’எளிதாக விலைபோகும் பன்னீர், பேரம்பேசி விலைபோகும் சசி’

பா.ச.க., காங்கிரசு, இந்திய ஏகாதிபத்தியம் ஆகியவற்றிடம் ஏற்கெனவே விலைபோனவர் கருணாநிதி என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர், பெ. மணியரசன் கூறியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

முன்னாள் முதலமைச்சர் செல்வி செயலலிதா சாவில் மர்மம் இருக்கிறது என்று அவர் கட்சிக்காரர்களும் பேசுகிறார்கள்; தமிழ்நாட்டில் அது ஒரு பொதுக் குற்றச்சாட்டாகவும் பேசப்படுகிறது. அடுத்து, அவருடைய சாவிற்குப் பிறகு கட்சித் தலைமை – ஆட்சித் தலைமை ஆகியவற்றைக் கைப்பற்ற நடக்கும் உட்கட்சிப் போட்டி, மிகக் கொடூரமாகவும் கீழ்த்தரமாகவும் நடந்து கொண்டுள்ளது. இந்த இரு அணிகளில் ஒன்றிற்குத் தலைமை தாங்கும் சசிகலாவும், இன்னொன்றிற்குத் தலைமை தாங்கும் ஓ. பன்னீர்ச்செல்வமும் மேற்கண்ட கொடூரங்களுக்கும் கேவலங்களுக்கும் உடனடிக் காரணங்களாகத் தெரியலாம். ஆனால், உள்ளதை உள்ளபடி பார்த்தால் – இவற்றிற்கெல்லாம் மூல காரணம் செயலலிதா தான்! செயலலிதாவின் அகவாழ்க்கை – அரசியல் வாழ்க்கை இரண்டுமே மர்மமானவை! அவர் வாழ்ந்த போயஸ் தோட்ட வேதா இல்லம், ஒரு மாளிகை! ஆனால், அது ஒரு மர்மக் குகையாகவே செயல்பட்டது. தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.க.வின் “நிரந்தரப்” பொதுச் செயலாளராக இருந்த செயலலிதா மக்கள் செல்வாக்குமிக்கத் தலைவராகவும் முதலமைச்சராகவும் இருந்தார். அவர் மறைவுக்குப் பின் இவ்விரு பதவிகளுக்கும் போட்டி இடுபவர்கள் யார்? சசிகலாவும், ஓ. பன்னீர்ச்செல்வமும்! சசிகலா அ.இ.அ.தி.மு.க.வில் எந்தப் பொறுப்பில் இருந்தார்? அக்கட்சியின் வெளியே தெரிந்த பொறுப்பு எதிலும், செயல்பாடுகள் எதிலும் அவர் இல்லை. ஆனால் அவரும் அவர் குடும்பங்களின் உறுப்பினர்களும் பரிந்துரைத்தவர்கள்தான் – அதிக அளவில் செயலலிதாவால் ஏற்கப்பட்டு, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக – அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

அ.இ.அ.தி.மு.க.வில் தலைமைச் செயற்குழு, ஆட்சி மன்றக்குழு, அவைத்தலைவர், பொருளாளர் போன்ற அமைப்புப் பொறுப்பாளர்கள் செயலலிதா மற்றும் சசிகலாவின் எடுபிடிகளாகவும், அவர்களின் காலில் விழுந்து கும்பிடும் அண்டிப் பிழைப்போராகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, செயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவிடம் செயலலிதாவின் அனைத்துச் சொத்துகளும், அ.இ.அ.தி.மு.க.வின் அனைத்து நிதி மற்றும் சொத்துகளும் இருக்கின்றன. ஆகவே, செயலலிதாவிடம் அண்டி வாழ்ந்த அதே அற்பர்கள் தங்களின் ”அரசியல்” வாழ்வின் தொடர்ச்சியாக இப்போது, சசிகலாவின் காலில் விழுந்து கும்பிட்டு இலாபமடைகிறார்கள். இதே ஓ. பன்னீர்ச்செல்வமும் சசிகலா காலில் விழுந்து கும்பிட்டு, பொதுச் செயலாளர் பொறுப்பேற்க பிரார்த்தனை செய்தவர்தான்! ஒருவேளை அன்று அவர் சசிகலாவின் காலில் விழுந்தது, ஒரு நடிப்பே தவிர அது உண்மையாக அல்ல என்றால், அந்த நடிப்பு காலில் விழுந்ததைவிடக் குற்றச் செயலாகும்! அ.இ.அ.தி.மு.க.வின் அவைத்தலைவர் மதுசூதனன் இப்போது அணிமாறி, ஓ.பி.எஸ். பக்கம் நிற்கிறார். இவர் சின்னம்மாவை பொதுச்செயலாளர், முதலமைச்சர் பொறுப்புகள் ஏற்கக் கெஞ்சி, அவர் காலில் விழுந்த காட்சி தொலைக்காட்சிகளில் ஓடிக் கொண்டுள்ளது. செயலலிதா, தமிழ்நாட்டிற்கு விட்டுச் சென்றுள்ள தலைவர்களைப் பாருங்கள்! சசிகலா, ஓ. பன்னீர்ச்செல்வம், மதுசூதனன் போன்றவர்கள்தான்!

அ.இ.அ.தி.மு.க.வில் எவரும் ஒன்றிய அளவில்கூட தலைவராக உருவாகிவிடக் கூடாது என்று கவனமாக கட்டுப்படுத்தி வைத்தவர், செயலலிதா. அவர் கட்சியில் அவருக்கு அடுத்தநிலைத் தலைவர் ஒருவர் உருவாக வாய்ப்பே இல்லை! நேரு இறந்த பிறகு சாஸ்திரி தலைமை அமைச்சர் ஆனார். சாஸ்திரி இறந்த பிறகு இந்திராவுக்கும் மொரார்ஜிக்கும் இடையேதான் போட்டி! நீண்ட அரசியல் அனுபவமும் கற்றறிந்த தகுதியும் உள்ளவர்கள் அவ்விருவரும்! சசிகலா, ஓ.பி.எஸ்., மதுசூதனன் போன்றவர்கள் அல்லர் அவர்கள். காரணம், அவர்களுக்குத் தலைமை தாங்கியவர் பண்டித நேரு, காமராசர், சாஸ்திரி போன்றவர்கள்! முதலமைச்சராக இருக்கும்போதே அண்ணா இறந்தார். அவருக்குப்பின் ஆட்சித் தலைமைக்கும் கழகத் தலைமைக்குமான போட்டி கருணாநிதி – நெடுஞ்செழியன் இடையே ஏற்பட்டது. இருவரும் கழகத்தைக் கட்டி எழுப்பிடப் பாடுபட்டவர்கள். மக்களுக்காகச் சிறை சென்றவர்கள். இருவரும் கற்றறிந்த தகுதி உள்ளவர்கள்! சசிகலா – ஓ.பி.எஸ். பாணி அரசியல் வாரிசுப் போட்டி எப்பொழுது தமிழ்நாட்டில் தலைகாட்டியது?

எம்.ஜி.ஆர். மறைந்த போது – எம்.ஜி.ஆர். மனைவி சானகி – எம்.ஜி.ஆர்ரோடு கதாநாயகியாக நடித்தவர் செயலலிதா என்ற உரிமையில் அப்போட்டி முன் வைக்கப்பட்டது. அதற்கும் ஒரு முன்னோடி உண்டு! கருணாநிதி தமிழ்நாட்டுத் தேர்தல் அரசியலில் குடும்ப வாரிசுரிமையைத் தொடக்கி வைத்தார். தி.மு.க.வில் திரைத்துறையிலும் அரசியலிலும் எம்.ஜி.ஆருக்குப் போட்டியாக – தம் மகன் மு.க. முத்துவை நுழைத்தார். 1970களின் தொடக்கத்தில் ஆட்சியில் இருந்தபோது, தன் மகன் மு.க. முத்துவ – தனக்குப் பிறகான தலைவராக உருவாக்கிட, கட்சி அமைப்பையும் அரசு எந்திரத்தையும் பயன்படுத்தினார். பிறகு தம் மகன் மு.க. ஸ்டாலினை நிலை நிறுத்தினார். கருணாநிதியினால் தி.மு.க.வில் தொடக்கி வைக்கப்பட்ட குடும்ப அரசியல், எம்.ஜி.ஆருக்குப் பின் செயலலிதா – செயலலிதாவுக்குப் பின் சசிகலா, தீபா என்று வளர்ந்து கொண்டுள்ளது. அ.இ.அ.தி.மு.க.வுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் தலைமை தாங்க தீபாவுக்கு என்ன தகுதி இருக்கிறது? அன்றாடம் தீபாவைச் சந்தித்துக் கும்பிட்டு தலைமை தாங்க வருமாறு அழைக்கும் தமிழர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்டால், அவர்கள் என்ன சொல்வார்கள்? “தகுதி இருக்கிறதா இல்லையா என்பது அடுத்த செய்தி. தீபாவுக்கு உரிமை இருக்கிறது. செயலலிதாவின் அசல் இரத்தத்துடன் தொடர்புடையது தீபா இரத்தம் – செயலலிதா குடும்பத்தைச் சேர்ந்த பெண்” என்பார்கள்! “அக்காவோடு முப்பதாண்டுகள் வாழ்ந்தேன். அவரைக் கண்போல் காத்தேன்” என்பதைச் சொல்லி, கழகத்திற்கும் தமிழ்நாடு அரசுக்கும் தலைமை தாங்கும் உரிமையை சசிகலா கோரும்போது, அப்பதவிகளை செயலலிதாவின் உண்மையான இரத்தத்தின் இரத்தத்திற்குக் கொடுக்கக் கூடாதா?” என்பது அவர்களின் வாதம்! தமிழ்நாட்டின் முதற்பெரும்கட்சியின் அரசியலில் தலைமை தாங்க சசிகலா, ஓ. பன்னீர்ச்செல்வம், தீபா ஆகியோர் முன்னிறுத்தப்படுவது சனநாயகத்தின் வீழ்ச்சி இல்லையா? தமிழர் நாகரிகத்திற்கேற்பட்ட இழிவில்லையா? இதை அருவருக்காமல் – இவர்களில் ஒருவரை ஆதரிப்பது கடைந்தெடுத்த தன்னலமில்லையா?

ஓ.பி.எஸ். பின்னால் பா.ச.க. இருக்கிறது; இந்துத்துவா இருக்கிறது; எனவே சசிகலாவை ஆதரிக்கிறோம் என்று சொல்பவர்களும், சசிகலாவின் பின்னால் ஏற்கெனவே அடையாளம் காணப்பட்ட அவரின் உறவினர்கள் என்ற குற்றக்கும்பல் இருக்கிறது; எனவே ஓ.பி.எசை ஆதரிக்கிறோம் என்று சொல்பவர்களும் தன்னலம் சார்ந்த சந்தர்ப்பவாதிகளாக இருப்பார்கள் – அல்லது தன்னம்பிக்கை அற்றவர்களாக இருப்பார்கள். சனநாயக நெறிகள், தமிழர் தன்மானம், தமிழர் அறம் ஆகியவற்றைத் தன்னால் முடிந்த அளவு சீரழித்துவிட்டார் செயலலிதா! அந்தச் சீரழிவின் இன்றையச் சின்னங்கள்தான் ஓ.பி.எசும் சசிகலாவும்! பா.ச.க.விடம் எளிதாக விலைபோகக் கூடியவர் ஓ.பி.எஸ்; கறாராகப் பேரம் பேசி விலைபோகக்கூடியவர் சசிகலா! பா.ச.க., காங்கிரசு, இந்திய ஏகாதிபத்தியம் ஆகியவற்றிடம் ஏற்கெனவே விலைபோனவர் கருணாநிதி! இவர்களிடையே ஒருவரைத் தேர்ந்தெடுப்பவர் – இப்பொழுது நிலவும் சீரழிவு அரசியலைத் தொடர்வதற்குத் தானும் ஒரு தூண் நடுபவராகவே இருப்பார்! தவறானவர்களில் ஒருவரை நீக்கி இன்னொருவரைக் கொண்டு வரக்கூடாது. சரியான மாற்றை உருவாக்க வேண்டும். சரியான மாற்று என்பது ஒற்றைச் சர்வாதிகாரத் தலைவர் இல்லை! தமிழ்ச்சமூகத்தில் உருவாகும் விழிப்புணர்ச்சியின் வெளிப்பாடாக உருவாகி வளரும் புதிய இளைஞர்கள், மாணவர்கள், மாணவிகள்! …

நாளைக்கே இந்த மாற்று உருவாகி விடுமா என்று சிலர் கேட்பார்கள். நாளைக்கே பதவிக்கு வந்து சசிகலாவோ, ஓ.பி.எசோ, ஸ்டாலினோ எதைச் சாதிக்கப் போகிறார்கள்? கருணாநிதியும் செயலலிதாவும் எதைச் சாதித்தார்கள்? காவிரி, கச்சத்தீவு, கடல் உரிமை, முல்லைப் பெரியாறு, பாலாறு, பவானி, தமிழ் மொழி எனப் பறிபோன உரிமைகளில் எதை மீட்டர்கள்? ஈழத்தமிழர்கள் அழியாமல் காத்தார்களா? ஏழு தமிழர்களைத்தான் விடுதலை செய்தார்களா? தலைமை இல்லாத மாணவர்கள், இளைஞர்கள் போராடி சல்லிக்கட்டு உரிமையை மீட்டார்கள். நம்மாழ்வார் தொடங்கி வைத்த மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம் கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்களின் போராட்டங்களாய் விரிவடைந்து முதற்கட்ட வெற்றி பெற்றுள்ளது. கெய்ல் குழாய்ப் பதிப்பும் அப்படித்தான் தடுத்து நிறுத்தப்பட்டது. இவ்வாண்டு பொங்கல் விழாவுக்கான பொது விடுமுறையும் நடுவணரசு நிறுவனங்களில் பணியாற்றும் தமிழர்களின் போராட்டங்களாலும், பொது மக்களின் ஆவேசத்தாலும் பெறப்பட்டது. இன்றைக்கு சீரழிவின் சில சின்னங்களில் ஒன்று தனியாகவோ, அல்லது சில சின்னங்களின் கூட்டாகவே தலைமை தாங்கட்டும். எதிர்காலத்தில் தமிழர் வாழ்வுரிமை, தமிழ் மொழி உரிமை, தமிழர் தாயக உரிமை ஆகியவற்றை மீட்கவும், சனநாயக நெறிகள், தமிழர் தன்மானம், தமிழர் அறம் ஆகிய பண்புகளைக் கொண்ட ஆற்றல்கள் தனித்தனியே இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும் அந்தத் திசையில் முன்னேறிப் பயணிப்போம்; ஒருங்கிணைவோம்! தமிழ்நாட்டில் உறுதியாக சரியான மாற்று உருவாகும்! மாற்றம் உறுதியாகும் என்று மணியரசன் கூறியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.