செல்லா நோட்டு அறிவிப்பு ஒரு மாத நிலவரம்: நடந்தது என்ன? நடக்கப்போவது என்ன?

வில்லவன் இராமதாஸ்

500, 1000 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது பெரிதும் பாதிப்புக்கு உள்ளான சிறிய மளிகைக் கடைகள் தற்காலிக ஏற்பாடாக கடனுக்கு வர்த்தகம் செய்ய ஆரம்பித்தன. அப்போது நான் விசாரித்த கடைக்காரர்கள் கொஞ்சம் கஷ்டம்தான் ஆனாலும் சமளிக்கிறோம் என்றார்கள். இப்போது அந்த ஏற்பாடும் பலனளிக்கவில்லை.

அதே நபர்கள் இப்போது நெருக்கடி அதிகரிப்பதாக புலம்புகிறார்கள். கடன் நிலுவை உயர்வதாகவும் வரவு மிகக்குறைவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். மளிகைப் பொருட்கள் விணியோகிக்கும் மொத்த விற்பனையாளர்களது நெருக்கடியை சமாளிக்கப் போதுமான பணம் கையிருப்பு இல்லை என்கிறார் நாங்கள் கணக்கு வைத்திருக்கும் கடைக்காரர். பொருட்களை குறைவாக வாங்குங்கள் என அவர் தன் வாடிக்கையாளர்களை இப்போது அறிவுறுத்துகிறார். ஆரம்பத்தில் அழுகும் பொருட்கள் விலை குறைந்தது, ஆனால் அதனைக்காட்டிலும் இருப்பு வைக்கவல்ல பொருட்கள் விலை இப்போது உயர்கிறது. கடைகளுக்கு வரத்து குறைந்துவிட்டதாகவும் கடைக்காரர்கள் தெரிவிக்கிறார்கள்.

அரிசி, கொண்டைக்கடலை, கடலை பருப்பு, பொட்டுக்கடலை ஆகியவற்றின் மொத்தவிலை கணிசமாக கூடியிருக்கிறது. விவசாயம் பரவலாக பொய்த்துவிட்டதால் விலையேற்றம் இன்னும் தீவிரமாகும். பல இடங்களில் அறுவடை செய்ய பணமில்லாமல் விவசாயிகள் தவிக்கிறார்கள். பெட்ரோலிய பொருட்களின் விலையேற்றம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை இதனை இன்னும் அதிகரிக்கும்.

வீட்டு வாடகையை வைத்து சமாளிக்கும் மக்கள், சீட்டு கட்டி சேமிப்போர், பால் வியாபாரிகள் அல்லது விணியோகிப்போர் என எல்லோரும் இந்த மாதம் கடுமையாக சிக்கிக்கொண்டிருக்கிறார்கள். எல்லோருக்கும் சக்திக்கு மீறிய நிலுவைத்தொகை வரவேண்டியிருக்கிறது. சீட்டுப் பணம் கொடுக்க முடியவில்லை, அதனால் சீட்டு எடுப்பவர்களுக்கு கொடுக்க பணமில்லை. அதனை கலைப்பதும் சாத்தியமில்லை என பெருங்குழப்பம் அவர்களை ஆட்டுவிக்கிறது. என்னை சுற்றியிருப்போர் எல்லோரும் குறைந்தபட்சம் ஒரு சீட்டேனும் போட்டு சேமிக்கிறவர்கள். தனியார் நிறுவனங்களில் வேலைசெய்வோர் அதிகம் உள்ள பகுதியாகையால் பலர் வாடகை வீடுகளில் வசிக்கிறார்கள், சில வீடுகளில் வாடகை கேட்டு சண்டை ஆரம்பித்துவிட்டது. சிலர் பாதி வாடகைதான் கொடுத்திருக்கிறார்கள்.

வங்கிக் கடன் நிலுவைகளுக்கு அவகாசம் கொடுத்திருப்பதால் நிலைமை கொஞ்சம் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் அவற்றை கட்ட வேண்டிய சூழல் வரும்போது இது ஒரு பெரும் பூதம் என்பதை நாம் புரிந்துகொள்வோம். (பயன்பாட்டு) வாகனக் கடன், வீட்டுக்கடன், தொழிலுக்கு வாங்கிய கடன் என கடன் தவனைகள் பலருக்கும் இருக்கின்றன. வருவாய் இழப்பு அதிகரிக்கப்போகும் ஜனவரியில் கடன் பாக்கி கழுத்தை நெறிக்கும். இந்தியாவில் தற்கொலைகளுக்கான முக்கிய காரணங்களில் கடன் தொல்லையும் ஒன்று என்பதை நாம் கவனத்தில் கொண்டால் இதன் விளைவுகளை அனுமானிக்கலாம்.

அத்தியாவசியமல்லாத தள்ளிப்போடத்தக்க செலவுகளை மக்கள் ஒத்திவைக்கிறார்கள். ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் வருவாயை இழக்கிறார்கள். கட்டுமானம் (அல்லது விரிவாக்கம்), மரவேலை, வீட்டு ஒயரிங் உள்ளிட்ட மராமரத்துப் பணிகள் கைவிடப்படுவது சாமனிய மனிதனுக்கு சமாளிக்கக்கூடியதே, அதனால் அவர்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது. ஆனால் அத்தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளிகளுக்கு அது வாழ்வாதாரப் பிரச்சினை. ஒரு சாதாரண வருவாய் உள்ள மனிதரை நிலைகுலைய வைக்க அவரது முழு சம்பளத்தையும் முடக்க வேண்டியதில்லை, இன்றைய சூழலில் 25% வருமானத்தை பறித்தாலே ஒரு குடும்பத்தை முடக்கிவிட முடியும். ஓரிரு ஆண்டுகள் நீடித்தால் அழித்துவிடவும் முடியும். ஆக, இதன் பாதிப்பு நான்கில் ஒருபங்கு என வைத்துக்கொண்டாலும் அது கொடூரமான விளைவுகளை உருவாக்கும்.

இறுதியாக, பணம் மீதான மக்களின் நம்பகமின்மை எப்படிப்பட்ட விளைவுகளை உருவாக்கும் என்பதை கணிப்பது இயலாத காரியம். சேமிப்பு, முதலீடு, கடன் என பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் எல்லாவற்றின்மீதும் மக்களுக்கு இப்போது நம்பிக்கை இல்லை. வாய்ப்பிருந்தால இன்றைக்கே பெரும்பாலானவர்கள் முழுசேமிப்பையும் எடுத்துவிடுவார்கள். நிச்சயமற்ற சூழல் காரணமாக சிறிய அளவிலான முதலீடுகள் (அதற்கான கடன்), மக்களிடையே இருக்கும் கைமாற்று வாங்கும் (அல்லது கொடுக்கும்) பழக்கம், சேமிப்பு ஆகியவை மிகக் கணிசமான அளவு குறைந்துவிட்டது இன்னும்கூட குறையும். சூழல் காரணமான வர்த்தகத் தேக்கத்தைவிட அச்சம் மற்றும் நம்பிக்கை காரணமான தேக்கம் வித்தியாசமானது. அதனை நம்மால் சுலபமாக மதிப்பிடவோ சரிசெய்யவோ இயலாது.

வங்கிப் பணியில் உள்ளவர்கள் குறிப்பிடும் ஒரு தகவல் முக்கியமானது. குறைந்த அளவு பணம் வைத்திருக்கும் பலரும் தமது இருப்பை முழுவதுமாக எடுத்துவிடுவதாக (கட்டாய குறைந்தபட்ச இருப்பையும் சேர்த்து) தெரிவிக்கிறது அவ்வட்டாரம். சாலையில் பயணிக்கையில் ஒரு ஏ.டி.எம் வாசலருகே பணம் நிரப்பும் வாகனம் நின்றது, உடனே சாலையில் பயணித்தோர் பலர் பயணத்தை நிறுத்திவிட்டு ஏ.டி.எம்மில் குவிந்தார்கள். இப்படி வாய்ப்பிருக்கையில் பணத்தை எடுத்துவிடுவது எனும் எச்சரிக்கை உணர்வை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. ஆகவே சாத்தியப்படும் எல்லா வழிகளிலும் பணத்தை மக்கள் எடுப்பார்கள் என்பது நிச்சயம். இன்னும் பண விணியோகத்தை கட்டுப்படுத்தினால் பணத்தை முடக்கும் இந்த மனோபாவம் தீவிரமாகும் என்பது உறுதி.

தனது தோல்வியை அரசு பல வழிகளில் ஒப்புக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் பணத்தாள் அச்சடிப்பு குறைவாக இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றன, அதிகம் அச்சிட்டால் அது பிடித்து வைத்த பூனையை விடுவிப்பதற்கு சமம் என சால்ஜாப்பு சொல்லியிருக்கிறார்கள். இந்த நெருக்கடி இன்னும் நீண்டநாள் நீடிக்கும் என்பதன் மறைமுக எச்சரிக்கை இது. நிதியமைச்சர் இந்த நடவடிக்கை பணமில்லா வர்த்தகத்தை இலக்காகக் கொண்டே எடுக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்டிருக்கிறார். அதன் பொருள் தீவிரவாத நிதி, கருப்புப் பணம் பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள் என்பதே.

மோடி கேஷ்லெஸ் எக்கானமி பற்றி வகுப்பெடுக்கும் வேலைக்கு தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டார். நகரத்தில் கூலிகளாக இருப்பது விவசாயிகள்தான் என்றும் அதனை மாற்றி கிராமங்களை மேம்படுத்துவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது எனும் புது கதையை குஜராத் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். கருப்பு பண ஒழிப்பு பஜனுக்கு பதிலாக இப்படியொரு புது ஸ்லோகனை வைத்துக்கொள்ள உத்தரவிட்டிருப்பது அவரது பேச்சில் புலப்படுகிறது. ஆரம்பகட்ட வீராவேச வசனங்கள் எல்லாம் மெல்ல அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இன்னமும் புத்தியில்லாத மோடி பக்தர்கள்தான் முக்கி முக்கி முட்டுக்கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆரம்பத்தில் வெறித்தனமாக ஆதரித்த மேட்டுக்குடி பிரபலங்கள் சில நாட்களில், பண மதிப்பிழப்பு ஒரு முதல் கட்ட நடவடிக்கைதான், அதன் தொடர் நடவடிக்கைதான் வெற்றியை தீர்மானிக்கும் என கவனமாக பின்வாங்கிவிட்டார்கள். இது முன்யோசனையின்றி எடுக்கப்பட்ட நடவடிக்கை எனும் அபிப்ராயத்தை அவர்களில் பலரும் பதிவு செய்கிறார்கள்.

எல்லா துறைகளும் குறைந்தபட்சம் 20% வருவாய் இழப்பை சந்தித்திருக்கின்றன. இருசக்கர வாகன உற்பத்தி கடுமையான வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது (சற்றேறக்குறைய 50%). சிமெண்ட் 60% கட்டுமான கம்பி 35% விற்பனை வீழ்ச்சியை பதிவு செய்திருக்கின்றன. தி.நகர் பேரங்காடிகள் பல தமது ஊழியர்களில் பலரை வீட்டுக்கு அனுப்பிவிட்டன. ஓசூரில் உள்ள சிறு நிறுவனங்கள் வேலை குறைப்பை துவங்கிவிட்டன. சிலநாளில் கதவடைப்பு துவங்குவதற்கான அறிகுறிகள் தெரிகின்றது (பழைய ஒப்பந்தங்கள் ரத்தாகின்றன்). எல் அண்ட் டி நிறுவனத்தில் மட்டும் 1 லட்சம்,பேருக்கு வேலையிழப்பு, டி.வி.எஸ் நிறுவனத்தில் பெருமளவு பணிகள் முடக்கம், ரெனோ ஆலையில் 800 பேருக்கு வேலையிழப்பு என பட்டியல் நீள்கிறது.

ஆனால் இதன் தீவிரத்தன்மை பற்றிய புரிதல் அனேகருக்கு இல்லை. உழவர் சந்தையில் இருக்கும் ஒரு தேங்காய் வியாபாரியிடம் பேச்சு கொடுத்தேன். அவருக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் வழக்கமாக அவ்வப்போது ஏற்படும் எதிர்பாராத வியாபார தேக்கத்தைப்போலவே அதனை விளங்கிக்கொண்டிருக்கிறார். அவர் இதன் தொடர் விளைவுகள் பற்றி அறிந்திருக்கவில்லை அல்லது அறிந்துகொள்ள இயலவில்லை. சந்திக்க நேர்ந்த ஊழியர் ஒருவர் பணியாற்றும் உதிரிபாக தொழிற்சாலையில் வேலை குறைந்துவிட்டது. மூன்று ஷிஃப்ட் ஓடிய ஆலையில் இப்போது 2 ஷிஃப்ட்டுக்கள் மட்டுமே இருக்கிறது. ஜனவரியில் இந்த வேலையும் இருக்காது எனும் எச்சரிக்கை அவருக்கு தரப்பட்டிருக்கிறது. அவருக்கு பிரச்சினையின் காரணம் புரிகிறது, ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. தலைவிதி எனுமளவுக்கே இருக்கிறது அவரது புரிதல்.

இவ்விரண்டு பிரிவு அல்லாமல் இன்னொரு குழுவும் இருக்கிறது. என்னுடன் உரையாடிய அசோக் லேலண்ட் நிறுவன ஊழியர் ஒருவருக்கு எந்த கவலையும் இல்லை. காரணம் அவர் நிறுவனத்தில் இப்போது வேலை முழுமையாக இருக்கிறது. அவர் மோடி சொல்லும் சிறு அசவுகர்யம் எனும் பதத்தை முழுமையாக நம்புகிறார். ஒருவேளை நமக்கும் பெரிய பிரச்சினை வருமா எனும் ஐயமே அவருக்கு வரவில்லை. தான் நலமாக இருக்கிறோம் எனும்போது சுற்றத்தைப் பார்த்து அச்சமடைவது அநாவசியம் எனும் செய்தியை அவர் மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்.

சாதாரண மக்களிடையே மூன்று பிரிவுகள் இருக்கின்றன.

என்ன நடக்கிறது என்பதை புரிந்துகொள்ள இயலாதவர்கள்.

நடப்பது புரிந்தும் என்ன செய்வது என்று தெரியாதிருக்கும் மக்கள்.

மோசமாக எதுவும் நடக்கவில்லை என யதார்த்தத்தை ஏற்க மறுக்கும் மக்கள்.

இந்த மூன்று பிரிவுக்குள்தான் ஆகப்பெரும்பாலான மக்கள் அடங்குகிறார்கள். இந்த பொருளாதார பேரழிவின் விளைவுகள் பற்றி கொஞ்சமும் பிரக்ஞையற்ற பெருந்தொகையான மக்கள் குறித்தே நாம் அதிகம் கவலைகொள்ள வேண்டியிருக்கிறது. வங்கி ஊழியர்களிடம் சண்டை போடுவதற்கு மேல் எதையும் செய்யத்தெரியாத மக்கள் கூட்டம் நெருக்கடி முற்றினால் தங்களுக்குள் அடித்துக்கொள்ளுமேயன்றி சரியான இலக்கை நோக்கி போராடுவது கடினம்.

இந்த மக்களுக்கு சரியான தகவல் சொல்ல வேண்டிய ஊடகங்கள் அதிலிருந்து விலகி வரலாற்றின் மிக இழிவான முறையில் செய்திகளை வழங்கிவருகின்றன. இந்த பணத்தாள் நெருக்கடி குறித்த செய்திகள் எல்லாமே வங்கிகள் பணம் வழங்க மறுப்பதாகவே இருக்கிறது. ரிசர்வ் வங்கி அச்சடிக்கும் அளவு அது பகிர்ந்துகொடுக்கும் அளவு, அதில் இருக்கும் கபடத்தனமான பாரபட்சம், மக்களின் தேவைப்பாட்டுக்கும் ரூபாய் நோட்டுக்களின் இருப்புக்கும் இருக்கும் பாரிய இடைவெளி ஆகியவை செய்தியாக ஒளிபரப்பவதில்லை. மாறாக விவாதங்களில் சிலர் சொல்லும் கருத்தாக மட்டுமே அவை பதிவாகிறது. மக்களின் கோபம் வங்கி வளாகத்தை தாண்டாதவாறு அடக்கிவைக்கும் நோக்கத்துடனேயே செய்திகள் வடிவமைக்கப்படுகின்றன. அதற்கான பிரதியுபகாரமாக ஏராளமான கேஷ்லெஸ் எக்கானாமி விளம்பரங்கள் ஊடக முதலாளிகளை குளிர்விக்கின்றன. மனநலம் குன்றிய குழந்தைகளை மோதவிட்டு ரசிக்கும் சாடிஸ்ட் போல நடந்துகொள்கின்றன நமது ஊடகங்கள் (எனக்கு தெரிந்து வணிக பத்திரிக்கைகளின் ஃபிரண்ட்லைன் மட்டுமே நேர்மையாக பதிவு செய்கிறது)

அச்சமூட்டும் இன்னொரு விடயம் ஆளும் பாஜக அரசு. இந்த நடவடிக்கையின் ஆபத்தை பாஜகவினர் பலரும் உணந்திருப்பது தெரிகிறது. மோடி உளறுவதும் ஏனையோர் மெல்ல பொறுப்பில் இருந்து நழுவுவதும் (ஜெட்லியின் பேச்சு) அதனை உறுதிப்படுத்துகின்றது. பாஜக எப்போதும் நெருக்கடிகளை படுகொலைகளை வைத்தே சமாளிக்கும். அதற்கு எண்னற்ற உதாரணங்கள் வரலாற்றில் உண்டு. குஜராத் கலவரம், என்கவுண்டர் கொலைகள், அவர்கள் சிக்கலில் இருக்கையில் நிகழும் தீவிரவாத தாக்குதல்கள், உபியில் தேர்தலுக்காக நடத்தப்பட்ட கலவரங்கள் என பக்கங்கள் போதாத அளவுக்கு பட்டியல் இருக்கிறது. ஆகவே இந்த பிரச்சினையும் பாஜக தனக்கே உரிய கலவர பாணியில் எதிர்கொண்டால் இந்தியா முற்றாக நாசமாகிவிடும்.

சுலபமாக தூண்டிவிடக்கூடிய, அரசியல் அறிவற்ற மக்கள் திரள்…

அவர்களை முட்டாளாகவே வைத்திருக்கிற, அரசை காப்பாற்ற யாரையும் பலியிட தயாராயிருக்கிற ஊடகங்கள்…

கொலைபாதகத்துக்கு அஞ்சாத கட்சியின் ராஜாங்கம் என மூன்று வகையான மரண முற்றுகையில் நாம் சிக்குண்டிருக்கிறோம். குறைந்தபட்சம் இதுகுறித்து மிகத்தீவிரமான மற்றும் நேரடியான பரப்புரைகளை நாம் எல்லோரும் மேற்கொண்டாக வேண்டும். சந்திக்கின்ற பாமர மக்கள், பெண்கள், சக பயணிகள் என எல்லா மட்டத்திலும் இந்த விவாதத்தை முன்னெடுப்பது அவசியம். அருகாமையில் நடக்கும் போராட்டங்களுக்கு ஆதரவளியுங்கள். பாஜக மண்டியிடுவோரை முதலில் அழிக்கும் கும்பல், இங்கே நிமிர்ந்து நின்று எதிர்ப்பது என்பது ஒரு பிழைத்திருக்கும் நுட்பம் (survival technique). வீரனாக இருக்க விரும்பாவிட்டாலும் பிழைப்பவனாக இருக்கவேனும் இதனை எதிர்த்து நிற்பதே வழி.

வில்லவன் இராமதாஸ், சமூக-அரசியல் விமர்சகர். அவருடைய வலைத்தளம் இங்கே..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.