மின்சாரத்திற்கே உயிர் கொடுத்தவர்கள் நாங்கள்… மிஸ்டர் அமல்ராஜ்!

ஏ.பாக்கியம்

ஏ. பாக்கியம்
ஏ. பாக்கியம்

ஜல்லிக்கட்டுக்காக தமிழக மாணவர்களும், இளைஞர்களும் நடத்திய வீரஞ்செறிந்த அறப்போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், (டிஒய்எப்ஐ), இந்திய மாணவர் சங்கம் (எஸ்எப்ஐ) ஆகிய அமைப்புகளை செயற்கையாக சமூக விரோத சக்திபோல் சித்தரித்து கோவை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் பேட்டி அளித்திருக்கிறார். மேலும், ஏதாவது மெசேஜ் அனுப்புவது என்றால் அவரைக் கேட்டுக் கொண்டு, அவரது அனுமதி பெற்றுவிட்டுத்தான் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற தொனியிலும் அவர் மிரட்டல் விடுத்திருக்கிறார்.சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜூம் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்களை தேச விரோதிகள், சமூக விரோதிகள் என்று குற்றப்படுத்திக் கொண்டிருக்கிறார்.இந்த போலீஸ் அதிகாரிகளின் கருத்துக்கள் தமிழக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தளத்திலும் கடும் கண்டனக் குரல்கள் எழுந்துள்ளன. அமல்ராஜ் மற்றும் ஜார்ஜின் கருத்துக்கள் அவர்களைப் பொருத்தவரை நியாயமானதுதான். போலீஸ் அதிகாரிகள், ஆளும் வர்க்கத்தின் அடக்குமுறைக் கருவி; ‘பிரிடேட்டர்கள்’. அவர்களுக்கு தெரிந்தது எல்லாம், நியாயத்துக்காக போராடுபவர்களை அடித்து நொறுக்கு, சுட்டுத் தள்ளு, கொளுத்து, உள்ளே தள்ளு என்பவைதான். இந்த வார்த்தைகள், செயல்கள்தாம் அவர்களுக்குள் புரோகிராம் செய்யப்பட்டிருக்கும். இந்த மனித எந்திரங்களிடம் இருந்து எப்படி அன்பு, பாசம், நேசம், தோழமையை எதிர்பார்க்க முடியும்?அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பதைப் போல, மக்கள் எழுச்சியைக் கண்டு அரண்டு போயிருக்கும் ஆட்சியாளர்களுக்கும், அவர்களின் ‘காவலர்’களுக்கும் போராட்டக்காரர்கள் சமூக விரோதிகளாக, தேச விரோதிகளாகத்தான் தெரிவார்கள்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்கிற மகத்தான இயக்கத்தின் வீரஞ்செறிந்த வரலாறும் இணையற்ற தியாகமும் பாவம் ஒரு சாதாரண போலீஸ் அதிகாரி அமல்ராஜூக்கு எப்படித் தெரியும்? பஞ்சாப்பில் காலிஸ்தான் தீவிரவாதிகள் தேச ஒற்றுமையை சீர்குலைத்தபோது, அதை எதிர்த்துத் தீரமுடன் போராடியவர்கள் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள்.

தேச ஒற்றுமைக்காக குர்ணாம் சிங் உப்பல், சோகன் சிங் தேஷி உட்பட நூற்றுக்கணக்கான டிஒய்எப்ஐ தோழர்கள் தங்கள் இன்னுயிரை இழந்தனர்.டிஒய்எப்ஐ பஞ்சாப் மாநிலத் தலைமையே தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டது. அசாமில் உல்பா, போடோ போன்ற தீவிரவாத அமைப்புகளையும், காஷ்மீரில் பிரிவினைவாத சக்திகளையும் எதிர்த்து எவ்வித சமரசமுமின்றி போராடியதும், அதற்காக பல தோழர்களை இழந்ததும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்தான். மேற்கு வங்கத்தில் மின் உற்பத்தியைப் பெருக்க, பக்ரேஷ்வர் மின்திட்டத்தை கொண்டு வந்தபோது, மத்திய அரசு நிதி உதவி செய்ய மறுத்தது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் லட்சக்கணக்கான தோழர்கள் ரத்ததானம் செய்து பக்ரேஷ்வர் மின்திட்டத்திற்கு நிதி திரட்டினார்கள். தங்கள் உயிர் சக்தியான ரத்தத்தை கொடுத்து, மனித குலத்தின் தவிர்க்க முடியாத சக்தியான மின் சக்திக்கு உயிர் கொடுத்தார்கள். இப்படி தேசம் முழுக்க வாலிபர் சங்கத்தின் தியாகத்தைச் சொல்லிக் கொண்டே போகலாம்.எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் கல்வி, வேலையில்லாத காலத்தில் நிவாரணம் கோரி 1977ல் தமிழகத்தில் குமரி முதல் சென்னை வரை சைக்கிள் பயணம் நடத்திய அமைப்பு டிஒய்எப்ஐ. இதன் பிறகுதான் அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் வேலையில்லா கால நிவாரணத்தை அறிவித்தார்.சென்னையில் 1986ம் ஆண்டு மார்ச் 23ல் (பகத்சிங் நினைவு தினம்) டிஒய்எப்ஐ ரத்ததான கழகத்தை ஆரம்பித்து இன்று வரை தொடர்ந்து அதிகளவில் ரத்த தானம் செய்ததற்கான விருதுகளை குவித்து வருகிற இயக்கம் டிஒய்எப்ஐ.அப்போதெல்லாம் ரத்தம் கொடுத்தால் செத்துப் போயிடுவோம் என்ற பயத்தில், அது உண்மையில்லை என்றாலும் கூட, யாருமே ரத்த தானம் செய்ய வரமாட்டார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில், நகர்ப்பகுதி குடிசைகளில் இருந்து குக்கிராமங்களில் உள்ள இளைஞர்கள் வரை நம்பிக்கையூட்டி ரத்த தானம் செய்த அமைப்பு டிஒய்எப்ஐ.ரத்த தானம் வழங்கியதில் டிஒய்எப்ஐ தோழர்கள் காக்கி, காவி என்றெல்லாம் நிறபேதம் பார்த்ததில்லை.

நூற்றுக்கணக்கான போலீஸ்காரர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் வாலிபர் சங்கத் தோழர்கள்தான் ரத்த தானம் செய்துள்ளனர். இது அமல்ராஜுக்கோ, ஜார்ஜூக்கோ தெரியாது போலும்.1992-ல் சென்னையில் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் போதைப் பொருள் எதிர்ப்பு இயக்கத்தை டிஒய்எப்ஐ நடத்தியது. இதற்காக 3000 இளைஞர்களைத் திரட்டி உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும், காமராஜர் அரங்கத்தில் கருத்தரங்கும் நடைபெற்றது.போதைப் பொருளை எதிர்த்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மிகப்பெரிய மாரத்தான் ஓட்டத்திற்கு டிஒய்எப்ஐ ஏற்பாடு செய்தது. அதற்கு அன்றைய காவல்துறை, போக்குவரத்து நெரிசலை காரணம் காட்டி மாரத்தான் நடத்த வேண்டாம் என்று சொன்னது. நீதிபதியும் வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து ஓட்டம் கைவிடப்பட்டு தீர்மானம், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இப்போது சொல்லுங்கள்… சட்டத்தை மதித்த… மதிக்கிற எங்கள் வாலிபர் சங்கமா சமூகவிரோதி?கல்வி என்பதும், எழுத்தறிவு என்பதும் சென்னை மாநகரக் குடிசைப் பகுதிகளில் எட்டிப்பார்க்காத சூழ்நிலையில் 60க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச இரவுப் பள்ளியை துவங்கி நடத்தியது டிஒய்எப்ஐ. அப்போது ‘இங்கெல்லாம் வந்து நடத்தாதீங்க, இவனுங்க உருப்பட மாட்டானுங்க’ என்று ஏளனம் செய்தார்கள் காவல்துறை அதிகாரிகள். ஆனால், குடிசைப் பகுதிகளில் டிஒய்எப்ஐ – செய்த கல்விப் பணியால் நிலைமை மாறியதைத் தொடர்ந்து லோக்கல் போலீஸ் ஸ்டேசனில் உள்ள போலீஸ்காரர்கள் ‘இந்த ஊர் மாறியிருக்குன்னா அதுக்கு டிஒய்எப்ஐ தான் காரணம்’’ என்று பாராட்டினார்கள். இது, மக்கள் போராட்டங்களில் லத்தியைச் சுழற்ற மட்டுமே தெரிந்த அமல்ராஜூக்கு தெரிய வாய்ப்பில்லை.1992ல் தமிழகத்தில் வேலையின்மையைப் போக்கக் கோரியும், தொழில் வளர்ச்சியைப் பெருக்க கோரியும் குமரியில் இருந்தும் கோவையில் இருந்தும் 2500 கிலோ மீட்டர் கிராமம் கிராமமாகச் சென்று லட்சக்கணக்கான மக்களைச் சந்தித்து அணி திரட்டிய இயக்கம்தான் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்.அதே ஆண்டில் (1992) ஜெயலலிதா அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியபோது, தமிழகம் முழுவதும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் மறியல் செய்து பல்லாயிரக்கணக்கில் சிறை சென்றனர். சிறையில்தான் அவர்கள் தீபாவளி கொண்டாடினர். வாலிபர்களின் எழுச்சியை கண்ட ஜெயலலிதா அரசு பஸ் கட்டணத்தை குறைத்தது.1994ல் வேலை நியமனத் தடைச் சட்டத்தை எதிர்த்து அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தை நடத்தி சுமார் 60 ஆயிரம் வாலிபர் சங்கத் தோழர்கள் சிறை சென்றனர். இது சமூகம் சார்ந்த அரசியல் போராட்டம். மக்களை நேரடியாகப் பாதித்த பிரச்சனைகளுக்கான போராட்டம்.ஓசோன் மண்டலத்தில் ஓட்டை விழுந்துவிட்டது என்று 1994-ம் ஆண்டே சுற்றுச்சூழலுக்காக கவலைப்பட்டது வாலிபர் சங்கம். சென்னையில் ஒரே நாளில் பல்வேறு இடங்களில் 4000 மரக்கன்றுகளை நட்டது.ஊருக்குத்தான் உபதேசம், எங்களுக்கு இல்லை என்று எப்போதும் இருந்ததில்லை நாங்கள்.

கண்தான விழிப்புணர்வுப் பிரச்சாரம் தொடர்ந்து நடத்தியதோடு 1994-ம் ஆண்டு சென்னை சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் 1200 டிஒய்எப்ஐ தோழர்கள் கண்தானம் செய்கிறோம் என்ற உறுதிமொழிப் படிவத்தை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். 1994-ல் வைகையில் வெள்ளம் கரைபுரண்டோடியது. மதுரை மீனாட்சிபுரத்தை ஒட்டிய பல இடங்களில் வீடுகள் சகதியால் மூழ்கடிக்கப்பட்டது. மக்கள் வீதிகளில் விக்கித்து நின்றார்கள். 15 நாட்கள் சகதியோடு சளைக்காத போராட்டம். சேற்றை அள்ளி சுத்தப்படுத்தி வீட்டைக் கழுவி, விக்கித்து நின்ற மக்களை குடியேறச் செய்தது டிஒய்எப்ஐ. இது காக்கிக் கனவான்களுக்கு தெரியாது. கள்ளச்சாராயத்தை எதிர்த்து கடலூரில் கடும் போராட்டத்தை நடத்தியது டிஒய்எப்ஐ தான். இதனால் குமார், ஆனந்தன் ஆகிய டிஒய்எப்ஐ தோழர்கள் சமூகவிரோதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது எஸ்.பி. ஆக இருந்தவர் சைலேந்திரபாபுதான். எஸ்.பி. ஆபீசிலிருந்து சுமார் 1 கி.மீ. தூரத்தில் நடந்த இந்த படுகொலையில் சைலேந்திர பாபு தலைமையிலான காவல்துறை யாருக்கு சாதகமாக நடந்து கொண்டது என்பதும் ஊரறிந்த ரகசியம்.ராமச்சந்திரா மருத்துவமனையை அரசுடைமையாக்கக் கோரிய போராட்டத்தை சென்னையில் வாலிபர் சங்கமும், மாணவர் சங்கமும் இணைந்து நடத்தியது. இதற்காக காவல்துறையின் அடக்குமுறை, சிறைவாசம் டிஒய்எப்ஐ, எஸ்எப்ஐ தோழர்களுக்கு பரிசாக கிடைத்தது. எங்களது போராட்டத்தின் விளைவாக ராமச்சந்திரா மருத்துவமனையை அரசு ஏற்றுக்கொண்டது. பிறகு அதை உடையாரிடமே ஒப்படைத்துவிட்டார்கள் என்பது வேறு விசயம்.மக்கள் ஒற்றுமைக்கான போராட்டத்தில், சமூக விரோதிகளை சமரசமின்றி எதிர்த்த போராட்டத்தில் விருதுநகர் சந்துரு, மண்டபம் முத்து, வியாசர்பாடி ராஜூ, நெல்லை வி.கே.புரம் குமார், குமரி அருமனை சுதாகர் என ஏராளமான தோழர்களை டிஒய்எப்ஐயும் எஸ்எப்ஐயும் இழந்திருக்கின்றன. இவர்கள் எல்லாம் தனிப்பட்ட பிரச்சனைகளுக்காக போராடியவர்கள் அல்ல. மக்கள் பிரச்சனைகளுக்காக போராடியவர்கள்.

அதற்காக மரணத்தைப் பரிசாக ஏற்றவர்கள்.தமிழகம் முழுவதும் டிஒய்எப்ஐ பொங்கல் விழா கொண்டாடி வருகிறது. அந்த நேரத்தில் குடிசை மக்களுக்கான பல்வேறு போட்டிகள், மாணவர்கள், இளைஞர்களுக்கான பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தி மக்களோடு மக்களாக டிஒய்எப்ஐ செயலாற்றி வருகிறது. 2004 டிசம்பர் 26-ல் ஆழிப்பேரலை (சுனாமி) அடித்து நொறுக்கிய போது நிவாரணப் பணிகளில் முழு மூச்சோடு ஈடுபட்டது டிஒய்எப்ஐ. எண்ணூரில் இருந்து சீனிவாசபுரம் வரை ஒரு பகுதி, கடலூரில் இருந்து நாகப்பட்டினம் மற்றும் குமரி வரை மற்றொரு பகுதி என கடலில் அழுகி மிதந்த பிணங்களை தோளில் சுமந்து கரைசேர்த்த கரங்களுக்கு சொந்தக்காரர்கள் டிஒய்எப்ஐ தோழர்கள்தான். 2015 நவம்பர், டிசம்பரில் சென்னையில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டபோது மீட்புப் பணி, மருத்துவ உதவி, உணவு வழங்குதல் உள்ளிட்ட நிவாரணப்பணிகளை சென்னை நகரம் முழுக்கச் செய்தது டிஒய்எப்ஐ. தங்களுடைய வீடுகளில் பலத்த சேதம் இருந்தாலும் அதைவிடுத்து மற்றவர்களுக்காக உயிரைக் கொடுத்து உதவி செய்தனர் டிஒய்எப்ஐ தோழர்கள். காவல்துறையே நுழையத் தயங்கிய இடத்திலெல்லாம் டிஒய்எப்ஐ தோழர்கள் உயிரைப் பணயம் வைத்து மரணத்தின் வாயிலில் நின்று மக்களை காத்தார்கள்.இப்படி கலை, பண்பாடு, சமூகம், அரசியல், அடிப்படை பிரச்சனைகள் என்று மக்களோடு மக்களாக நின்று மக்களுக்காக போராடும் எங்கள் வாலிபர்களும் மாணவர்களுமா சமூகவிரோதி? தேசவிரோதி?நாடு முழுவதும் மக்கள் இயக்கங்களை தேசவிரோதிகள் என முத்திரை குத்த முயற்சிக்கிறது காவிக்கூட்டம். தமிழகத்தில் காக்கிச் சட்டைகளும், காவிக்கு நிறம் மாறுகிறதோ?

நன்றி: தீக்கதிர்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.