தமிழகத்தில் அடுத்தடுத்து பெண் குழந்தைகள் மீது நிழத்தப்பட்ட மோசமான வன்கொடுமைகள் சமூகத்தின் பேசுபொருளாகியுள்ளன. தாம்பரம் ஹாசினி பாலியன் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். எண்ணூர் சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 3 வயது குழந்தை நகைகளுக்காக கொல்லப்பட்டு குப்பையில் தூக்கிவீசப்பட்டிருக்கிறார். கொடூரமாக கொல்லப்பட்டதற்கான தடயங்கள் அந்தச் சிறுமியின் உடல் முழுவதும் காணக் கிடைக்கின்றன. அரியலூரில் நந்தினி என்ற பதின் பருவ சிறுமியும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவங்கள் சமூக சீரழிவை எடுத்துக்காட்டுகின்றன என்கிறார்கள் கருத்தாளர்கள். சமூக ஊடகங்களில் வந்த சில கருத்துகள் இங்கே:
ஊடகவியலாளரும் கவிஞருமான நாச்சியாள் சுகந்தி, ‘தமிழகத்தில் தொடர்ந்து நடந்து வரும் பச்சிளம் குழந்தைகளின் பாலியல் வன்புணர்வு மரணம்-கொலை, யாருடைய மனசாட்சியையும் உலுக்குவதாக இல்லை’ என்கிறார்.

“அரசு இனி எல்லாவற்றுக்கும் வாய் மூடிதான் இருக்கும். பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீரைத் தவிர என்ன வழியுண்டு என்று யோசிக்க முடியத வேதனையில் இருப்பர்.
சட்டப்படி என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது ஒரு பக்கம் நடக்க வேண்டும். பெண் வழக்கறிஞர்கள் மட்டுமில்லாது ஆண் வழக்கறிஞர்கலூம் இம்மாதிரி சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதையும் குற்றவாளிகள் தப்பியோடாமல் இருக்கவும் நியாயமாக போராட வேண்டும். அதற்கு முன்பு, பாலியல் வன்முறைக்கு எதிரான ஒரு இயக்கத்தை கட்டியெழுப்ப வேண்டியது அவசியம்
ஊடகங்கள் இந்த சம்பங்கள் தொடர்ந்து நடப்பதன் காரணம், மனநிலை குறித்து திரும்பத் திரும்ப பேச வேண்டும். பள்ளியிலும் கல்லூரிகலும் இனிமேலாவது இதுகுறித்து ஓபனாகப் பேசுவது காலத்தின் கட்டாயம்
அம்மாக்கள் தங்கல் வீட்டில் இருக்கும் ஆண் குழந்தைக்கும் பெண் குழந்தைக்கும் இதுகுறித்து ிபுரிதலை உருவாக்குவது அவசியம். கலாச்சாராம், பண்பாடு, பேச கூச்சம் என்று சொல்லிக்கொண்டிருந்தால்
நாமும் மறைமுக காரணமாகிறோம்.
தயவுசெய்து அந்தக் குழந்தையின் படங்களை போடாதீர்”
எழுத்தாளர் இளங்கோ கிருஷ்ணன் சொல்லும் சில கருத்துகள் கீழே:

என் நண்பர் ஒருவர் மிகுந்த மன உளைச்சலுடன் பகிர்ந்துகொண்டது இது. அவரின் தந்தை நண்பரின் மூன்று வயதுக் குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றிருக்கிறராம். நண்பரின் மனைவி அதைப் பார்த்துவிட்டு புகார் சொல்லப்போகவே அவர் தனது தந்தையை அழைத்துக் கேட்டிருக்கிறார். அவர் கையைப் பிடித்துக்கொண்டு அழுதாராம். நண்பரால் தாங்க முடியவில்லை… அவர் தந்தையின் மீது மிகுந்த மதிப்புக்கொண்டவர் என்பதால் இந்த அதிர்ச்சியை அவரால் எதிர்கொள்ள இயலவில்லை. அவர் தந்தை ஒரு முன்னாள் தலைமையாசிரியர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. ரமேஷ்-பிரேம் ஒரு கட்டுரையில் ‘ தமிழ் சமூகம் தன் நனவிலியில் ஓயாது காமத்தைச் சுமந்து அலைகிறது’ என்று சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன. நண்பரின் தந்தை ஓர் உதாரணம் மட்டுமே… இப்படித்தான் பெரும்பாலான ஆண்கள் இருக்கிறார்கள் என்பதே கசப்பான உண்மை. கிட்டதட்ட சைல்டு அப்யூஸுக்கு ஆளாகாத பெண் குழந்தைகளே இங்கு இல்லை என்று தோன்றுகிறது. இல்லை இது வெறும் காமம் சார்ந்த பிரச்னை மட்டும் இல்லை என்றும் தோன்றுகிறது.
நாம் இன்னமும் நாகரிகமான குடிமைச் சமூகமாக மாறுவதற்கான முதிர்ச்சி நம்மிடம் இல்லை என்ற கருத்து எனக்கு அடிக்கடி தோன்றும். குழந்தைகள் மீதான வன்முறையைப் பார்க்கும்போது இந்தக் கருத்து வலுப்படவே செய்கிறது. போதுமான அளவு தனி மனிதனாகத் தன்னை உணராத, இன்னும் சொல்லப்போனால் தனி மனிதனுக்குத் தேவைப்படும் பொறுப்புணர்வுகள் பற்றிய போதமே இல்லாத ஒரு பொல்லையான, உள்ளீடற்ற ஜனநாயகத்தைத்தான் நாம் உருவாக்கி வைத்திருக்கிறோம்.
போதுமான அளவு தனிமனித பிரக்ஞை வளராத சமூகம் என்பதால்தான் மற்றமை மீதான ஒடுக்குதல் என்பது இயல்பாக வருகிறதோ என்றும் தோன்றுகிறது. அது ஜாதியோ, பாலினமோ, குழந்தையோ தன்னைவிட பலவீனமான ஓர் உடலை சுரண்டுவது, ஒடுக்குவது, அழிப்பது என்பது மற்றமை மீதான காழ்பிலிருந்தே உருவாகிறது. இந்த மற்றமை மீதான காழ்ப்பு என்பது தன்னிலை பற்றிய மதிப்பீடின்மை, மிகை மதிப்பீடு ஆகியவற்றில் இருந்து உருக்கொள்கிறது போலும்… சுய பிரக்ஞையுள்ள முதிர்ச்சியான தனிமனித இருப்பு என்பது, தன் சக மனித இருப்பைப் பொருட்படுத்துவது. பொருட்படுத்துவது என்றால் விட்டுக்கொடுப்பது என்று புரிந்துகொள்ள வேண்டியது இல்லை. குறைந்தபட்சம் அதுவும் நம் அளவு முக்கியமான இருப்பே என்கிற சகஜ மனநிலை… இது உருவாகாததே பல பிரச்னைகளுக்கும் காரணம் என்று நினைக்கிறேன். குறிப்பாக பாலியல் சார்ந்த விஷயங்களில் ஆண்களுக்கு உள்ள ஆதிக்க உணர்வும், உடமையுணர்வும் வியக்கத்தக்க வகையில் உள்ளன. மற்றமையின் இருப்பு என்ற ஒன்றே ஆணுக்குத் தோன்றுவது இல்லை. அது, தன் இருப்பால் ஆனது அல்லது அதன் எதிர்வினையால் உருவாவது என்கிற மனோபாவமே உள்ளது.
மூன்று வயதுக் குழந்தையிடம் பாலின்பம் தேடும் அளவிலா நம்மிடம் பாலியல் வறுமை உள்ளது என்று ஆயாசமாக உள்ளது. உண்மையில் பாலியல் தேவை அல்ல அது குறித்த ஹைப்புகளே நம் முக்கியமான பிரச்னையாக உள்ளன. பெண்ணுடல் குறித்து ஆணுக்கு உருவாகும் மிகை கற்பனை அவன் பால்யத்தில் கருக்கொள்கிறது. முதுமை வரையிலும் அவன் மீள முடியாததாய் இருக்கிறது. பாலியல் குறித்து வெளிப்படையாய் பேச முடியாத சூழல் ஒரு முக்கியமான பிரச்னை.
பாலியல் கல்விதான் இதற்குத் தீர்வு என்று முடித்துவிட முடியுமா தெரியவில்லை. பாலியல் கல்வி தேவைதான். ஆனால் அது மட்டுமே முழுமையான தீர்வாகாது. முதலில் சிவில் சமூகம் என்றால் என்னவென்ற பாடத்தை ஆழமாகக் கற்பிக்க வேண்டி உள்ளது. நீ என்பதற்கும் மற்றமை என்பதற்குமான அரசியல் உறவு, சமூக உறவு எதுவென போதிக்க வேண்டி உள்ளது. நம் தாத்தாக்கள், அப்பாக்களுக்கு இல்லாத சிக்கல் இது… குழந்தைகள் அது ஆணோ, பெண்ணோ அவற்றின் இருப்பு நம் இருப்பைச் சார்ந்ததே தவிரவும் நமக்கானது அல்ல… ஆரோக்கியமான குடிமைச் சமூகத்தில் மற்றமையின் இருப்பு என்பது தன்னிலைக்கு மேலும் அல்ல கீழும் அல்ல சமமுமல்ல… அவை இரண்டும் வெவ்வேறானவை… வேறு வேறு தனித்தன்மை உள்ள பூரணங்கள்அல்லது பூர்ணமின்மைகள்.
சமூக – அரசியல் செயல்பாட்டாளர் திவ்ய பாரதி பாதிக்கப்பட்ட குழந்தைகளின் படங்களை சமூக ஊடகங்களில் பகிர வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கிறார்…

“கொடூரமாக பாலியல் வன்முறைக்கு உள்ளாகும் பெண்களின் குழந்தைகளின் நிர்வாண/அரைநிர்வாணமான சிதைவுற்ற உடல்களை மீண்டும் மீண்டும் பகிராதீர்கள். அதையெல்லாம் பார்த்து குற்ற உணர்ச்சியோ, அரசியல் விழிப்போ அடையும் சொரணையுள்ள சமூகம் நமதல்ல”.
https://thetimestamil.com/2017/02/21/%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88/
மிக ஆழமான ஆய்வு. பிரச்சனையின் ஒரு பகுதி ஒரு கோணத்தில் நின்று ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆகவே ஒரு முழுமையைக் காணமுடியவில்லை. சமூகப்பிரச்சனை பற்றிய ஆய்வு அவ்விதந்தான் இருக்கும். பல கோணங்களில் இருந்து பார்த்து, அவை தொகுக்கப்படும்போதுதான் முழுமையை அடையலாம். இவ் ஆய்வின் முழுமை இன்மையை பிவருமாறு பட்டியலிடலாம்.
1) பாலியல் வன்முறைக்கான காரணத்தை ஆண்களின் மீது மட்டும் ஏற்றிப் பார்க்கின்றது.
பெண்களுக்கும் இதில் பங்குண்டு. ஆண்வழி சமூகம் உருவாகியிருக்கும் காதல், அழகு, பெண்மை. தாய்மை இத்தியாதி சமூக விழுமியங்களையும், இவ் விழுமியங்களின் அடிப்படையில் தோன்றிய சமூக நியமங்களையும் பாதுகாப்பதில் ஆணுக்குச் சளைக்காமல் செயற்படும் பெண்கள் பெருமளவில் காணப்படுவதை மறுக்க முடியுமா? பெண்ணின் அடையாளம் பெண்ணின் உடல் அழகுதான் என்பதை ஏற்றுக்கொண்டுள்ள பெண்கள் கொஞ்ச நஞ்சமா? பொருளாதாரத்தில் ஆண் சார்பற்ற நிலைக்கான நாட்டந்தான் அதிகம் வளர்ந்துள்ளதே தவிர சமூகஇருத்தலில் ஆண் சார்பற்ற நிலைக்கான தாகத்தின் வளர்ச்சி மிகவும் பலவீனமானதாகவே உள்ளது.
2) இரண்டாவது, இவ் ஆய்வு பாலியல் வன்முறையைத் தடுப்பதற்காக ஆண்களை எவ்விதம் திருத்துவது என்பது பற்றித்தான் முக்கியத்துவம் கொடுக்கிறது.
இதுவும் ஒரு கடமை; ஆனால், இது மட்டும் போதாது, காம உணர்ச்சிகளுக்கான வடிகால்களை தேடிக்கொள்வதில் நரமாமிச உண்ணி நிலைக்கு (Barbarians) உள்ளாகிவிட்ட ஆண்களையும் பெண்களையும் என்னசெய்வது என்பதுபற்றி எதுவுமே குறிப்பிடவில்லை. விலங்கு நிலைக்கு உள்ளாவதைத் தடுப்பது எவ்விதம் என்பது ஒரு வேலைத்திட்டம், விலங்குநிலைக்கு உள்ளானவர்களை தண்டிப்பது என்பது மற்றோர் வேலைத்திட்டம். இவை இரண்டும் ஒன்றிணைத்துச் செல்லப்படவேண்டும். ஒன்றை வலியுறுத்தி மற்றொண்றைப் புறக்கணிக்க முடியாது.
3) மூன்றாவது பாலியல் வன்முறையைத் தடுப்பதில் பெரும்பான்மையினர் விடும் தவறு இக்கட்டுரையிலும் நடந்துள்ளது.
இச்சமூகம் காம உணர்ச்சிகளுக்கான முறையான வடிகால்கால்கள் அற்ற சமூகம் என்ற உண்மை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. முறையான வடிகால்கள் அடைக்கப்பட்டு வருகின்றன, முறையற்ற வடிகால்கள் மிகத்துரிதமாகவும் பரவாலாகவும் ஆழமாகவும் திறக்கப்பட்டு வருகின்றன. இது ஒரு சமூகக் கட்டுமானம் சார்ந்த பிரச்சனையாகும், வெறுமனே தனி மனித உணர்ச்சிகள் சார்ந்த ஒரு பிரச்சனையல்ல. காம உணர்ச்சிகளுக்கான முறையான வாய்க்கால்கள் உள்ள சமூகக் கட்டுமானம் உருவாகும்வரை பாலியல் வன்முறையை ஒழிக்கவே முடியாது. இதன் அர்த்தம் பாலியல் வன்முறைகளுக்கு எதிரான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கக் கூடாதென்பதல்ல; இவை இப்பிரச்சனைக்கான நிரந்தரத் தீர்வாக அமையாது என்ற புரிதலுடன் தீவிர நடவடிக்கைகள் அவசியம்,
LikeLike