மனுஷ்யபுத்திரன்

இன்று காலை புதிய தலைமுறையில் ஆவடி குமார் அடிப்படையான எந்தக் கேள்விக்கும் பதில் அளிக்காமல் திமுகவை அவதூறு செய்வதிலேயே குறியாக இருந்தார். சட்ட சபையில் துரைமுருகன் ஓபிஎஸ் ஸை நோக்கி ‘ 5 ஆண்டுகளும் நீங்களே ஆளுங்கள்’ என்று சொன்னது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை பொறுமையாக விளக்கினேன். ஓ பி எஸ் ‘ நாங்கள் செய்த நல்லது எதையும் திமுக பாராட்ட மறுக்கிறது” என்று சட்ட சபையில் குறைபட்டுக்கொண்ட போது ” துரைமுருகன்” நல்லது செயயுங்கள். நாங்கள் துணையாக இருக்கிறோம். நாங்கள் உங்கள் எதிரிகள் அல்ல. உங்களுடன் இருப்பவர்களிடம்தான் கவனமாக இருக்க வேண்டும்” என்ற பொருளில்தான் பேசினார். ஓபிஎஸ் சிற்கு கீழ் செயல்படும் அமைச்சர்களே சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று பேசி வரும் சூழழில் தமிழகத்தில் ஒரு சட்டபூர்வமான ஆட்சி நடைபெற வேண்டும் என்ற அடிப்படையிலேயே துரை முருகன் இதைக் கூறினார். “அதிமுகவை அதன் எதிர்கட்சி உடைக்க வேண்டும் என்றால் இப்படி வெளிப்படையாக சட்ட சபையில் பேசுவார்களா ?” என்று கேட்டேன். மேலும் “சட்டசபையில் தேமுதிகவை நீங்கள் உடைத்தது போல மற்றவர்களும் செய்வார்கள் என்று நினைக்கிறீர்களா?” என்று கேட்டேன்.
“சின்னம்மா அம்மாவோடு கூடப்போனார்..வந்தார் ஆகவே அவர்தாதான் முதல்வராக வேண்டும் என்று ஆவடி அடம் பிடித்தார். நான் அதற்கு ” ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வை பட்டவர்களெல்லாம் அதிமுகவில் எம்.எல்.ஏ , எம்.பி, மந்திரி என்று ஆகியிருக்கிறார்கள். ஆனால் தன் கூடவே இருந்த ஒருவருக்கு எந்த அரசியல் பொறுப்பும் பதவியும் ஜெயலலிதா தரவில்லை என்றால் அது சசிகலா மட்டும்தான். அரசியலில் அனுமதிக்காதது மட்டுமல்ல, அரசியலுக்கு வர மாட்டேன் என்று சசிகலாவிடம்உறுதி மொழி கடிதமும் வாங்கினார்” என்பதை சுட்டிக்காட்டினேன். பதட்டமடைந்த குமார் திசை திருப்ப வழ வழவென்று பேச ஆரம்பித்தார்.
மத்திய அரசு மாநில அரசின் உரிமைகளை பலவிதங்களிலும் பறித்துவரும் சூழலில் ஆளும் கட்சியோடு இணக்கமாக நின்று அந்த உரிமைகளை பாதுக்காக்கும் சூழலை உருவாக்க ஸ்டாலின் முயற்சிக்கிறார். ஆனால் பார்த்து சிரித்தாலே துரோகம் என்று சொல்லும் சசிகலா இந்த சூழலை அழிக்க முயற்சிக்கிறார்” என்றேன்.
” சசி கலாவிற்கு பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்றால் அவர்களை கடத்தி ஏன் ரகசிய இடத்தில் வைத்திருக்கிறீர்கள்” என்று கேட்டேன். உடனே பதட்டமடைந்த குமார் ” ஸ்டாலின்தான் கலைஞரை கடத்திவைத்திருக்கிறார்?” என்றார். பொறுமையிழந்த நான் கேட்க வேண்டாம் என்று நினைத்த அந்தக் கேள்வியைக்கேட்டேன்.
” ஜெயலலிதாவை ஏன் கொலை செய்தீர்கள்?”
மனுஷ்யபுத்திரன், பதிப்பாளர்; அரசியல் செயல்பாட்டாளர்.