சரவணன் சந்திரன்

இரண்டு வகை அரசியல் இருக்கிறது. சட்டத்தை முன்னிறுத்திய அரசியல். சில சமயங்களில் சட்டத்தைத் தாண்டி தார்மீகத்தை முன்னிறுத்தும் அரசியல். முன்னதில் இம்மி பிசகாமல் சட்டம் என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்பது முதன்மையானதாக இருக்கும். மு.க.ஸ்டாலின் இப்போது சட்டத்தை முன்னிறுத்திய அரசியலைச் செய்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. அது மிக முக்கியமானதும் மதிக்கத்தக்கதும் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. அதே சமயம் ஜல்லிக்கட்டிற்கு நாட்டின் உச்ச நீதிமன்றம் தடைக்கல்லாக இருக்கும் சமயத்தில், அது சட்டப்படி செயல்படுகிறது என்று சொல்லி அமைதியாக ஏன் இருப்பதில்லை? மக்களின் நம்பிக்கைக்கு மக்களின் கொண்டாட்டத்திற்கு எதிராக இருப்பதாகச் சொல்லி களத்தில் இறங்குவதில்லையா?
அதைப் போலத்தான் சட்டப்படி சசிகலா முதல்வர் ஆவதைத் தடுக்க முடியாது. ஆனால் தேர்தலில் நின்று வெற்றி பெறாமல் கொல்லைப்புறம் வழியாக உடனடியாக முதல்வர் நாற்காலிக்கு நகர நினைப்பதை எதிர்க்கட்சித் தலைவர் என்கிற முறையில் தார்மீக அரசியல்படி வலுவாக எதிர்க்கலாம். ஆனால் அதை அவர் செய்யத் தவறுகிறார். அவர் இந்த விவகாரத்தில் சில கருத்துக்களைச் சொல்லியிருக்கிறார். அந்தக் கருத்துக்கள்கூட பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சுட்டிக் காட்டியபின்பு சொன்னவையே. ராமதாஸிற்கு முந்திக் கொண்டு சில விசயங்களை அவர் சொல்லியிருக்கலாம். என் நினைவிற்கு அவை தப்பிக்கூடப் போயிருக்கலாம். அப்படியே ஸ்டாலினே முந்திக் கொண்டு சொன்னார் என்று வைத்துக் கொண்டாலும், அவை எல்லாமும் சாதாரண அடையாள ரீதியிலான எதிர்ப்பே தவிர, வலுவானது அல்ல.
ஒருவேளை இதுமாதிரியான நெருக்கடி தமிழகத்தின் பிற கட்சிகளுக்கு வந்திருக்குமேயானால், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள்கூட இப்படித் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வர் நாற்காலிக்கு நகர்வது குறித்து அஞ்சத்தான் செய்வார்கள் என்பதுதான் என்னுடைய புரிதல். ஆனால் அதிமுக அது பற்றி எந்தவிதத்திலும் அலட்டிக் கொள்ளாததற்குக் காரணம் என்னவெனில், எதிர்கட்சிகளின் செயல்படாத போக்குதான். எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தார்மீக அழுத்தம் தரவேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். உடனடியாகப் போய் 30 எம்.எல்.ஏக்களை மனோகரா பாணியில் கட்டி இழுத்துவரவெல்லாம் சொல்லவில்லை. உறுதியான ஒரு போர்க்குரல். அது ஏன் அவர் தரப்பில் இருந்து இன்னமும் வரவில்லை என்பதுதான் கேள்விக்குறி. அவர் இதுவரை எழுப்பியதெல்லாம் உறுதியானது என்று சொல்வார்களேயானால், இனி அவர்கள்தான் அதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்.
மக்களின் நலன்களுக்கு எதிரான சட்டச் செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் அதையும் கேள்விக்குட்படுத்துவதுதான் ஒரு உறுதியான எதிர்கட்சித் தலைவரின் நியாயமான செயல்பாடாக இருக்க முடியும். மக்கள் எதிர்பார்ப்பது இப்படியான போர்க்குரலைத்தான். காவிரி, ஜல்லிக்கட்டு விவகாரத்தில் அதை எழுப்பும் போது, சசிகலா விவகாரத்தில் அதை எழுப்ப முடியாதா? எழுப்ப முடியாதளவிற்கு எது அவர்களைத் தடுக்கிறது? அந்தத் தடுக்கும் விஷயத்தைத் தகர்த்தெறியச் சொல்லித்தான் மக்கள் வேண்டுகிறார்கள். நமக்கு நாமே என மக்களை நடையாய் நடந்து சந்தித்தவர், அப்படி சந்தித்தவர்களில் ஒரு நாலு பேர் நம்பரையாவது வாங்கி வைத்திருக்க மாட்டாரா? ஓய்வாய் இருக்கும்போது அந்த நம்பர்களில் ஒரு சிலவற்றையாவது டயல் செய்து பார்க்கலாம். மிச்சத்தை அவர்கள் சொல்வார்கள். சொச்சத்தைச் செய்ய இவர்கள் விழித்தெழ வேண்டும்.
சரவணன் சந்திரன் எழுத்தாளர்; அரசியல் விமர்சகர். ரோலக்ஸ் வாட்ச்
, ஐந்து முதலைகளின் கதை
நாவல்களின் ஆசிரியர். சமீபத்தில் வெளியான நாவல் ‘அஜ்வா’.