”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்”

”உழவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்க, முதலமைச்சர் தனது பதவியை தக்க வைக்க போராடிக்கொண்டிருக்கிறார்” என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசின் செயலற்ற தன்மையை கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“உலகுக்கே உணவு படைத்து வாழ வைக்கும் கடவுளராக போற்றப்படும் விவசாயிகள் கடன் சுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியில் மயங்கி விழுந்தும் இறக்கும் கொடுமை தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதைத் தடுத்து நிறுத்த வேண்டிய முதலமைச்சரும், அமைச்சர்களும் அதை செய்யாமல், தங்கள் பதவிகளை தக்க வைக்க போராடுவது கண்டிக்கத்தக்கது.

காவிரி பாசன மாவட்டங்களில் விவசாயிகளின் தற்கொலைகள் நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு நாளும் உழவர்களின் உயிரிழப்புகள் வழக்கமாகி வருகின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும் காவிரி பாசன மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் 84 உழவர்கள் தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சியிலும் உயிரிழந்திருக்கின்றனர். நேற்று ஒரே நாளில் 10 விவசாயிகள் தற்கொலை செய்தும், அதிர்ச்சியிலும் உயிரிழந்துள்ளனர். நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையிலும், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் குறைந்த எண்ணிக்கையிலும் நடந்து வந்த உயிரிழப்புகள் இப்போது தெற்கில் தூத்துக்குடி மாவட்டம் வரையிலும், வடக்கில் திருவண்ணாமலை மாவட்டம் வரையிலும் நீண்டிருக்கின்றன. திருண்ணாமலை மாவட்டம் செல்லங்குப்பம் கிராமத்தில் மண்ணு என்ற விவசாயி அதிர்ச்சியிலும், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த தேவதானம்பேட்டையில் முருகன் என்பவர் விஷம் குடித்தும் தற்கொலை செய்து கொண்டனர். இருவரும் கடன் வாங்கி பயிரிட்டிருந்த பயிர்கள் கருகியதால் ஏற்பட்ட ஏமாற்றமும், விரக்தியும் தான் அவர்களின் இந்த நிலைக்கு காரணம் ஆகும்.

125 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் காவிரி பிரச்சினைக்கு, கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் இரு திராவிடக் கட்சிகளும் தீர்வு காணத் தவறியதும், சொல்லிக் கொள்ளும்படியாக பாசனத் திட்டங்களை செயல்படுத்தாததும் தான் விவசாயிகளின் உயிரிழப்புக்குக் காரணம் ஆகும். நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி கர்நாடகத்திடமிருந்து காவிரியில் தண்ணீர் பெற்று குறுவை மற்றும் சம்பா சாகுபடியை வெற்றிகரமாக செய்து முடிக்க மத்திய, மாநில அரசுகள் உதவியிருந்தால் உழவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; மாறாக மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள். ஆனால், தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க கர்நாடக அரசு மறுத்து விட்டது. இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு கர்நாடகத்தை எச்சரித்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறக்கும்படி ஆணையிட்டிருக்க வேண்டும். ஆனால், அதை செய்ய மறுத்து விட்ட மத்திய அரசு, கர்நாடகத்திற்கு ஆதரவாக செயல்பட்டது. இதையெல்லாம் செய்வதற்கான அரசியல் அழுத்தம் கொடுக்க தமிழகமும் தவறி விட்டது. இவர்கள் செய்த தவறுகளால் அப்பாவி விவசாயிகள் உயிரிழக்க வேண்டியிருக்கிறது.

இப்போது தான் இப்படி என்றில்லை. கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழகத்தில் விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறது. கடந்த 5 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 2423 விவசாயிகளும், முந்தைய திமுக ஆட்சியில் 3390 உழவர்களும் தற்கொலை செய்து கொண்டனர். கடந்த 5 ஆண்டுகளில் ஓர் ஆண்டு கூட குறுவை சாகுபடி வெற்றிகரமாக செய்யப்படவில்லை. தொடர்ந்து இரு ஆண்டுகளாக சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் வாங்கிய கடனையும் அடைக்க முடியாமல், குடும்ப சுமையையும் தாங்க முடியாமல் உழவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழலில் உழவர்களின் பிரச்சினைகள் என்ன? என்பதை அறிந்து அவர்களின் காயங்களுக்கு மருந்து போடுவதன் மூலம் தான் அவர்களின் உயிரிழப்பைத் தடுக்க முடியும். ஆனால், ஆட்சியாளர்களுக்கு உழவர்களின் துயரங்கள் தெரியவில்லை. மாறாக தங்கள் பதவி நாற்காலிக்கு மேல் தொங்கும் கத்தியிலிருந்து எப்படி தப்புவது என்ற பதற்றத்தில் கால்களை கண்ட இடத்திலெல்லாம் விழுந்து வணங்கி பதவியை காப்பாற்ற கெஞ்சுகின்றனர். மொத்தத்தில் இவர்களை தேர்வு செய்ததற்காக தமிழக மக்கள் வருந்துகின்றனர்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஓரளவாவது உதவி செய்து கைத்தூக்கி விடுவதன் மூலம் தான் அவர்களை காப்பாற்ற முடியும். அதற்காக தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, உச்சவரம்பும், நிபந்தனையும் இல்லாமல் அனைத்து உழவர்களின் பயிர்க்கடனையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வீதமும், நிலமற்ற தொழிலாளர்களுக்கு ஒருமுறை உதவியாக ரூ.25 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும். ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் வேலை வழங்கப்படும் நாட்களின் எண்ணிக்கையை 150 ஆக அதிகரிக்க வேண்டும். அத்துடன், அதிர்ச்சியிலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்த அனைத்து உழவர் குடும்பங்களுக்கும் தலா ரூ.25 லட்சம் இழப்பீடும், அவர்கள் குடும்பத்தில் தகுதியுள்ள ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் வரும் 10-ஆம் தேதி செவ்வாய்க் கிழமை காலை 10.00 மணிக்கு தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும்.
எனது தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி நிர்வாகிகள், தமிழ்நாடு உழவர் பேரியக்கம் உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். காவிரி பாசன மாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு விவசாயிகள் சங்கத்தினரும் பெருமளவில் கலந்து கொள்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.