மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கில் பாஜக பிரமுகர்கள் பெருமளவு கலந்துகொண்டனர். ஜெயலலிதா உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்திய பிரதமர் மோடி, ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலாவுக்கு ஆறுதல் கூறினார். தமிழக முதலமைச்சரான பன்னீர்செல்வத்தை கட்டித் தழுவி ஆறுதல் கூறிய பிரதமர் மோடி, எல்லா உதவிகளையும் மத்திய அரசு செய்யும் எனத் தெரிவித்தார். மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு ஜெயலலிதாவின் உடல் அருகே நீண்ட நேரம் இருந்தார். அதிமுக பொதுச்செயலாளரின் இரங்கல் நிகழ்வில் பாஜக பிரமுகர் ஏன் இத்தனை நேரம் காத்திருக்கிறார் என சமூக ஊடகங்களில் இதுகுறித்து விமர்சனங்களும் எழுந்தன.
இந்நிலையில் இது குறித்து தி இந்து (ஆ) நாளிதழுக்கு (டிசம்பர் 8) அளித்த பேட்டியில் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நடந்து முடிந்த சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணிக்காக பேச்சுவார்த்தை நடத்தியபோது, அரசுக்கு சிறிய அளவு எதிர்ப்பு இருக்கும். அப்படியிருக்கும்பட்சத்தில் பாஜக கூட்டணி வைத்தால் சில குழுவினரின் ஓட்டுக்களை பெற முடியாமல் போய்விடும் என ஜெயலலிதா தெரிவித்தார். ஜிஎஸ்டி மசோதாவுக்கு எதிராக இருந்தபோதிலும் நாடாளுமன்ற வாக்கெடுப்பின்போது வெளிநடப்பு செய்து சட்டம் இயற்றப்படுவதற்கு அதிமுக உதவியாக இருக்கும் என்கிற செய்தியை மோடியிடம் தெரிவிக்கும்படி ஜெயலலிதா சொன்னார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கருத்தியல் ரீதியில் அதிமுக தங்களுக்கு நெருக்கமான ஒரு கட்சி என்று தெரிவித்த வெங்கையா நாயுடு, கொள்கை சார்ந்த ஆதரவை அதிமுக தங்களுக்கு தொடர்ந்து அளிக்கும் என்றும் அந்தப் பேட்டியில் கூறியிருக்கிறார்..