப் பேசும் மைத்ரேயன், அம்மாவுக்கு நோட் போட்டிருக்கேங்க என்பார். தற்போது டீவியில் முகம் காட்டும் நயினார் நாகேந்திரன் போனை எடுத்து நான் நயினார் நாகேந்திரன் பேசறேன் பட் ராங் நம்பர் என மூஞ்சியில் அடித்த மாதிரி கட் பண்ணுவார்.
ஒரு அம்மா இந்த இடத்தில் இல்லாமல் போனதும் எவ்வளவு மாற்றங்கள்? ஒரு குரல் அடங்கியதும் பல்வேறு குரல்கள் பீறிட்டுக் கிளம்புகின்றன. டீவியில் பேசிப் பழக்கம் இல்லை என்பதால் நெளிகிறார்கள். அதிலும் இந்த கோகுல இந்திரா அக்காவெல்லாம் எல்லோரையும் பார்த்து பணிவாய் சிரித்து அந்தப் பக்கம் கடத்திக் கொண்டு போய் விடலாம் என விடாப்பிடியாக நம்புகிறது. வளர்மதி சரஸ்வதி வகையறா அக்காக்களுக்குப் பரவாயில்லை. அடி மடியில் கை வைக்கிற மாதிரி கேள்விகள் வந்து விழும் போது அசமஞ்சமாய்ச் சிரிக்கிறார்கள். கெடா வெட்டிலிருந்து புறப்பட்டு வந்த மீசைக்கார அண்ணன்கள், “தம்பி ஒங்க வீட்ல எளவு விழுந்து பெரியாத்தா செத்துப் போன சின்னாத்தா கையிலதான சாவியக் குடுப்பீங்க. என்ன நான் சொல்றது” என வெள்ளந்தியாக இது தப்பு என்பதே தெரியாமல் உளறிக் கொட்டுகிறார்கள். ஒட்டுமொத்தத்தில் பல முகங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன.
தப்போ சரியோ சிலர் சென்சிபிலாகவும் பேசுகிறார்கள். சாட்டிலைட் புரட்சியெல்லாம் எட்டிப் பார்க்காத குக்கிராமத்தில் உள்ளவர்களிடம் பெட்டி வந்தது போல அதிமுக முகாமிற்குள் இப்போதுதான் தொலைக்காட்சி வெளிச்சம் முழுமையாகப் பாய்கிறது. அதில் நல்லது கெட்டது எல்லாம் வெளியே வந்து விழுகின்றன. மட்டன் சாப்பிட்டு விட்டு மட்டையாகி விட்டேன். இந்த ஸ்லோகன் தான் இந்த எபிசோடிலேயே என்னை மிகவும் கவர்ந்தது. எங்கே இன்னொரு முறை சொல்லுங்கள். மட்டன் சாப்பிட்டு விட்டு மட்டையாகி விட்டேன். கூவத்தூர் குதூகலங்கள்.
சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்
, ஐந்து முதலைகளின் கதை
நாவல்களின் ஆசிரியர். சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.