ரூபெல்லா தடுப்பூசியால் ஆட்டிச ஆபத்து; உலக நாடுகளால் தடை செய்யப்பட்டதை தமிழக அரசு ஏன் அனுமதிக்கிறது?

நக்கீரன்

நக்கீரன்
நக்கீரன்

எதிர்வரும் பிப்ரவரி மாதம் முதல் மாநிலம் முழுவதுமுள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு MR (தட்டம்மை –ரூபெல்லா) தடுப்பூசி போட போவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. தடுப்பூசிகளுக்குப் பின்னேயுள்ள ஆபத்துகள் குறித்து ‘குழந்தைகள் மீது மருத்துவம் நிகழ்த்தும் வன்முறைகள்’ என்ற தலைப்பில் ஏற்கனவே ஒரு கட்டுரை எழுதியிருப்பதால், கடந்த நான்கு நாட்களாகவே வாசகர்களும் ஊடகத் தோழர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனவே இத்துறையில் முன்னோடிகளான மருத்துவர் வீ. புகழேந்தி, அ.உமர் ஃபாரூக் இருவரிடமும் கலந்து பேசிவிட்டு இப்பதிவை எழுதுகிறேன்.

மேற்குலக நாடுகளில் தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ருபேலா ஆகிய மூன்றுக்கான தடுப்பைக் கொண்டது MMR தடுப்பூசி எனப்படுகிறது. இங்கு தட்டம்மை, ருபேலா இரண்டுக்குமான தடுப்பூசியாக MR தடுப்பூசிப் போடப்பட இருக்கிறது. இதரத் தடுப்பூசிகளைப் போலவே MMR தடுப்பூசியும் குழந்தைகளுக்கு ஆட்டிச நோய் பாதிப்பை உண்டாக்க கூடியவையே என்பது நம்பத்தகுந்த தகவல்கள். தடுப்பூசிகளுக்கும் ஆட்டிச நோய்க்கும் உள்ளத் தொடர்பை அறிய VRAN, Anti-Vaccination என்று இணையத்தில் தட்டிப்பாருங்கள். உலகநாடுகள் முழுவதுமிருந்தும் ஏராளமான சான்றுகள் கொட்டும். தொடக்கத்தில் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ஆதரவாக இக்குற்றச்சாட்டுகளை மறுத்துவந்த அய்க்கிய அமெரிக்க அரசு, தம் மக்களின் எதிர்ப்பால் தடுப்பூசியைக் கைவிட்ட வரலாறும் உண்டு. மஞ்சள்காமாலைக்கான ‘ஹெபடைட்டிஸ்–பி’ தடுப்பூசி அப்படிதான் அங்கு நிறுத்தப்பட்டது. அமெரிக்கக் குழந்தைகளுக்கு ஒத்துக்கொள்ளாத இத்தடுப்பூசி இந்தியக் குழந்தைகளுக்கு மட்டும் எப்படி ஒத்துக்கொள்ளும் என எக்கேள்வியும் எழுப்பாமல், அதனை இந்திய அரசு அனுமதித்தது. அமெரிக்க Merck நிறுவனத்துக்கு 100 கோடி வருவாய் தந்துவந்த இவ்வணிகம் நின்றுபோகலாமா?

இந்நிலையில் MMR தடுப்பூசியை மாநில அரசே முன்னெடுத்து நடத்த தொடங்குவது அய்யங்களை ஏற்படுத்துகிறது. நம்மைவிட முன்னேறிய ஜப்பான் இத்தடுப்பூசியைத் தடை செய்திருப்பதும், இத்தாலிய நீதிமன்றம் இத்தடுப்பூசிக்கும் ஆட்டிசம் நோய்க்கும் தொடர்பு இருக்கிறது எனத் தீர்ப்பளித்திருப்பதும் நமது அரசுக்குத் தெரியாது என்று சொன்னால் அது நம்புவதற்கில்லை. இதுகுறித்த எந்த விளக்கமும் தாராமல் இத்தடுப்பூசி 1.8 கோடி தமிழகக் குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்பட இருக்கிறது. இத்தடுப்பூசியின் விலை 2700 ரூபாய் என்பதையும், 1.8 கோடி குழந்தைகள் என்பதையும் பெருக்கி வகுத்து பார்த்தால் காரணத்தை நீங்களே அறியலாம்.

தடுப்பூசிகளில் உள்ள ஆபத்தானப் பொருள் தியோமெர்சால் (Thiomersal) அல்லது திமெரோசல் (Thimerosal) எனும் பதப்படுத்தி ஆகும். பாதரசம் கலந்த இந்தத் திமெரோசலை மக்களின் கடும் எதிர்ப்புகளினால் மேற்குலக அரசுகள் 2004ம் ஆண்டிலேயே நிறுத்திவிட்டன. “ஆனால் இங்கு இதற்கு இன்னும் தடையில்லை” என்று சொல்லி அதிர வைத்தார் மரு.வீ.புகழேந்தி. அவர் மேலும் கூறும்போது, “தமிழ்நாட்டில் தட்டமை பாதிப்பு வெறும் 500 பேருக்குதான் உள்ளது. அதுபோல் ரூபெல்லா பாதிப்பும் சுமார் ஆயிரம்தான். ஆனால் எதற்காக இத்தடுப்பூசியை 1.8 கோடி குழந்தைகளுக்குப் போட வேண்டும்?” என்றார். மேலும் கூறுகையில், “இதனால் இந்நோய்களை நூறு விழுக்காட்டுக்கு குறைக்க முடியாது. 40-50 விழுக்காடுதான் ‘குறைக்கலாம்’ என்கிறார்கள். இதற்கெல்லாம் மேலே இதில் என்ன வகையான பொருட்கள் கலந்திருக்கிறது என யாருக்கு தெரியும்?” என்று கேட்டார். இது நியாயமான கேள்வி.

MMR தடுப்பூசியை அமெரிக்காவில் தயாரிக்கும் Merck நிறுவனம் ஒருமுறை இத்தோடு சின்னம்மை தடுப்பையும் சேர்த்து இதை 4 in 1 ஆக இம்மருந்தைத் தயாரித்தது. அதன் மருத்துவச் சோதனைகளில் ஆட்டிசம் வளர்வதற்கான கூறுகள் இருந்தது தெரிந்தும் அதை FDA அதற்கு அங்கீகாரம் அளிப்பதற்கு முன்னர் அந்நிறுவனம் மறைத்தது. பின்னர் இச்செய்திகள் வெளியாக அத்தயாரிப்பை அது திரும்பப் பெற்றுக்கொண்டது. பன்னாட்டு மருத்துவ நிறுவனங்களின் ஆய்வுக்கூடமாக இந்தியா இருந்துவரும் நிலையில் இந்நிறுவனங்களின் செயற்பாட்டின் மீது அச்சம் ஏற்படுவது இயற்கையே.

கர்ப்பப்பை வாய் புற்றுக்கான Gardasil மருந்தை ஆந்திரப்பிரதேச கம்மம் மாவட்ட ஏழைப் பெண் குழந்தைகளிடம் ஆய்வு செய்ததும், வழக்கத்தை விட 5 மடங்கு வீரியமிக்கச் சொட்டு மருந்தை உத்தரபிரதேச குழந்தைகளுக்குக் கொடுத்து ஆய்வு செய்ததும், இந்தூர் மருத்துவமனையில் க்ளாஸ்கோ நிறுவனம் குழந்தைகளிடத்து நடத்திய மருத்துவச் சோதனையும், டெல்லி எய்ம்ஸ் மருத்துவ மனையிலேயே 4142 குழந்தைகள் உயர் ரத்த அழுத்த மருந்துக்கான ஆய்வுகளை மேற்கொண்டு அதில் 42 குழந்தைகள் இறந்தது ஆகிய நிகழ்வுகளும் நியாயமான அய்யங்களை ஏற்படுத்துகின்றன.

இம்மாதிரி திட்டங்களில் மருத்துவ விதிமுறைகள் அறவே பின்பற்றப்படுவதில்லை. பள்ளிகளில் இரும்புச்சத்து மாத்திரை வழங்கும் திட்டம் நடப்பில் இருக்கிறது. இதை உட்கொள்ளும் மாணவர்களுக்கு மருந்து ஒவ்வாமை உண்டா என்பதை முதலில் கேட்டறிய வேண்டும். ஏனெனில் ஹீமோலித்திக் அனிமியா (Hemolytic anemia), போர்பைரியா (Porphyria), தலசீமியா (Thalasemia) ஆகியவற்றுக்கான நோய்க்குறிகள் இருக்கும் குழந்தைகளுக்கு இதை வழங்கக்கூடாது. மேலும் குருதியில் போதுமான ஹீமோகுளோபினைக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்குக் கூடுதலாக இரும்புச்சத்து சேர்ந்தால் சிடரோசிஸ் (Siderosis) என்ற நோய் ஏற்படும். இவ்விதிகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டுப் பள்ளிகளில் இன்றும் இது சுதந்திர தினத்துக்கு மிட்டாய் கொடுப்பதுபோல் அள்ளிக் கொடுக்கப்பட்டு வருகிறது. MMR தடுப்பூசிக்கும் இப்படிச் சில விதிமுறைகள் உண்டு. முதல் தடவை MMR ஊசிப்போட்டு ஒவ்வாவை ஏற்பட்டவர்களுக்கும், ஜெலட்டின், நியோமைசின் ஒவ்வாமை உள்ளவர்களுக்கும், நோய்எதிர்ப்புத் திறன் குறைபாடு உடையவர்களுக்கும் இதைப் போடக்கூடாது. ஆனால் இவ்விதிகளும் முறையாகப் பின்பற்றப்படுமா என்பது கேள்வி.

மேற்குலக நாடுகளைப் போலவே தமிழகத்திலும் இன்று தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பரவலாகப் பரவி வருகிறது. பல பெற்றோர்கள் தம் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடாமல் வளர்த்து வருகின்றனர். அரசே பள்ளிகளில் இத்திட்டத்தை மேற்கொள்ளும்போது இவர்கள் இத்திட்டத்தை எப்படி எதிர்கொள்வது என்கிற கேள்வி பிறக்கிறது. இச்சிக்கலைக் குறித்து உமர் ஃபாரூக்கிடம் கேட்டபோது “பெற்றோர் பள்ளி நிர்வாகத்துக்குத் தன் குழந்தைக்குத் தடுப்பூசி போட வேண்டாம் ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தால் போதும். இந்தியாவில் எந்தவொரு தடுப்பூசியும் கட்டாயமில்லை” என்றார். இப்பெற்றோர்கள் இதைப் பின்பற்றலாம்.

இந்தியாவில் ஆங்கில மருத்துவத்தைத் தவிர, ஹோமியோபதி, ஆயுர்வேதம், சித்தா, யுனானி ஆகியவையும் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவம்தான். எந்த மருத்துவத்தைத் தேர்ந்தெடுப்பது என்கிற உரிமை குடிமக்களுக்கு உண்டு. இக்கொள்கையில் அரசு தலையிட்டு ஏன் ஆங்கில மருத்துவத்திலேயே தீர்வுக்காண முயலுகிறது என்பது தெரியவில்லை. இத்தடுப்பூசியால் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்குத் தாம் முழுப்பொறுப்பு ஏற்பதாக அரசு உத்தரவாதத்தை மக்களுக்குத் தருமா? தொற்றுநோய் பரவலைத் தடுக்கக் கேரள அரசு பின்விளைவு இல்லாத ஹோமியோ மருந்துகளைப் பரிந்துரைக்கிறது. சிக்குன்குனியா பரவலுக்கு ஆங்கில மருந்தை முதலில் பரிந்துரைத்து அதில் தோற்றுப்போன தமிழக அரசு பிறகு சித்த மருத்துவத்தின் ‘நிலவேம்பு கசாயம்’ தந்தது நினைவிருக்கலாம்.

சுற்றுச்சூழல் தூய்மையைப் பேணினால் தொற்றுநோய் பரவலைத் தடுக்கலாம். இதில் தோற்றுப்போன அரசுகள்தாம் அதை மறைக்க இதுபோன்ற குறுக்கு வழிகளை நாடுகின்றன. வளர்ச்சியடைந்த நாடுகள் இம்முறையில்தான் தொற்று நோய்களைத் தடுத்துக் கொள்கின்றன. மாறாக மேற்கொண்டு நோய்களை உற்பத்தி செய்துக்கொள்ளும் வழிகளை நமது அரசு தாமே தேடிக்கொள்கிறது. அய்க்கிய அமெரிக்காவில் தடுப்பூசிகளால் குழந்தைகளுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட, பெற்றோர்கள் ஏராளமானோர் வழக்குத் தொடுத்தனர். இவற்றைத் தீர்ப்பதற்கென்றே ‘Anti Vaccination Court’ என்று தனி நீதிமன்றமே அங்கு இயங்குகிறது. இதனால் அரசுக்கு இழப்பீட்டு வகையில் ஏராளமாகச் செலவு ஏற்படுகிறது. தன் இலாபத்தை அள்ளிக்கொள்ளும் பன்னாட்டு மருத்துவ நிறுவனங்கள் அப்போது ஒரு பைசாவும் தந்து உதவாது. .

அய்க்கிய அமெரிக்காவின் குழந்தைகளில் 150க்கு ஒரு குழந்தை ஆட்டிச நோயால் பாதிக்கப்படுகிறது. மொத்த பள்ளிகளில் 15% பள்ளிகள் ஆட்டிசக் குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளிகள். பாதிப்பு இவ்வளவு தீவிரமாக இருக்கும்போது நமது மருத்துவத்துறையும் மருத்துவர்களும் இன்னும் ஏன் தூங்குவது போல் நடிக்கிறார்கள் என்று தெரியவில்லை. மருத்துவப் பாதிப்புகளை எதிர்ப்பதில் மேற்குலக நாடுகளின் மருத்துவர்களின் பங்கினைப் பாருங்கள். கோவையில் ஒரு மக்கள் மருத்துவர் இறந்தபோது கூடிய கூட்டம் நினைவிருக்கலாம். இங்குள்ள ஆயிரக்கணக்கான மருத்துவர்களில் எத்தனை பேருக்கு இது வாய்க்கும் எனத் தமக்குத் தாமே ஒரு கேள்வியைக் கேட்டுக்கொள்வது நலம். இளையத்தலைமுறை இன்று விழித்துக் கொண்டுவிட்டது. அவர்கள் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இனியாவது பணத்தையும், அச்சத்தையும் மீறி மருத்துவர்களின் மனசாட்சி மக்களுக்காகப் பேசவேண்டும்.

நக்கீரன், சூழலியல் எழுத்தாளர். காடோடி இவருடைய சூழலியல் நாவல். திருடப்பட்ட தேசியம், கார்ப்பொரேட் கோடாரி உள்ளிட்ட  நூல்களையும் எழுதியுள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.