ஏன் என்னை பாதித்தான் ‘மாவீரன்கிட்டு’?

சதீஷ் செல்லதுரை

நெல்லையில் கொடியங்குளம் கலவரத்தில் முன் நின்று மொத்த கிராமத்தையும் சூறையாடியது காவல்துறைதான்.. மன்னார்குடி தயவில் நெல்லையில் காவாலித்துறை போட்ட ஆட்டம் மறக்கவோ மன்னிக்கவோ இயலாதது. அந்த வரலாறு மாவீரன் கிட்டுவில் இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆளும் அரசியல்வாதிகளும் காவல்துறையும் ஆதிக்க சாதிகளால் நிறைந்து கிடப்பதை எளிதாக உணரலாம் அனுபவித்தவர்கள். அதனை திரை மொழியில் பதிவு செய்கிறது மாவீரன் கிட்டு.

இன்னிக்கு சொந்த ஊர்ல இஞ்சினியராவும் இன்ன பல அரசு வேலைகளையும் எட்டியிருக்கும் பலர் அன்னைக்கு சீவலப்பேரியை தாண்டி பாளையங்கோட்டைக்கு படிக்க வந்ததும் மணியாச்சி கடந்து தூத்துக்குடிக்கு படிக்க சென்றதும் சாதாரணமானது அல்ல. தோட்டத்துக்கு போன ஒருவனுக்கு வல்லநாட்டில் வெட்டு விழுந்தா பதிலுக்கு சவலாபேரில வெட்டு விழுந்த பின்தான் சீவலப்பேரி அமைதியானது. அடிச்சா திருப்பி அடிப்பாங்கன்னு பயம் வந்தது. ஜான் பாண்டியன் பசுபதி பாண்டியன்கள் கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களாக இருப்பதும் அவர்கள்தான் அன்னைய நாயகர்கள் என்பதும் ஒவ்வொருவனின் வாழ்க்கையும் வலியும் காண்பித்துக்கொடுக்கும் பார்வைகள்.

கிருஷ்ணசாமியும் இந்த திருப்பி அடி பார்முலாவை தடுத்திடவில்லை. செத்துப்போவது நிச்சயமான நிலையில் திருப்பி அடித்த ஒவ்வொரு அடிக்கும் இன்னைக்கு பலனிருக்குது. அரசு ஆதிக்க ஜாதிகளின் கைப்பாவையாக இருக்கும் நிலையில் எமக்கான நீதியை தேடிக்கொண்ட போது கட்டமைக்கப்பட்டதுதான் கலவரம் எனும் வார்த்தை ஆட்டம். திருப்பி அடித்தால் திமிர் என்ற ஒரு சொல்லாடல்.திருப்பி அடித்தால் திமிரான்னு மாவீரன் கிட்டுவில் வசனம் வைக்கப்பட்டுள்ளது சும்மானாச்சும் அல்ல. எதிர்வினைக்கு முந்தைய வினைகளை பேச வேண்டும் என்கிறோம்.

இன்னைக்கும் சமூக அமைப்புகளுக்கு பயந்து மனமிருந்தும் மணம் செய்து கொடுக்காது கொலையும் தற்கொலையும் செய்து தொலைக்கும் சாதிய சமூகத்தை மாவீரன் கிட்டு தொட்டதில் நிஜம் இருக்கிறது. தெரிந்த நாடார் குடும்பத்து பெண் காவல்துறையில் பணி செய்யும் பள்ளனை திருமணம் செய்தமைக்கு அந்தப்பெண்ணின் அக்கா கல்யாணம் செய்து கொடுக்கப்பட்ட வீட்டிலிருந்து பெத்தவங்களுக்கு மிரட்டல் வருகிறது. அவளை வீட்டில் ஏற்றுக்கொண்டால் உங்க மூத்த பொண்ணை நாங்கள் கை விடுவோம் என்று. இரு வருடங்கள் இருக்கலாம் இது நிகழ்ந்து. இதுதான் இன்னைய நிஜம்.அவரவர் தைரியத்துக்கு தக்க வெறிக்கு தக்க ஆணவக்கொலை ,தற்கொலை, ஒதுக்கி வைத்தல் என சாதி பரிபூர்ணமாக சமூகத்தின் வழியாக கட்டிக்காப்பாத்தப்படுகிறது. அப்படி சமூக அந்தஸ்துக்காக ஒரு தந்தை தன் மகளை பணத்தை காட்டி தன்னுடன் அழைத்து செல்ல இயலாத போது கொலை செய்து செல்லும் ஆணவக்கொலையை பதிவு செய்துள்ளது மாவீரன் கிட்டு.

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு கிட்டுவைப்போன்ற படித்த இளைஞன் மகேஷ் (28) சீவலபேரி பகுதிகளில் மணல் திருட்டுக்கு எதிராக மக்களை திரள் செய்தான். பல்வேறு சாதிய கொடுமைகளுக்கு எதிராக படித்தவன் ஒருவன் மக்களை திரட்டவும் அதிகார ஆதிக்க சாதிகள் சலசலத்து போயின.முக்கியமாக மணல் கொள்ளைக்கு எதிராக தூத்துக்குடி கலெக்டர் ஆபிஸ் முன்பு தர்ணா போராட்டம் என அழுத்தம் தந்த போது கொள்ளைக்கு நடவடிக்கை எடுக்க நிர்ப்பந்தமானது கலெக்டர் அலுவலகம்.

ஈனசாதிப்பய ஓவரா துள்ளுறான் வளரவிடக்கூடாது என பர்கிட் மாநகரம் அரசுப்பள்ளி அருகே காதல் கல்யாணம் செய்து சில மாதங்களே ஆன பட்டதாரி மகேஷும் அவருடன் சென்ற மாரிமுத்து என்பவரும் வெட்டி கொலை செய்யப்பட்டார்கள்..

கடந்த லீவில் ஊருக்கு செல்லும்போது மணி மண்டபம் கட்டிக்கொண்டிந்தார்கள் பொது மக்கள்.கிட்டுக்கள் இன்னும் உயிரை தந்துகொண்டே இருக்கின்றனர்.அவர்கள் சமாதியின் மேல் அபார்ட்மெண்டில் எவ்வித பிரக்ஜையுமின்றி ஒரு கூட்டம் மாடர்ன் உலகின் மயக்கத்தில் தன்னை ஒளித்துக்கொண்டு ஓடிக்கொண்டிருக்கிறது.அவர்கள் தங்களை பொதுவில் வெளிப்படுத்த தயங்கு சூழ்நிலையில்தான் தம்மையே அர்ப்பணித்துக்கொண்டிருக்கிறார்கள் பல கிட்டுக்கள். இமானுவேல் சேகரன் வரலாறு இன்னுமொரு உதாரணம்.

காவல்துறையால் படிப்பினை பாதியில் விட்டு இரவானால் வயல்காட்டில் ஓடி ஒளிந்த எத்தனையோ சகோதரர்களின் தியாகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பலர்க்கு இந்தப்பதிவு ஒரு சிறு பாதிப்பை தந்து தனது ஊரினை மக்களை திரும்பிப்பார்த்தால்
நலம்.

விபரம் அறியாமல் கலவரம் செய்பவதாக குற்றம் சாட்டுபவர்களுக்கு கொஞ்சமேனும் நிஜங்கள் புரிய இம்மாதிரியான திரைப்படங்கள் ஆவணம் செய்யட்டும்.சாதிக்கலவரக்கொலைகள் என கடந்து செல்லும் முன் சிந்தியுங்கள்.கேடுகெட்ட சாதீய சமூகத்திற்குள் எதிர் கேள்வி எழுப்பிய ஒருவனின் குரல்வளை சகல ஆதரவோடு குற்ற உணர்ச்சியின்றி நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளது என்பதை உணருங்கள்.

இயக்குனர் சுசீந்திரனுக்கும், குழுவிற்கும், தயாரிப்பாளர் சந்திரசேகர்க்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்… நன்றி!!

சதீஷ் செல்லதுரை, எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.