”ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம்”

தமிழக ஆளுநர் ஜனநாயக சீர்குலைவு நடவடிக்கையில் ஈடுபடவேண்டாம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடந்த சட்டப்பேரவை தேர்தலில் , அ.இ.அ.தி.மு.க வெற்றி பெற்று , ஜெ.ஜெயலலிதா அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது.இந்நிலையில், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்ட செப்டம்பர் 22 முதல் ,அ.இ.அ.தி.மு.க வில் மௌனமாக நடந்துவந்த அதிகாரப்போட்டி தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

ஆளும் கட்சியின் சட்டமன்றக் குழுத்தலைவர் யார் என்பதனை தீர்மானிக்க வேண்டியது அக்கட்சியின் பொறுப்பாகும்.டிசம்பர் 5 ஆம் தேதி திரு ஓ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில்,பிப்ரவரி 5 ஆம் தேதி திருமதி வி.கே.சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தற்போது காபந்து அரசின் முதல்வராக உள்ள ஓ.பன்னீர் செல்வம், தனக்கு பெரும்பான்மை எம்.எல்.ஏ க்கள் ஆதரவு இருப்பதாகவும், சட்டப்பேரவையில் தன்னால் அதனை நிரூபிக்க முடியும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தான் சட்ட மன்ற கட்சித்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும், தனக்கு பெரும்பான்மை இருப்பதாகவும் திருமதி சசிகலா உறுதிபடக் கூறுகின்றார். மிக காலதாமதாமாக சென்னை வந்த ஆளுநரை ,இருவரும் சந்தித்துள்ளனர். ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது உள்நோக்க முடையது.தமிழகத்தில் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை. விவசாயிகள் செத்துமடிந்து கொண்டிருக்கின்றனர்.ஏராளமான பிரச்சனைகள் உள்ளன.அரசு நிர்வாகம் முற்றிலும் செயல் இழந்துள்ளது.

இந்நிலையில் அ.இ.அ.தி.மு.க வில் ஏற்பட்டுள்ள அதிகாரப்போட்டியை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள பா.ஜ.க முயல்வதும் ,அதற்கு ஆளுநர் உடந்தையாக இருப்பதும் , அப்பட்டமான ஜனநாயக விரோத செயலாகும்.

உடனடியாக சட்டப் பேரவை கூட்டத்தை நடத்தி, யாருக்கு பெரும்பான்மை பலம் உள்ளதோ அவர்களை ஆட்சி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது ஆளுநரின் கடமையாகும்.அத்தகைய கடமையை நிறைவேற்றாமல் காலம் கடத்துவது, ஜனநாயக சீரழிவுக்கு வழிவகுக்கும்.ஆளுநரின் ஜனநாயக விரோத செயல் கண்டனத்திற்குரியது” என தெரிவித்துள்ளார்.