தமிழக நலன்களுக்காகவா ஜெயிலுக்கு சென்றீர்கள் சசிகலா..?

திருமதி.சசிகலா நடராஜனுக்கு வணக்கம்…

உங்கள் உடன்பிறவா சகோதரி ஜெயலலிதா, முதன் முதலாக ஆட்சிக்கு வந்தபோது எனக்கு ஐந்து வயது. அந்த வயதிலேயே அரசியலா ? என்று ஆச்சர்யப்பட வேண்டாம். ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆரையும், அம்பேத்கரையும் ஒரே இடத்தில் வைத்து வழிபட்ட, மிக ஒடுக்கப்பட்ட சமூகத்தின், கழக வாரிசு நான். (அதிமுகவின் சிறந்த அடிமைகள், அதுவும் பரம்பரை அடிமைகள் எங்கள் சாதியினர்தான். அது தெரியுமா உங்களுக்கு ? )

அந்த ஐந்து வருட ஆட்சி முடிவுக்கு வந்த காலத்தில், எனக்கு அரசியல் புரியவில்லை என்றாலும், “உங்க தோழி ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணத்தின்போது எடுக்கப்பட்ட படங்கள் ஏற்படுத்தி இருந்த தாக்கங்களைப் புரிந்து கொள்ள முடிந்தது.

உடல் முழுவதும் வைரமும், புடவைகளில் கூடத் தங்கத்தைப் பதித்து மன்னார்குடி உறவுகள் சூழ், நீங்கள் வலம் வந்தபோது, அன்றாடங்காய்ச்சிகளான நாங்கள் பேச்சற்று, வாய் மூடி மவுனித்திருந்தோம்.

அந்தத் ஆடம்பரத்தை ஜீரணிக்க முடியாத எங்களுக்கு, “ஒரு முதலமைச்சரின் இல்லத் திருமணம் எப்படி நடக்க வேண்டுமோ அப்படிதானே நடந்தது” என்ற உங்கள் சகோதரி ஜெயலலிதாவின் பேச்சு, ஈர வயிற்றில் நெருப்பள்ளி கொட்டியது.

அப்போதே எங்கள் வீட்டு மூத்தது ஒன்று இப்படிச் சொல்லியது. “அவ அந்தச் சசிகலா குடும்பதுக்குதான் முதலமைச்சர் போல. நமக்கில்ல’ என்று.

அந்த வயிற்றெரிச்சல்தான் ஜெயலலிதாவை பர்கூரில் படுதோல்வி அடைய வைத்தது. படுதோல்வி என்றால் கூடப் பரவாயில்லை. பாதம் தொட்டு பூஜித்த ஜெயலலிதா மீது வாரியலையும், செருப்பையும் எரிய வைத்தது மக்களை குறிப்பாக எளிய மக்களை.

sasi3

ஜெயலலிதாவிற்கும் சுதாகரனுக்கும் எங்கிருந்து உறவு தொடங்குகிறது, தொடங்கியது திருமதி.சசிகலா ? உங்கள் குடும்பம் போயசிற்குள் காலடி வைத்த பின்தானே ? இந்தத் திருமணத்திற்கும், அதனுடைய கண் கூச வைக்கும் “அடித்துப் பிடுங்கி” உருவாக்கப்பட்ட ஆடம்பத்திற்கும் தார்மீக பங்கு உங்களுடயதுதானே ? அதற்கான தார்மீக மன்னிப்பையாவது இப்போது கோருவீர்களா ? இல்லை “ஜெயலலிதாவின் தளபதியான என் வீட்டுத் திருமணம் அப்படிதான் நடக்கும்” என்று பதிலளிப்பீர்களா ?

“மூலதனம்” எழுதி கொண்டிருந்த காலங்களில் குழந்தை பாலின்றி இறந்தது . அதை அடக்கம் செய்யச் சவபெட்டி கூட வாங்க வக்கற்று போன மார்க்சை உங்களுக்குத் தெரியுமா ? இதை ஏன் உங்களிடம் கேட்கிறேன் என்று தெரியவில்லை. சிவப்புதுண்டு தா.பாண்டியனே உங்களிடம் கைகூப்பி நிற்கும்போது நீங்கள் ஏன் இதை எல்லாம் அலட்டிக்கொள்ளப் போகிறீர்கள் ?

இருக்கட்டும்…

டான்சி இடத்தை அபகரித்தது, கொடைக்கானல் போன்ற இயற்கை எழிலை பாதுகாக்க வேண்டிய இடத்தில் அனுமதியின்றி ஏழு மாடி கட்டுவதற்குப் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு அனுமதி கொடுத்தது, வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தை அடித்து நொறுக்கியது, இப்போது உங்களுக்கு “கூச்சமின்றி ஆதரவளிக்கும்” சுப்பிரமணிய சாமியின் கட்சியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசியது, சென்னையின் பாரம்பரியமான “அமிர்தாஞ்சன் நிறுவன” இல்லத்திற்குள் புகுந்து மிரட்டியது, பாலு ஜ்வெல்லர்ஸ் உரிமையாளர் தற்கொலை, என்று உங்களின் மீது ஆதாரத்துடனும், ஆதரமில்லாமலும் ஆயிரம் குற்றச்சாட்டுக்கள். இவை எல்லாம் பத்தோடு பதினொன்றாக நின்று விட்டது. டான்சியைத் தவிர. அதிலும் விடுதலை கிடைத்து விட்டது.

“பையனூர் பையனூர்” என்று ஒரு பங்களா. கடல் கடந்த தமிழர்களாலும் இசை ஞானி என்று போற்றப்படும் இளையராஜாவின் குடும்பத்தைச் சேர்ந்த அந்தப் பங்களாவை அடித்துப் பிடுங்கிக் கொண்டீர்கள்.

“ஒவ்வொரு மேடையிலும் நாக்கு வரள பாட்டுப் பாடி, ஒவ்வொரு பைசாவாகச் சம்பாதித்துக் கட்டிய வீட்டை, ஜெயலலிதாவை காட்டி அப்பட்டமாக என்னிடம் இருந்து பிடுங்கி கொண்டார்கள்” என்று, அந்த வழக்கிற்காக இன்றும் நீதிமன்றத்திற்கு நடையாய் நடந்து கொண்டிருக்கும் கங்கை அமரன் கண்ணீருடன் சொன்ன சொற்கள் இவை.

இளையராஜா எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவர் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர் என்கிற அந்த அலட்சியம்தானே, திமிர்தானே, அந்தப் பையனூர் பங்களாவை மிக எளிதாக, அந்தக் குடும்பத்திடம் இருந்து அபகரிக்க வைத்தது. அந்த இடத்தை மட்டுமல்ல திருமதி.சசிகலா, அதைச் சுற்றியுள்ள பஞ்சமி நிலங்களையும் நீங்கள் வளைத்து போட்டிருக்கிறீர்கள் என்பதைப் பதினைந்து வருடங்களாகக் காட்டு கத்துக் கொண்டிருக்கிறார்கள் பல்வேறு இயக்கத்தினர்கள்.

பஞ்சமி நிலமென்பது என்னவென்று தெரியுமா ? இரண்டாயிரம் வருடத்திற்குப் பின்னும், அடிமையாக நிற்கும் மிகப்பெரும் சமூகத்திற்குச் சொந்தமான இடம் திருமதி சசிகலா அது. அந்த நிலத்தைதான் நீங்கள் கொள்ளை அடித்து இருக்கிறீர்கள். ஊரை அடித்து உலைக்குள் போட்டுக்கொண்டிருக்கும் உங்களுக்கா இதெல்லாம் கேட்டுவிடப் போகிறது ?

போய்த் தொலைகிறது. கங்கை அமரன் என்கிற தனி மனிதனின் சொத்துகளுக்கெல்லாம் இவ்வளவு வருத்தப்பட வேண்டியதில்லை.

அந்த “மிடாஸ்”….

தமிழ்நாட்டுப் பெண்களைத் தாலியறுக்க வைக்கும் பெரும் நிறுவனம். குறிப்பாகக் கணவனை மட்டுமே குடும்பத்தின் அச்சாக நம்பி இருக்கும், எளிமையான பெண்களின் தாலிகளை மட்டுமே அறுக்கும் பெரும் நிறுவனம். இதில் உங்களுடைய பங்கு மிக வெளிப்படையானது திருமதி.சசிகலா.

வருடத்திற்கு இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு டாஸ்மாக்கிற்குச் சரக்கு விநியோகம் செய்வதாக ஆதரங்களுடன் செய்திகள் வெளிவருகின்றன. கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு என்பது போல், டாஸ்மாக் வாசலில் நிற்கும் கூட்டங்களே உங்களுக்கான வருமானத்தை வெளிப்படுத்தி விடுகிறது திருமதி சசிகலா. இதில் ஆதாரங்கள் எல்லாம் தேவை இல்லை.

நீங்கள் தோழியாக இருந்த ஒரே காரணத்துக்காக மட்டுமே, பலரின் உயிரை பலிகொடுத்த பின்னும், உங்களின் “மிடாசை” நடத்துவதற்காக, மது விலக்கை அமல்படுத்தவே முயலவில்லை ஜெயலலிதா. தற்போது நீங்களே, தமிழ்நாட்டை ஆள விருப்பப்படும் இந்தத் தருணத்தில், எங்களின் பெண்கள் எதற்காகக் கவலைப்பட வேண்டும் ? அவர்களின் கணவர்களுக்காகவா இல்லை அறுபட இருக்கும் தாலிக்காகவா ?

கண்ணில் படுகின்ற நிலங்களை எல்லாம் அபகரித்தல், அடுத்தவர் சொத்துக்களைச் சுருட்டுவது , அதை எதிர்த்து வழக்குகள்,, என்று பணத்தை மட்டுமே மையமாக வைத்து சுழல்வதால்தானே “மன்னார்குடி மாஃபியா” என்று அழைக்கிறார்கள் உங்களை ? ஆனால், இந்த வழக்குகள், தண்டனைகளில் எல்லாம் நீங்கள் ஒருபோதும் திருந்தி விட மாட்டீர்கள் என்பதற்கான சமீபத்தைய உதாரணம்தான் “ஜாஸ் சினிமாஸ்”

ஒரு சாதாரண மனிதன் கூட இந்த “ஜாஸ் சினிமாஸ்” அபகரிப்பை பற்றி அதிர்ச்சியுடன் பேசிக்கொண்டானே… அப்போதாவது நீங்கள் அருவருப்படைந்தீர்களா உங்களில் பண வெறியை பற்றி ? இல்லையே… பதிலாக அந்த ஃபீனிக்ஸ் மாலின் உரிமையாளர்களை விட்டே விளக்கமளிக்க வைத்தீர்கள்.

நீங்கள் யார் என்று இப்போதாவது உங்களுக்குப் புரிகிறதா திருமதி சசிகலா ? தமிழ்நாட்டு மக்களின் பார்வையில் நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்பதாவது உங்களுக்குப் புரிகிறதா ?

“சசிகலா” மீதான தமிழ்நாட்டு மக்களின் வெறுப்பு என்பது இன்று உருவானதல்ல. இருபது, முப்பது வருட தமிழர் வாழ்வியலின் ஊடாக வேர்விட்டு வளர்ந்திருப்பது இந்த வெறுப்பு. உங்களின் அராஜகங்களும், அதிகார வெறியும், இந்த வெறுப்பின் வேர்களை ஆழ பதிய வைத்திருக்கின்றன மக்களிடம். இந்த வெறுப்பினை, ஜெயலலிதாவின் அப்பல்லோ தினங்களில் அதிகபடுத்தி இருக்கிறீர்கள் திருமதி.சசிகலா.

மக்களுக்கானவர் ஜெயலலிதா என்ற எளியவர்களின் எண்ணத்தைச் சுக்குநூறாக உடைத்து, அவரின் உடலை சுற்றி நின்ற மன்னார்குடி வகையறாக்களின் மூலம், ஜெயலலிதா என்றுமே மன்னார்குடி குடும்பதிற்கானவர் மட்டுமே என்று அறுதியிட்டு சொன்னதன் மூலமாகவும் தமிழ்நாட்டு மக்களின் அசூயைக்கும் ஆளாகி இருக்கிறீர்கள் நீங்கள்.

இதை எல்லாம் கோர்வையாகச் சொல்லத் தெரியாமல்தான், இந்த வெறுப்பை political correctness என்கிற அரசியல் அறத்தோடு எழுதத் தெரியாமல்தான் எளிய மக்கள் தங்களின் கோபங்களை “வேலைக்காரிதான நீ ” என்று வெடித்துத் தீர்த்து கொள்கிறார்கள்.

இத்தனை வெறுப்பைச் சம்பாதித்த பிறகும் கூட, ஆளுனரை பார்க்கச் செல்லும்போது தினகரனை அழைத்துச் சென்றீர்கள் அல்லவா ? அங்குதான் நீங்கள் யார் என்பதை மறுபடி உறுதி படுத்தினீர்கள். தமிழக மக்களைத் துச்சமாக நினைக்கும் உங்களின் எண்ணத்தின் வெளிப்பாடு அது. அதை அப்படியாக மட்டுமே எங்களால் எடுத்துக்கொள்ள முடியும்.

இத்தனை வெறுப்பிற்குப் பின்னும் “நான்தான் முதலமைச்சராகுவேன்” என்று நீங்கள் முழக்கமிடுவதன் பின்னணிக்கும் நாங்கள்தான் காரணம் என்பதும் எங்களுக்குத் தெரிகிறது.

“ஐந்தாயிரம் வாங்கிக்கொண்டு வாக்களித்தவர்களுக்கு முன்னால் பத்தாயிரத்தை வீசி எறிந்தால், சசிகலா இல்லை… தினகரன் வந்து நின்றாலும் வாக்களிப்பார்கள்” என்ற எண்ணத்தின், இளக்காரத்தின் வெளிப்பாடுதான் உங்களின் முழக்கத்திற்குப் பின்னணி என்பதையும் எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது..

வெறும் ஒன்றரை கோடி அதிமுகத் தொண்டர்களால் மட்டும் ஆனதல்ல தமிழ்நாடு. ஆறு கோடி மக்கள், தங்கள் உயிரை விட்டு உருவாக்கியது இந்த நாடு.அத்தனை நேரங்களிலும், தமிழக மக்கள் பணத்திற்கு அடிமையானவர்களாக இருந்து விட மாட்டார்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். பர்கூரில் ஜெயலலிதா அடைந்த படுதோல்வி அதற்குச் சிறந்த உதாரணம்.

நீங்கள் கட்சி பொறுப்பில் மட்டுமே இருந்து கொள்வதுதான் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கும். அதிமுகவை உயிர் பிழைக்க வைக்கும் என்பதையாவது புரிந்து கொள்ளுங்கள் சசிகலா.

ஆதங்கத்துடன்….

அம்பேத்காருடன், எம்ஜிஆரை வைத்து வழிபட்ட, அதிமுகவிற்கு அடிமையாக எழுதிக் கொடுக்கப்பட்ட ஒரு குடும்பத்தின் வாரிசு.

கடைசியாக… உறுத்தி கொண்டேயிருக்கும் சந்தேகம் ஒன்று….

நேற்றைய கூவாத்தூர் கூட்டத்தில் “சென்னை பெங்களுர் ஜெயில்களைப் பார்த்தவர்கள் நானும் ஜெயலலிதாவும்” என்று கூறினீர்கள். நேரலையின் பார்த்துகொண்டிருந்தேன். எனக்கும் என்னைபோன்ற அதிமுக தொண்டர்களுக்கும் ஒரே ஒரு சந்தேகம்தான். “சுதந்திர போராட்டத்திற்காகவோ அல்லது அதிமுக போராட்டத்தின் போதோ அல்லது தமிழக நலனுக்கான கோரிக்கைகளை வலியிருத்திய மறியலின்போதோ” கைது செய்யப்பட்டா ஜெயிலுக்குச் சென்றீர்கள் ???

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.